Ad

புதன், 14 ஜூலை, 2021

ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத அனுமதி கேட்கும் வேதாந்தா! - கொந்தளிக்கும் போராட்டக் குழுவினர்

தூத்துக்குடியில் ’வேந்தாந்தா’வின் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின் 100வது நாளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக அரசு, ஆலையை சீல் வைத்து மூடியது. தொடர்ந்து, ஆலையை திறக்க நீதிமன்றங்களின் கதவுகளை பலமுறை தட்டியும், ’ஆலையை திறக்ககூடாது’ என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது வருகிறது. இந்நிலையில், தற்போதைய கொரோனா இரண்டாவது அலையாக கோரத் தாண்டவம் ஆடி வந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. பல தனியார் அமைப்புகள் மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வழங்கி வந்தது.

ஸ்டெர்லைட் ஆலை

இந்நிலையில், ’ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருக்கிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என மத்திய, மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியதுடன், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவையும் தாக்கல் செய்தது வேதாந்தா. பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆக்ஸிஜனின் தேவையும் அதிகரித்து வந்ததால், வேதாந்தாவின் நீதிமன்ற முறையீடு கவனம் பெற்றது.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் நடந்தது. ஆட்சியரின் முன்பே ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் மோதிக் கொண்டனர். கல்வீச்சுத் தாக்குதலும் நடந்தது. ”ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க 95 சதவீதம் மக்களின் எதிர்ப்பு உள்ளது” என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டது. இதையடுத்து, அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி யூனிட்

அதில், ’ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் தயாரிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கலாம்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், தமிழக அரசும் அனுமதி அளித்தது. அத்துடன், உச்ச நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதி அளித்ததுடன் 5 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன், 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவும் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஸ்டெர்லைட் போராளிகளின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த மே 5-ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி துவக்கப்பட்டது. ஆலையில் இருந்தது தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, இதுவரை சுமார் 650 டன் மருத்துவ பயன்பாட்டிற்கான திரவ ஆக்ஸிஜனும், 350 டன் வாயு நிலையிலான ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வரும் ஜூலை 31-ம் தேதியுடன், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மேலும் 6 மாதம் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது வேதாந்தா.

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த எதிர்ப்பு போராளிகள்

இதையடுத்து, மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தியைக் காரணம் காட்டி கூடுதல் அவகாசம் கேட்டால் அனுமதி அளிக்கக்கூடாது” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து,ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம், “காற்றையும், மண்ணையும் நச்சாக்கிய இந்த ஆலை, ஆயிரக்கணக்கான மக்கள் போராடியும், 13 பேர் உயிரை பலி கொடுத்த பிறகும்தான் மூடப்பட்டிருக்கு.

‘ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை’ என முந்தைய ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரே கூறி வந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக, மூடிக் கிடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்ததே தவறானது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுத்தது, அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களுக்குச் செய்த பச்சைத் துரோகம். சரி, அனுமதி கொடுத்தது கொடுத்து விட்டார்கள். தற்போது கொரோனா இரண்டாவது அலையின் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாக தற்போதைய ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி வருகிறார். ஆக்ஸிஜன் அதிக தேவையில்லாத தற்போதைய சூழலில், ஆக்ஸிஜன் உற்பத்தியைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் கூடுதலாக 6 மாதம் அனுமதி கேட்டுள்ளது வேதாந்தா நிறுவனம்.

மாவட்ட ஆட்சிரிடம் மனு அளித்த எதிர்ப்பு போராளிகள்

படிப்படியா காப்பர் உற்பத்தியை ஆரம்பிக்கணும்ங்கிறதுதான் அவர்களின் நோக்கம். வரும் ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு எந்தவொரு காரணத்தைக் காட்டியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கக்கூடாது. அப்படி அனுமதி அளித்தால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும். இதே ஆலைக்கு அனுமதி கொடுத்தும், அடிக்கல் நாட்டியதும், துவக்கி வைத்ததும் அதே அரசியல் கட்சிகள்தான். அதற்குப் பிறகு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தினார்கள். தற்போது ஒன்னு சேர்ந்து கொண்டார்கள். கட்சிகளை நம்பியோ, அவர்களின் ஒத்துழைப்புடனோ இந்த ஆலைக்கு எதிராக நாங்கள் போராடவில்லை.

தூத்துக்குடி மக்களின் பாதுகாப்பிற்காக சைக்கிள் பேரணியாகச் சென்று முதல்வரை சந்திக்க இருக்கிறோம். நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, அன்று ஸ்டெர்லைட் ஆலைத் திறப்பை ஆதரித்த தி.மு.க., சி.பி.எம்., உள்ளிட்ட கட்சிகள், இன்று தாமாக முன்வந்து சட்ட ரீதியாகவும், களத்தில் நின்றும் ஸ்டெர்லைட்டை எதிர்க்கப் போகிறார்களா? அல்லது அமைதி காத்து வேதாந்தாவிற்கு விலை போகப் போகிறார்களா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது” என்றார்.

ஸ்டெர்லைட் ஆலைத்தரப்பில் பேசினோம், “கொரோனா தொற்று பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும், மருத்துவ சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் தேவை இருக்கத்தான் செய்கிறது.

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த எதிர்ப்பு போராளிகள்

பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக உதவிடும் வகையில்தான் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வழங்கிட அரசுகளிடமும், நீதிமன்றத்திடமும் அனுமதி கேட்டோம். மிகுந்த சிரமமான சூழலில் மக்களின் சிகிச்சைக்காக உதவும் ஒரு வாய்ப்பாகவே இதை நினைக்கிறோம். ஆக்ஸிஜன் உற்பத்தி மட்டும்தான் எங்களின் இலக்கு. எங்களின் இலக்கான 1,000 மெட்ரிக் டன்னை உற்பத்தியை அடுத்த சில நாட்களில் எட்டி விடுவோம். ஆலையை மீண்டும் திறப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். குறுக்குவழியில்தான் ஆலையை திறக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு கிடையாது” என்றனர்.

Also Read: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஒரே நாளில் கோரிக்கையை ஏற்று பணிநியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி ஆட்சியர்



source https://www.vikatan.com/news/politics/protesters-complaints-against-vedanta-petitions-for-another-6-months-permit-for-oxygen-production

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக