Ad

செவ்வாய், 1 ஜூன், 2021

முதல்வர் ஸ்டாலின் கோவை விசிட்... நடவடிக்கையா, நாடகமா? - விமர்சனங்களும் விளக்கமும்!

கொரோனா பாதிப்பில், சென்னையைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ள கோவைக்கு வருகைத்தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர் எதிர்க்கட்சிகள். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, கொரோனா பணிகளை முடுக்கிவிடச் சென்ற முதல்வர், நேரடியாக கொரொனா வார்டுக்குள்ளேயே பாதுகாப்பு கவச உடையணிந்து சென்றார். அங்கு நோயாளிகள் மற்றும் சிகிச்சையளித்துவரும் மருத்துவப் பணியாளர்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டது தலைப்புச் செய்தியாகி #WeStandWithStalin என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது.

பா.ஜ.க ஐ.டி விங் ட்வீட்

கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்வதும், மாநில முதலமைச்சர் கொரோனா வார்டுக்குள் சென்று ரிஸ்க் எடுத்திருப்பதும் பல்வேறு அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது.

GoBackStalin ட்ரெண்டிங் குறித்த செய்தியை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க -வின் ஐ.டி விங், `மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கோவையை புறக்கணித்து வருகிறது. எனவே முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோபேக் ஸ்டாலின் என கோவை மக்கள் தேசிய அளவில் ட்ரெண்டிங் செய்துள்ளனர். தனது சொந்த மாநிலத்திலேயே திரும்பிச் செல்லுமாறு தமிழக முதல்வரை மக்கள் கேட்டுக்கொண்டுள்ளது எல்லாம் கர்ம வினை!' என குறிப்பிட்டுள்ளது.

பா.ஜ.க-வின் இந்த கருத்துக்குப் பதிலடியாக ட்விட்டரில் தன் ஆதங்கத்தை வெளியிட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, `இந்த நெருக்கடியான கொரோனா தொற்றுக் காலத்தில், உருப்படியாக ஒன்றும் செய்யாமல், கோபேக் ஸ்டாலின் என்று பிரசாரம் செய்யும் பா.ஜ.க-வினரே... இதோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே.... பிரதமர் நரேந்திர மோடி எங்கே?' என கொரோனா கவச உடையிலான முதல்வரது விசிட் படங்களையும் பதிவிட்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஜோதிமணி ட்வீட்

இதற்கிடையே, முதல்வரின் கோவை விசிட்டைப் பாராட்டி கருத்துகளை வெளியிட்டுவரும் நடுநிலையாளர்களும்கூட ``கொரோனா வார்டுக்குள் முதல்வர் நேரடியாக விசிட் செய்திருப்பது, வரவேற்கத்தக்கது அல்ல. நோயாளிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்வகையில் முதல்வரது செய்கை அமைந்திருந்தாலும்கூட, பேரிடர் காலத்தில் தமிழக மக்கள் அனைவரையும் காக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதல்வருக்கு உண்டு!'' என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், 'கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாக செத்துவிழுகிற இந்த நேரத்திலும்கூட, தனிப்பட்ட தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ள ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்துவரும் அரசியல் கட்சியினர், இனியாவது மனிதாபிமானத்தோடு அப்பாவி மக்களின் உயிரைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்!'' என்றும் அறிவுறுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில், கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையிலான முதல்வரது விசிட் எந்தளவு பலனைத் தந்துள்ளது என்ற கள நிலவரத்தைத் தெரிந்துகொள்ள அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் கோவை சத்யனிடம் பேசினோம்... ``பி.பி.இ கிட் போட்டுக்கொண்டு கொரோனா வார்டுக்குள் ஒரு முதல்வர் எட்டிப் பார்த்ததெல்லாம் ஒரு சாதனையா... இதனால் கொரோனா போய்விடுமா? கோவை மாவட்டத்தில், கொரோனாவை ஒழிப்பதற்கும் உயிரிழப்புகளிலிருந்து மக்களைக் காப்பதற்கும் முதல்வரது இந்த விசிட் எந்தளவு பயனளித்திருக்கிறது... ஆக்கபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

கோவை சத்யன்

என்னுடைய தனிப்பட்ட அனுபவம் ஒன்றைச் சொல்கிறேனே... எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் கொரொனா சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 23-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 25-ம் தேதி குறிப்பிட்ட மருந்து கம்பெனியிடமிருந்து ரெம்டெசிவர் வாங்கிவந்தால்தான் காப்பாற்ற முடியும் என்றனர். 'அரசே, ரெம்டெசிவர் மருந்தை அளிக்கிறதுதானே...' என்று பெண்மணியின் மகன் விவரம் கேட்கிறார். கோபப்பட்ட மருத்துவமனை, அந்தப் பெண்மணியை வேறு மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லிவிட்டது.

ஆனால், வேறு மருத்துவமனையிலோ படுக்கை வசதி இல்லாமல் போகவே, மறுபடியும் அதே பழைய மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். 26-ம் தேதி, ரெம்டெசிவர் மருந்தும் அந்தப் பெண்மணிக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், அன்று இரவே அந்தப் பெண்மணி இறந்தும்போனார்.

இதற்கிடையே, தனியார் மருத்துவமனை செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக அரசு நியமித்துள்ள ஜாயின்ட் டைரக்டரிடம், அந்தப் பெண்மணிக்கு ஐ.சி.யூ படுக்கை வசதி ஏற்பாடு செய்துதருமாறு ஏற்கெனவே நான் போனில் கேட்டிருந்தேன். ஆனால், கடைசிவரை எந்த உதவியுமே கிடைக்கவில்லை. இதுதான் கோவை மாவட்டம் முழுக்கவே நிலைமை. அதனால்தான் கோவை மாவட்டம் முழுக்க மயானத்தில்கூட இடம் கிடைப்பது இல்லை. என் சொந்த பெரியப்பா, வயது முதுமையால் இறந்துபோனார். அவருக்கும்கூட மயானத்தில் இடம் கிடைக்காமல் ரொம்ப சிரமப்பட்டோம். இறந்துபோனவர்களை எத்தனை நாள்தான் வீட்டில் வைத்துக்கொண்டிருக்க முடியும்?

மு.க.ஸ்டாலின்

கொரோனா முதல் அலையின்போது, பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் அனைவரையும் பரிசோதித்து சிகிச்சை அளித்தது அ.தி.மு.க அரசு. ஆனால், இப்போது அப்படியில்லை. எனவே, ஒட்டுமொத்தக் குடும்பமுமே பாதிக்கப்பட்டு இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது.

கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்லும் விசேஷ வசதிகொண்ட ஆம்புலன்ஸ்கள் இங்கு இல்லை. போதுமான எண்ணிக்கையில் வெண்டிலேட்டர் வசதி இல்லை.

சிங்காநல்லூரில், மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுத்த எம்.எல்.ஏ-விடம், 'நீங்கள் எப்படி கொடுக்கலாம்...' என வாக்குவாதம் செய்து கைகலப்புவரை கொண்டுசென்றுவிட்டனர். இதுமட்டுமல்ல, மக்களுக்கு காய்கறி விநியோகம் செய்கிற வண்டிகளுக்கான டோக்கன் கொடுப்பதில் ஆரம்பித்து, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான டோக்கன் வரை அனைத்துமே தி.மு.க-வினரின் கட்டுப்பாட்டில்தான் இருந்துவருகிறது. ஒட்டுமொத்தத்தில், கோவை மாவட்ட கள நிலவரம் ரொம்ப மோசமாக இருக்கிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, வெறுமனே நாடகம் நடத்திவிட்டுப் போகிறார்!'' என்றார் காரமாக.

தி.மு.க தகவல் தொடர்பு அணியின் மாநில ஆலோசகரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனிடம் அ.தி.மு.க தரப்பினரது குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டுப் பேசினோம்... ``கோவையில் தமிழக முதல்வர் கவச உடையுடன் கொரோனோ வார்டுக்குள் சென்றது இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த நிகழ்வு. 68 வயதில் ஒரு முதலமைச்சர் ஏன் இந்த ரிஸ்க்கை எடுக்கிறார்? 'முதல்வர் நம்மோடு இருக்கிறார்' என்ற தார்மீக பலத்தை மருத்துவர்களுக்கு அளிக்கவும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உளவியல் ரீதியாக ஒரு வலிமையைத்தரவும் முதல்வர் இந்த மகத்தான செயலைச் செய்தார். இது அவருக்கு புதிதுமல்ல.

மனுஷ்யபுத்திரன்

பல்வேறு இயற்கைப்பேரிடர் காலங்களில் அவர் எவ்வாறு களத்தில் இறங்கி வழிகாட்டியாக நின்று வழிநடத்திச் சென்றார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. இதை விளம்பரம் என்பவர்கள் வாழ்நாள் முழுக்க விளம்பரத்திற்காகவே தங்கள் வாழ்க்கையைச் செலவிட்டவர்கள்தான். எமெர்ஜென்சி கொடுமைகளை அனுபவித்ததில் ஆரம்பித்து 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எண்ணற்ற பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து வந்திருக்கும் ஒரு தலைவரைப்பற்றி பேசுவதற்குக்கூட இவர்களுக்குத் தகுதி கிடையாது.

கொரோனோ காலத்தை வெகு சிறப்பாக எதிர்கொண்டுவரும் ஓர் ஆட்சியை அ.தி.மு.க, பா.ஜ.க என இந்த 2 கட்சியினருமே குறுகிய மனப்பான்மையுடன் பொய்களால் விமர்சிக்க முற்படுகின்றனர். எல்லோருடனும் இணைந்துதான் நாங்கள் இந்தக் கொடுந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட விரும்புகிறோம். ஆனால், அரசியல் வெறுப்பைத்தவிர எதிர்க்கட்சிகளிடம் எதுவும் இல்லை.

கோவிட் மருத்துவமனைக்கு, முதல்வரே நேரில் செல்லும்போது மொத்த நிர்வாகமும் நூறு சதவிகித செயல்திறனுக்கு வருகிறது. தமிழகம் முழுக்க எந்த நேரமும் அமைச்சர்கள் மருத்துவமனைகளில் ஆய்வு செய்வார்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வார்டில் முதல்வர் விசிட்

இந்த மூன்று வாரத்தில் மூன்று மாதத்திற்கான வேலையை தி.மு.க அரசு செய்துமுடித்திருக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையே இல்லாத மாநிலம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம். ரெம்டெசிவர் மருந்து பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. மூன்று வாரங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய படுக்கைகளை உருவாக்கியிருக்கிறோம். அதில் பாதி ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள்.

கொரோனா நோய்த்தடுப்பில் மிகவும் பாராட்டப்பட்ட கேரளத்திலேயே, இரண்டாம் அலையில் பாதிக்கபட்டோர் என்ணிக்கை தினசரி 43 ஆயிரத்துக்குச் சென்றது. கர்நாடகாவிலோ தினசரி பாதிப்பு 50 ஆயிரம். ஆனால், தமிழ்நாட்டில் அதை 36 ஆயிரத்தோடு தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல... இப்போது முப்பதாயிரமாக குறைத்திருக்கிறோம். அடுத்த வாரத்தில் தொற்று இன்னும் பெருமளவு குறையும், சென்னையில் தினசரி பாதிப்பு 7 ஆயிரம் என்ற அளவில் இருந்ததை 2 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கு கொண்டு வந்திருக்கிறோம். இவ்வளவு வேகமாக இந்தியாவில் எந்த அரசும் கொரோனாத் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததில்லை.

Also Read: நளினி, முருகன் பரோலுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை மறுப்பு - காரணம் என்ன?

கோவை புறக்கணிக்கப்படுகிறது என்பது பச்சைப்பொய். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவை தொழிலாளர் நெருக்கம் அதிகம் உள்ள இடம். தொழிலாளர்கள் மத்தியில்தான் நோய்த்தொற்று அதிகம் காணப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பிற மாநில மக்கள் அதிகம் வரக்கூடிய பகுதி கோவை. மே 7-ம்தேதி வரை தொழிற்சாலைகள் முழுமையாக செயல்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற்ற வாக்குப்பதிவுக்கும் மே 2-ம் தேதி வாக்கு என்ணிக்கைக்கும் இடைப்பட்ட நாட்களில்தான் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிக்கொண்டிருந்தது. ஆனால், அப்போது ஆட்சிப் பொறுப்பிலிருந்த அ.தி.மு.க அரசு, நோய்க்கட்டுப்பாடு பணிகளிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டது. அப்போதைய முதலமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இப்போது இவ்வளவு வேலைகளை குறுகிய காலத்தில் செய்திருக்கும் எங்களை வெட்கமே இல்லாமல் குற்றம் சாட்டுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

சென்ற ஆண்டு முதலாம் அலை வந்தபோது தினசரி நோய்த்தொற்று 5,000, 6,000 ஆயிரம் என்ற நிலையில் இருக்கும்போதே அதை சமாளிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி எப்படி திணறினார் என்று எல்லோருக்கும் தெரியும். படுக்கைகளுக்காக மக்கள் திண்டாடிய அவலம், பரிசோதனை மற்றும் கொரோனா மரண எண்ணிக்கையில் மோசடி, கொரோனா உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் - குளறுபடிகள் என இருண்ட கால ஆட்சியைத்தான் அ.தி.மு.க நடத்தியது. அன்று இருந்ததைவிட 10 மடங்கு உக்கிரத்துடன் இன்று கொரோனா 2-ம் அலை பரவிக்கொண்டிருக்கையிலும் அதை நாங்கள் மிக வெற்றிகரமாக கையாண்டு வருகிறோம்.

இதில் கோவைக்கு பாரபட்சம் என பொய்குற்றம் சாட்டும் பா.ஜ.க-வினருக்கு `கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் விஷயத்தில், மத்திய அரசு ஏன் தமிழகத்தை வஞ்சிக்கிறது...' என்பதைக் கேட்க துப்பிருக்கிறதா? தமிழகம் அளவே மக்கள் தொகைகொண்ட வட மாநிலங்களுக்கு ஒன்றே கால் கோடி தடுப்பூசிகளைக் கொடுத்துவிட்டு தமிழநாட்டுக்கு வெறும் 65 லட்சம் தடுப்பூசிகளை மட்டும் கொடுக்கும் மத்திய அரசிடம் போய் 'ஊசிகளைக் கொடுங்கள்...' என்று கேட்க வேண்டியதுதானே?

Also Read: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு - புகாரளித்த நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை

கோவைக்கு வந்த முதல்வர் மருத்துவமனைக்கு கொரோனா பாதுகாப்பு உடைகளுடன் சென்றது மட்டுமல்ல, அங்கு நேற்று 50 கார் ஆம்புலன்ஸ் வசதிகளையும் தொடங்கி வைத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 300 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட 'கொரோனா சிறப்பு பிரிவை' பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற உள்ள தற்காலிக டாக்டர்கள் 5 பேர், தற்காலிக நர்ஸ்கள் 5 பேர் என மொத்தம் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து அதே வளாகத்தில் ரோட்டரி சங்கங்கள் சார்பில் 14 கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 401 படுக்கைகளுடன் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்தின் வரைபடங்களை முதல்வர் பார்வையிட்டார். பணிகளை விரைவாக முடித்து கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முதல்வருடன் அமைச்சர்கள்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வலர்கள் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட அரங்கையும், நோயாளிகள் தாமதமின்றி சிகிச்சைகளை மேற்கொள்ள 20 கார் ஆம்புலன்ஸ் வசதிகளையும் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். தொகுப்பூதிய அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிய 30 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 6 பேருக்கு பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

எதையுமே செய்யாதவர்கள் எங்களைப்பார்த்து வெற்றுக் கேள்விகளை கேட்பதைத்தான் ஒரே வேலையாக செய்துகொண்டிருக்கிறார்கள்'' என்கிறார் விளக்கமாக.



source https://www.vikatan.com/government-and-politics/policies/chief-ministers-visit-to-coimbatore-action-or-drama-kovai-ignore-campaign-background-information

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக