சென்னை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்ப்பாக்கம் ஆராஅமுதன் கார்டனில் உள்ள செல்வா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தில் அதிரடியாக போலீஸார் சோதனை செய்தனர். அப்போது கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் ஏற்றுமதி செய்வதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்தின் மேல் மாடியில் மரக்கலை பொருள்களுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு உலோக அம்மன் சிலை, இரண்டு அம்மன் கற்சிலைகள், ஒரு கிருஷ்ணர் ஓவியம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சுப்பிரமணியன் (58) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர் அபய்குமார் சிங் கூறுகையில், ``சென்னையில் சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சுப்பிரமணியனை கைது செய்திருக்கிறோம். சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார் குறிச்சியில் உள்ள நரசிம்ம நாதர் கோயிலில் 1985-ம் அண்டு 5 சிலைகள் திருடப்பட்டன. இந்த வழக்கில் இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைப்போல தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, விக்கரபாண்டியம் எல்லைக்குட்பட்ட விஸ்வநாதர் கோயிலில் திருடப்பட்ட ஆறு சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த சிலைகளையும் தமிழகத்துக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read: `116 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலைகள்!’ - தஞ்சையில் மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீரசோழபுரம் நாரேஸ்வரர் சிவன் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சிலைகள் தடய அறிவியல் துறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்தச் சிலைகளும் அமெரிக்காவில் உள்ளன. அவைகளையும் தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் உடையார்பாளையம் காவல் நிலைய வழக்கு, கும்பகோணம் நீதிமன்றத்திலிருந்து அமெரிக்காவில் உள்ள மேத்யூ என்ற சாட்சியை விசாரணை செய்யப்பட்டது. அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் கடந்த 2020-ம் ஆண்டு 2021-ம் ஆண்டுகளில் தற்போது வரை 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 40 சிலைகள் மீட்கப்பட்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 74 தொன்மை வாய்ந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பாண்டிச்சேரியில் ஜீன்பால் ராஜரத்தினம் என்பவரிடமிருந்து மீட்டது. இந்த 74 சிலைகளில் 60 சிலைகள் உலோகத்தாலும் 14 சிலைகள் கற்சிலைகளாகும்" என்றார். சிறப்பாக செயல்பட்ட சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரை டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி அபய்குமார் சிங் ஆகியோர் பாராட்டினர்.
source https://www.vikatan.com/news/crime/in-chennai-police-arrested-one-person-who-tried-to-export-god-statue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக