ஸ்பெயின் நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னைக்கு நேற்று முந்தினம் வந்தது. அதில் வந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது புதுவை மாநிலம் அரோவில் நகர் என்ற முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்த பார்சலில் `பிறந்தநாள் பரிசு உள்ளே இருக்கிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே பார்சலைப் பிரித்து பார்த்தபோது உள்ளே பிறந்த நாள் பரிசு இல்லை. ஆனால் 994 போதை மாத்திரைகளும், 249 ஸ்டாம்ப் வடிவ போதை பொருள்களும் இருந்தன. உடனடியாக பார்சல் அனுப்பப்பட்டிருந்த புதுவை முகவரிக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சென்று விசாரித்தனர்.
அந்த முகவரியில் நெல்லையைச் சேர்ந்த ரூபக் மணிகண்டன் (29), லாய் விகூஸ் (28) என இரண்டு இளைஞர்கள் தங்கியிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இருவரும் ஓவிய கலைஞர்கள் என தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை சுங்கத்துறையினர் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதுகுறித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு வந்த போதை மாத்திரைகள் பார்சல் குறித்தும் மழுப்பலான பதிலைத் தெரிவித்தனர்.
Also Read: திருச்சியில் அதிகரிக்கும் போதை ஊசிப் பழக்கம்; வசமாக மாட்டிக்கொண்ட 7 இளைஞர்கள்!
இதையடுத்து இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள்களை இருவரும் சப்ளை செய்வது தெரியவந்ததது. இதற்காக ஸ்பெயினிலிருந்து பிறந்தநாள் பரிசு என்ற பெயரில் போதை பொருள்களை கூரியர் மூலம் வரவழைத்தது தெரிந்தது. அதனால் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 56 லட்சம் ரூபாயாகும்.
source https://www.vikatan.com/news/crime/chennai-customs-seized-drug-gift-basket-from-spain
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக