Ad

புதன், 14 ஜூலை, 2021

மனிதனுக்கும் யானைக்கும் இருக்கும் இந்த 20 ஆச்சர்ய ஒற்றுமைகள் தெரியுமா?

நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது யானை; குதிக்கத் தெரியாத விலங்கு யானை; யானைகளுக்கு பிடித்த உணவு வாழைப்பழமும் கரும்பும்... என்றெல்லாம் யானைகளைப் பற்றிய பொதுவான செய்திகள் பலவும் நம் அனைவருக்குமே தெரியும். இவையல்லாமல், யானைகளுக்கு இருக்கும் சிறப்பான குணங்கள், சுவாரஸ்யமான தகவல்களைக்கூட படித்து தெரிந்திருப்போம். ஏன் அதையும் தாண்டி, யானைகளுக்கும் பாகனுக்கும் இடையேயான உறவுகளைப் பற்றியும் பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால், மனிதனைப் போன்றே யானைகளுக்கு இருக்கும் குணாதிசயங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? வாருங்கள் மனிதனுக்கும் யானைகளுக்குமான ஒற்றுமைகள், பொதுவான பண்பு நலன்களைப்பற்றி 20 சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

மனிதனுக்கும் யானைக்கும் இடையே இருக்கும் 20 சுவாரஸ்யமான ஒற்றுமைகள்:

1. மனிதன் முன்பு எப்படி தாய்வழிச் சமூகத்தில் வாழ்ந்திருந்தானோ, அதைப்போலவே இன்றும் யானைகள் தாய்வழிச் சமூகமாகவே வாழ்கின்றன. அந்த வகையில் பெண் யானைகளே கூட்டத்திற்கு தலைமை தாங்குகின்றன. இடம் விட்டு இடம் நகரும்போதும் கூட முதலில் பெண் யானைகளே முன்னால் சென்று வழிகாட்டுகின்றன. அதனைப் பின்தொடர்ந்துதான் மற்ற யானைகளும் செல்கின்றன.

2. நம் குடும்பத்தில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் எப்படி குழந்தைகள் வளரும்வரை கண்டிப்புடன் கட்டுப்பாடுகள் விதித்து வழிகாட்டுகிறார்களோ, யானைக் குடும்பத்திலும் வயதான மூத்த யானைகளே குட்டிகளைக் கண்டிப்புடன் பாதுகாப்பாக வளர்க்கின்றன.

யானைகள்

3. குழந்தைகள் தன் தாயின் கைகளைப் பிடித்து நடப்பதைப் போன்றே, யானைக் குட்டிகளும் தன் தாய் யானையின் வால்களைப் பிடித்து நடக்கின்றன.

4. அதேபோல, ஆறுகள் அல்லது வெள்ளத்தை கடக்கும்போது மனிதன் தன் குழந்தைகளை கைகளிலோ, தோள்களிலோ சுமந்துகொண்டு செல்வதைப்போல, யானைகளும் தங்களின் குட்டிகளைத் தந்தத்தில் வைத்து நீர்நிலைகளைக் கடக்கின்றன.

5. மனிதனைப் போன்று யானைகளிலும் இரட்டையர்கள் உண்டு. மிக அரிதாகவே அவை இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன.

6. பெரும்பாலான வெளிநாடுகளில் பெற்றோர்களே, மேஜரான தங்கள் குழந்தைகளைத் தனியாக வாழ அனுமதிக்கின்றனர். அவர்களுக்கான பிரைவசியைக் கொடுக்கின்றனர். அதைப்போலவே, ஒரு குடும்பமாக வாழும் யானைக்கூட்டத்தில், ஆண் யானை 15 வயதைக் கடந்து பருவமெய்திவிட்டால், அது அந்தக் கூட்டத்தை விட்டு வெளியேறும். அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களால் வெளியேற்றப்படும். அப்படி வெளியேற்றப்படும் இளம் யானைகள் மற்ற இளம் யானைகளுடன் கூட்டமாக வாழும்; சேர்ந்து ஊர்சுற்றும்.

புத்துணர்ச்சி முகாமில் குளிக்கும் யானை

7. யானைகள் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ளும் திறனை கொண்டிருக்கின்றன. மனிதன் கத்தி பேசுவது, குசு குசுவென பேசுவது போன்றே யானைகளும் தங்களுக்குள் செய்திகளைப் பறிமாறிக்கொள்ளும் விதமாக, முனகல்கள் முதல் உரக்க பிளிறுதல் வரை பலவிதமாகப் பேசிக்கொள்கின்றன.

8. ஆண்கள் பருவம் அடையும்போது, அவர்களின் இனப்பெருக்க உறுப்புகள் விரிவடையத் தொடங்கும். டீன் ஏஜ் என்று சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில்தான் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பும் அதிகரிக்கும். அதே போலத்தான் யானைகளும். பெண் யானையுடன் இணை சேரத் துடிக்கும். அந்தக் காலகட்டத்தில் அதன் விதைப்பை 16 மடங்கு வளரும். அரைமணி நேரத்தில் உணர்வுகளைத் தூண்டி, பெண் யானையுடன் உறவு வைத்துக்கொள்ளும். கொஞ்ச காலம் அந்தப் பெண் யானையுடனே ஜோடியாக சுற்றித்திரியும்.

9. மனிதனைப் போன்றே யானைகளுக்கும் கண் இமைகள் உண்டு.

10. மனிதனுக்கு இருப்பது போன்றே யானைகளுக்கும் ஞாபகசக்தி கூடுதலாக இருக்கின்றன. யானைகளிடம் நன்கு பழகிவிட்டு, பத்து இருபது வருடங்கள் கழித்து சென்று அதைச் சந்தித்தாலும், உங்களை அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் உடையது.

யானை

Also Read: யானை - மனித எதிர்கொள்ளலைக் குறைக்க தேனீக்கள்... புதிய முயற்சியை கையிலெடுக்கும் அரசு!

11. நினைவாற்றலைக் கொண்டிருக்கும் அதே வேளையில், மனிதனைப்போல் சிறந்த அறிவாற்றலும் கொண்டிருக்கின்றன. சொல்லிக் கொடுப்பவற்றை எளிதில் புரிந்துகொள்கின்றன. கருவிகள் பயன்படுத்தவும் கற்றுக்கொள்கின்றன.

12. மனிதனைப் போன்றே யானைகளும் தன்னுணர்வு கொண்டிருக்கின்றன. யானைக்கு முன்னால் ஒரு கண்ணாடியை வைத்தால், அது தான்தான் என்பதை அறிந்துகொள்கின்றன.

13. நீண்ட நாள் கழித்து நண்பர்களையோ, உறவினர்களையோ சந்திக்கும்போது, மனிதன் கைக்கொடுத்து வரவேற்கிறான், மகிழ்ச்சியாகப் பேசி அன்பை வெளிப்படுத்துகிறான். அதைப்போலவே, யானைகளும் நீண்ட நாள் கழித்து இன்னொரு யானையை சந்திக்கும்போது தும்பிக்கைகளைக் கொடுத்து பரஸ்பரம் அன்பை பரிமாறிக்கொண்டும், ஒரு விதமான மகிழ்ச்சி கூச்சலும் போடுகின்றன.

14. மனிதர்களில் எப்படி, வலது கை பழக்கம் உடையவர்கள், இடது கை பழக்கம் உடைவர்கள் என இருக்கிறார்களோ அதைப்போலவே யானைகளையும் வகைப்படுத்த முடியும். அதாவது, யானை எந்தப் பக்க தந்தத்தை அதிகம் பயன்படுத்துகின்றதோ அதைப் பொறுத்து நாம் கண்டுபிடிக்கலாம்.

யானை

15. யானைகளும் மனிதனைப் போன்று குரல் அடையாளங்களையும் அறிந்துகொள்கின்றன. குறிப்பாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான குரல் வேறுபாடுகள் தொடங்கி, மொழிகளுக்கு இடையேயான வெறுபாடுகளையும் தெளிவாகத் தெரிந்துகொள்கின்றன. எனவேதான் யானைகளுக்கு பார்வைத் திறனைவிட, செவித் திறன் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

16. யானைகள் இரக்ககுணமும் பெருந்தன்மையும் கொண்டவைகளாகத் திகழ்கின்றன.

17. மனித சமூதாயத்தைப் போன்றே, யானைகளும் தங்கள் கூட்டத்தில் யாருக்கேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அந்த யானைகளை அக்கறையாகப் பார்த்துக்கொள்கின்றன. உணவு, நீர் போன்றவற்றை எடுத்து வந்து ஊட்டிவிடுகின்றன. தும்பிக்கையால் தடவிக்கொடுத்து ஆறுதல் சொல்கின்றன.

யானை

Also Read: தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் யானை பூங்கா; என்ன ஸ்பெஷல்? #SpotVisit

18. மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ச்சிவசப்படும். மன உளைச்சலுக்கு உள்ளாகும். மனிதனைப் போன்றே இதயக்கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் பாதிக்கப்பட்டு உயிரையும் விடுகின்றன.

19. மனிதனின் சராசரி ஆயுட்காலத்தைப் போலவே, யானைகளின் வாழ்நாளும் சராசரியாக 50 - 70 ஆண்டுகளைக் கொண்டிருக்கின்றன.

உயிரிழந்த யானை

Also Read: ̀ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!' - வனத்துறையை பின்வாங்க வைத்த `பாகுபலி' யானை

20. மனிதன் தன்னுடைய உறவினர்கள் யாரேனும் இறந்துவிட்டால், எப்படி இறுதிச்சடங்குகள் செய்வானோ, அதைப்போலவே யானைக்கூட்டத்திலும் ஏதாவது ஒரு யானை இறந்துவிட்டால் கூட்டமாக வந்து அழும். மற்ற யானைகள் ஒன்றுசேர்ந்து இறந்த யானைக்கு அஞ்சலி செலுத்தும். அதைப்போல, தவறுதலாக ஒரு யானையின் எலும்புக்கூட்டை கண்டால், அதை எடுத்து புதைக்கும் அல்லது உருத்தெரியாமல் சிதைக்கும். மனிதன் எப்படி மனிதநேயப்பற்று கொண்டிருக்கின்றானோ, அப்படி யானைகளும் தங்களது குடும்ப மற்றும் இனப்பற்றைப் பேணுகின்றன.



source https://www.vikatan.com/living-things/animals/20-interesting-similarities-between-man-and-elephant

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக