2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையான கட்சியாக தி.மு.க வெற்றிபெற்று ஒரு மாதம் முடிந்த இந்நாளில் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள். ஏழாம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், கடந்த வாரங்களில் தன் செயல்பாடுகளுக்கு நல்ல பெயரையே எடுத்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கும் உடனடியாக செவிமடுக்கிறார். இந்தநிலையில், ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் செயல்பாடுகளுக்கும் தற்போது முதல்முறை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினின் செயல்பாடுகளுக்கும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்...
ப்ரியன் (மூத்த பத்திரிகையாளர்)
``கலைஞர் 49 வயதிலேயே முதல்வராகிவிட்டார். ஆனால், ஸ்டாலின் 69 வயதில் அனுபவம் வாய்ந்தவராக இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார். மாபெரும் ஆளுமையான அண்ணாவுக்குப் பிறகு, நெடுஞ்செழியன் போன்ற பெரிய தலைமைகளை மீறி கருணாநிதி முதல்வரானதால், முதல் இரண்டு வருடங்கள் (69-71) வரை எந்தவித பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அமைதியாக இருந்தார். ஸ்டாலினைப் பொறுத்தவரை மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக என நிர்வாக ரீதியாக பல அனுபவங்களுடனும் பக்குவப்பட்டும் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார். கட்சியிலும் அவருக்குப் போட்டி என யாரும் இல்லை. முதல்வராவதற்கு முன்பாக கருணாநிதிக்குக் கிடைக்காத நிர்வாக ரீதியான அனுபவம் ஸ்டாலினுக்கு இருக்கிறது. அவருக்குக் கூடுதல் பலம். அதேபோல, கருணாநிதி முதல்வராக இருந்தபோது கூடவே இருந்து பல விஷயங்களையும் ஸ்டாலின் கற்றுக்கொண்டிருக்கிறார். கச்சத்தீவு உள்ளிட்ட முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது கருணாநிதியின் வழக்கம். ஸ்டாலினும் அதே அணுகுமுறையைக் கையாள்வதைப் பார்க்கிறோம்.
கருணாநிதி எந்த விஷயத்துக்குக் கோபப்படுவார், எந்த விஷயத்துக்குப் பாராட்டுவார் என கூட இருந்த கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கும் சரி, அரசு அதிகாரிகளுக்கும் சரி தெரியும். அவர் எண்ணவோட்டத்தை எளிதில் யூகிக்கமுடியும். ஆனால், ஸ்டாலினை அப்படிக் கணிக்க முடிவதில்லை. அவர் எப்போது என்ன முடிவெடுப்பார், எதற்கு எப்படி ரியாக்ட் செய்வார் என கணிக்க முடியவில்லை. இது ஸ்டாலினுக்குக் கூடுதல் பலம் என்றே நான் நினைக்கிறேன். முடிவெடுக்கும் விஷயத்தில், கருணாநிதியைவிட சற்று அழுத்தமான நபராகத்தான் ஸ்டாலினை நான் பார்க்கிறேன்.
கருணாநிதியை அதிகாரிகள் அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது. ஸ்டாலின் விஷயத்திலும் அப்படித்தான் என்றே நான் நினைக்கிறேன். கருணாநிதி ஒருவர் மீது கோபமாக இருக்கிறார் என்றால், அவரைப் பார்த்தவுடனே ரியாக்ட் செய்துவிடுவார். அதனால், சம்பந்தப்பட்டவர்கள், கருணாநிதி திட்டுவார் எனத் தெரிந்தே அவரைப் பார்க்கப் போவார்கள். ஆனால், அந்தக் கோபம் சில நாள்கள்தான் இருக்கும். உடனடியாக மன்னித்துவிடுவார். ஆனால், ஸ்டாலின் யாரையும் அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க மாட்டார். எளிதாக சமாதானம் அடையமாட்டார். அதனால் சீனியர் நிர்வாகிகளுக்கே ஸ்டாலினை டீல் செய்வதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. அதேவேளை, அனைத்துத் தரப்பையும் கலந்தாலோசிக்க வேண்டும், எதிர்தரப்பினரையும் அரவணைத்துச் செல்லவேண்டும், மாற்றுக் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை மதிக்கவேண்டும் போன்ற விஷயங்களில் கிட்டத்தட்ட கருணாநிதியைப் போலவே ஸ்டாலினும் நடந்துகொள்கிறார். கொரோனாவைச் சமாளிப்பதில், கடந்த கால அனுபவம் ஸ்டாலினுக்குக் கைகொடுப்பதாகப் பார்க்கிறோம். ஆனாலும், கருணாநிதி அளவுக்கு ஸ்டாலின் நிர்வாக ரீதியான திறன் படைத்தவரா என்பது இனிவரும் காலங்களில்தான் தெரியும்.''
ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)
''காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் என ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. அண்ணா பொதுத்தள அரசியலை மேற்கொண்டார். கருணாநிதி முதல்வரான பிறகு, தனக்கென ஒரு பாணியைக் கடைபிடித்தார். பட்டியல் சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டு 16-லிருந்து 18 ஆக அதிகரித்தார். சட்டநாதன் கமிஷன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையும் 25-லிருந்து 31-ஆக அதிகரித்தார். கருணாநிதி வெற்றிபெற்று வந்தால், ஐந்து வருடம் முழுமையாக ஆட்சி இருந்தால் போதும் என நினைப்பார். ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்தார்கள் நமக்காக வாக்களிக்கவில்லை என வாக்களித்த மக்களையே பிரித்துப் பார்க்கும் மனநிலை அவருக்கு இருந்தது. ஆனால், ஸ்டாலின், வாக்களித்த மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும், 2026-ம் ஆண்டிலும் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறார். மந்திரி சபையிலும் அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என நினைக்கிறார்.
கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா எனும் மாபெரும் தலைவர் இருந்தார். ஆனால், ஸ்டாலினுக்கு எதிராக மிகப்பெரிய தலைவர்கள் யாரும் இல்லை. இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இரட்டைத் தலைமையாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களை தனக்கு இணையானவர்களாக ஸ்டாலின் நினைக்கவில்லை. தி.மு.க Vs அ.தி.மு.க என என்பதற்குப் பதிலாக, ஸ்டாலின் Vs மற்றவர்கள் என அரசியல் களத்தை கட்டமைக்க நினைக்கிறார். கருணாநிதியிடம் இருந்து ஸ்டாலினின் அணுகுமுறையில் மாற்றங்கள் தெரிகின்றன. ஸ்டாலினின் பாணி, 1954-57 காமாராஜர் பாணியைப் போல் தெரிகிறது. தேர்தல் வெற்றியிலும், உள்கட்சி அரசியல் வெற்றியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் ஸ்டாலின் கருணாநிதியைவிட ஒருபடி மேலேதான் இருக்கிறார்.''
ராதாகிருஷ்ணன் (மூத்த பத்திரிகையாளர்)
'' கலைஞர் இது போன்ற ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அதிகாரத்துக்கு வந்ததில்லை. ஆனால், ஸ்டாலின் பெருந்தொற்றுக் காலத்தில் முதல்வர் பதவியேற்றிருக்கிறார். 'ஆலோசனைக்கு அமைச்சர்கள், செயல்படுத்த அதிகாரிகள்' என கலைஞர் கடைபிடித்த அதே பாணியைத்தான் ஸ்டாலினும் கடைபிடிக்கிறார். ஆனால், ஸ்டாலினிடம் வேகம் பயங்கரமாக இருக்கிறது. கலைஞர் துறை சார்ந்த அமைச்சர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் மட்டுமல்லாது அதற்குச் சம்பந்தமில்லாத ஆள்களிடம் கூட ஆலோசனை செய்வார். அவர்களைப் பேசவிட்டு தனக்கான விஷயங்களை எடுத்துக்கொள்வார். ஆனால், ஸ்டாலின் குறிப்பிட்ட பிரச்னைகளைப் பொறுத்து (Issue based) அந்தந்த துறை சார்ந்தவர்களை, பகுதி சார்ந்தவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
உதாரணமாக, ஸ்டெர்லைட் விவகாரத்தில், கனிமொழி, கீதாஜீவன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளச் செய்ததைச் சொல்லலாம். இந்த விஷயத்தில் கலைஞரின் அணுகுமுறையே சிறந்தது. தன் சிந்தனைக்கு வராத விஷயங்கள் மற்றவர்களின் மூலமாகக் கிடைக்குமா எனப் பலரிடமும் கலந்தாலோசிப்பார். ஆனால், ஸ்டாலினிடம் அந்த அணுகுமுறை இல்லையென நினைக்கிறேன். அதேவேளை, பொறுப்புணர்வோடு நடந்துகொள்வதில் கலைஞரைவிட ஒருபடி மேலாகவே ஸ்டாலின் நடந்து கொள்கிறார். கலைஞரிடம் ஒரு பிரச்னையைச் சொன்னால், கண்டிப்பாக அதுகுறித்து விசாரித்து அதைச் சரிசெய்துவிடுவார். இந்த ஆட்சியில் மக்கள் ஒருகுறையைச் சொன்னால், சில மணி நேரங்களிலேயே அது சரிசெய்யப்படுகிறது. அது வரவேற்கத்தக்கது. அதேபோல, கலைஞர் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டால், அதைச் சரியாகச் செய்கிறார்களா எனத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பார். யாரையும் நம்ப மாட்டார்.
Also Read: தமிழக முதல்வராகிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு..! - வாசகர் வாய்ஸ் #MyVikatan
ஆனால், ஸ்டாலின் ஒருவரை அவ்வளவு எளிதில் நம்பமாட்டார். நம்பிவிட்டால், பொறுப்பை முழுமையாக ஒப்படைத்துவிட்டு கண்டுகொள்ள மாட்டார். ரிசல்ட் சரியாக வராத பட்சத்தில் மட்டுமே கடுமையாகக் கண்டிப்பார். அவர்கள் மீதான நம்பிக்கையையும் கைவிட்டுவிடுவார். முன்பெல்லாம் தனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அப்படியே கட் செய்துவிடும், பழக்கம் ஸ்டாலினுக்கு இருந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக அதில் பல மாற்றங்கள் தெரிகின்றன. தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்களைக் கூட அரவணைத்துச் செல்லவேண்டும் என அவர் தற்போது நினைக்கிறார்.
கலைஞர் எப்போதும் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதில் தயக்கமே காட்டமாட்டார். ஸ்டாலினிடம் அந்தத் தயக்கம் முன்பு இருந்தது. ஆனால், முதலமைச்சர் ஆனபிறகு ஸ்டாலினிடம் அந்தப் போக்கு மாறியிருக்கிறது. துணிச்சலாக பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். கேள்விகளுக்கு தன்னால் முடிந்தவரை பதில் சொல்கிறார்.''
source https://www.vikatan.com/government-and-politics/politics/chief-minister-karunanidhi-vs-stalin-similarities-and-differences
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக