Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

அன்று வளர்மதி, இன்று லியோனி; பாடநூல் நிறுவனத் தலைவர் நியமனத்தை எப்படிப் பார்ப்பது?

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றது முதல் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களையும் ஆணையங்களுக்கான புதிய தலைவர்களையும் நியமித்து வருகிறார். அதன்படி தற்போது பாடநூல் கழகத்தின் தலைவராகத் திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்துள்ளார். இதுவரை ஸ்டாலினின் அனைத்து நகர்வுகளையும் எதிர்க்கட்சியினர் உள்பட அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் திண்டுக்கல் ஐ.லியோனியின் நியமனம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் லியோனி நியமனத்தைத் தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளனர். பட்டிமன்ற மேடைகளில், தேர்தல் பரப்புரைகளில் பெண்களை மோசமாகச் சித்திரித்துப் பேசியிருக்கிறார் என்பதும் அவர் மீதான விமர்சனங்களுக்குக் காரணமாக இருக்கிறது. பாடநூல் கழகத் தலைமை என்பது பதிப்பு சார்ந்து மட்டுமல்ல எதிர்காலச் சந்ததியை உருவாக்குவதற்குரிய மிக முக்கியமான கருவி. அதற்கு, வெறும் ஆசிரியர் என்ற தகுதி மட்டுமே போதாது. துறை சார்ந்த அறிவும் பொறுப்பும் மிக முக்கியம் என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

தி.மு.க கூட்டத்தில் உரையாற்றும் லியோனி

அ.தி.மு.க ஆட்சியில் பாடநூல் கழகத் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியை நியமித்தபோது விமர்சித்தவர்கள் தற்போது இந்த விசயத்தில் மவுனம் சாதிப்பது ஏன் எனவும் கேள்வி எழுந்திருக்கிறது. இந்தப் பதவிக்கு உண்மையில் திண்டுக்கல் ஐ.லியோனி பொருத்தமானவர்தானா? அவரது நியமனத்தை எப்படிப் பார்ப்பது?

Also Read: `அம்மா உணவகம் முதல் லியோனி நியமனம் வரை!' ஓ.பி.எஸ்ஸின் அறிக்கைகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம் குறித்துக் கேட்டோம் “தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பா.வளர்மதியை நியமித்தபோது தி.மு.க கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். பொது இடங்களில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசுவதை ஒட்டித்தான் அப்போது தி.மு.க-வினர் அவரது நியமனத்திற்கு எதிராகப் பேசினார்கள். தற்போது தேர்தல் பரப்புரையின்போது பெண்களை உடல்ரீதியாக விமர்சித்தும், பொது மேடைகளில் ஆபாசமாகப் பேசியும், பட்டிமன்றத்தில் பெண்களின் உடல் குறித்து கொச்சையாகக் கருத்துகளைக் கூறியும் வரும் திண்டுக்கல் ஐ.லியோனியை இவர்கள் நியமித்திருக்கிறார்கள். பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதுதான் லியோனியின் வாடிக்கையே. அவரை பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்திருப்பது 'நாங்கள் எல்லாவற்றையும் மாற்றுகிறோம்' என்ற பெயரில் முறையற்ற பாதையில் தி.மு.க சொல்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. 'அவர்கள் உடைத்தால் மண் குடம்... அ.தி.மு.க உடைத்தால் பொன் குடம்' என்கிற ரீதியில்தான் அவர்கள் பேசிவருகிறார்கள். யாரை வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கும் நியமிக்கலாம். அதற்கு அரசிற்கு உரிமை இருக்கிறது. ஆனால், சில பதவிகளுக்கு சமூகப் பொறுப்புள்ளவர்களை நியமிக்க வேண்டியது அரசின் தார்மீகக் கடமை. அப்போதுதான் அந்தப் பதவிக்கும் அழகு. அரசுக்கும் பெருமை. திண்டுக்கல் ஐ.லியோனி நியமனத்தில் தி.மு.க அரசு தவறான பாதையில் சென்றுவிட்டது என்பது வெளிச்சமாகியிருக்கிறது.

வைகைச் செல்வன்

லியோனி ஆசிரியராக இருந்தவர்தான் என்றாலும் அரசியல் மேடைகளில் பொது மேடைகளில் அவரது செயல்பாடுகள், பேச்சுகள் எல்லாம் அறுவெறுக்கத்தக்கதாக இருந்திருக்கின்றன. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களைத்தான் முக்கியமான பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். விமர்சனம் எழுந்தாலே தகுதியற்றவர் ஆகிவிடுகிறார். திண்டுக்கல் லியோனியும் அந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்தான். இவற்றையெல்லாம் கவனத்தில் வைத்து திண்டுக்கல் ஐ.லியோனி நியமனத்தை தி.மு.க அரசு திரும்பப் பெற வேண்டும்” எனத் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கண்ணதாசனிடம் பேசினோம் “பாடநூல் கழகத்தின் தலைவர் நியமனத்தைப் பிறரது விருப்பு வெறுப்பு சார்ந்து உருவாக்க முடியாது. ஒரு துறையை நிர்வகிக்க அந்தத் துறைசார் வல்லுநர்களைத்தான் நியமிக்க வேண்டியதில்லை. திறன் வாய்ந்தவர்களாக இருந்தால் போதும். உதாரணமாகத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியம் மருத்துவர் இல்லை. ஆனால், கொரோனா பெருந்தொற்றை எவ்வளவு திறம்படக் கையாண்டு தமிழகத்தை அதிலிருந்து மீட்டு வெளியே கொண்டுவந்தார். ஏதோ ஒரு சூழலில் நகைச்சுவையாகப் பேசியதை வைத்து லியோனியை எடை போடக்கூடாது. அதைவைத்து லியோனிக்கு தகுதி இருக்கா இல்லையா என அவரது நியமனத்தைக் கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது. தொடர்ந்து அவர் அவ்வாறு பேசினாரா இல்லையா என்பதைக் கவனிக்க வேண்டும். நகைச்சுவைக்காகப் பேசினார். அதன்பின் அவர் வருத்தமும் தெரிவித்துவிட்டார். வளர்மதியோடு லியோனியை ஒப்பிட்டுப் பேசுவதே தவறு. லியோனி பேச்சாளர். குறிப்பாக நகைச்சுவைப் பேச்சாளர். நகைச்சுவைக்காகப் பேசுவாரே தவிரத் திட்டமிட்டு பெண்களை இழிவுபடுத்திப் பேசமாட்டார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆ.ராசா மீது கூடத்தான் இப்படியான புகார்களை வைத்தார்கள். இப்படியே பார்த்தால் எந்தப் பதவிக்கும் யாரையும் நியமிக்க முடியாது.

கண்ணதாசன் தி.மு.க

யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பதைத் தலைமை ஆய்ந்தே அளித்திருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடு, களப்பணியை வைத்தே தகுதியானவர்களுக்குத் தகுதியான பதவிகள் கொடுக்கப்படுகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்படும் விமர்சனங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்துவோம்” என நியமன விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லைதான் என்றாலும் ஒரு பதவிக்குரிய நியமனங்களின்போது கட்சிக்கு அவர் செய்த பங்களிப்பைவிட துறைசார் தகுதி எந்தளவுக்கு இருக்கிறது என்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் அந்தத் துறையின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள அவரால் அவற்றைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதுதான் அனைவரது கருத்தாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-appointment-of-dindigul-i-leoni-as-the-president-of-the-textbook-institute-has-drawn-criticism

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக