Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

நெல்லையப்பர் கோயில்: 17 வருடங்களுக்கு முன்பு அடைக்கப்பட்ட வாசல்கள் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி!

பழைமை வாய்ந்த சைவத் திருத்தலமான நெல்லையப்பர் கோயில், நெல்லையின் அடையாளமாகத் திகழ்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக காந்திமதி சமேத நெல்லையப்பரை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவித்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கோயில்களில் வழிபட தமிழக அரசு அனுமதி வழங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மூடப்பட்டு கிடக்கும் வடக்கு வாசல்

நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா காலத்தின் ஆனித் தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம்.

பிற சிவன் கோயில்களை போலவே பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலிலும் நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. அதன் வழியாகப் பக்தர்கள் வந்து செல்வார்கள். ஆனால், 2004-ம் ஆண்டு வடக்கு வாசல் அருகே நடந்த கொலைச் சம்பவம் காரணமாக பாதுகாப்பு கருதி கிழக்கு வாசல் தவிர பிற வாசல்கள் அடைக்கப்பட்டன.

பாதுகாப்பு குறித்து துணை ஆணையர் ஆய்வு

கோயிலின் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு வாசல்கள் மூடப்பட்டு கடந்த 17 வருடங்களாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் நெல்லையப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வருத்தம் அடைந்தார்கள். கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழா சமயத்தில் மட்டும் மேற்கு மற்றும் வடக்கு கோபுர வாசல்களின் கதவுகள் திறக்கப்பட்டாலும் திருவிழா முடிந்த மறுநொடியே கதவுகள் மீண்டும் மூடப்பட்டு விடும்.

நெல்லையப்பர் கோயிலில் கடந்த வாரம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சார்பாக, கோயிலில் பூட்டிக்கிடக்கும் வாசல்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திறக்கப்பட்ட வாசல் வழியாக வந்த பக்தர்கள்

அதனால் அந்தப் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, கோயிலின் அனைத்து கோபுர வாசல்களையும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவரது உத்தரவைத் தொடர்ந்து கோயிலின் மேற்கு வடக்கு மற்றும் தெற்கு வாசல்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நெல்லையப்பர் கோயிலின் வாசல்கள் இன்று திறக்கப்பட்டதையொட்டி கோயில் யானையான காந்திமதி வரவழைக்கப்பட்டு கஜபூஜை நடத்தப்பட்டது. பின்னர் வாசல் கதவுகளுக்குச் சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டன.

பக்திப் பரவசத்துடன் நுழைந்த பக்தர்கள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலின் நான்கு வாசல்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயிலில் நான்கு வாசல்களும் திறக்கப்படும் நிகழ்வில் செயல் அலுவலர் ராமராஜூ உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். நெல்லையப்பர் கோயில் வந்த அனைத்து பக்தர்களும் கொரனா நடைமுறையைப் பின்பற்றி வழிபட அனுமதிக்கப்பட்டனர்.



source https://www.vikatan.com/news/general-news/nellaiyappar-temple-all-doors-are-opened-today-after-17-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக