Ad

செவ்வாய், 22 ஜூன், 2021

சிவகங்கை: `இல்லாதவரின் பெயரில் மின் இணைப்பு?!’ -கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நடந்தது என்ன?

சிவங்ககையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள 11 ஏக்கர் நிலத்தை கதர், கிராமத்தொழில்கள் முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழும்பிய நிலையில், உடனடியாக அதிகாரிகள் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆக்கிரமிக்கப்பட்ட இடம்

தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்பு கோயில் நிலங்களை மீட்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. 'ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க, அரசு கோயிலை விட்டு விலகவேண்டும். ஆன்மிகவாதிகளிடம் கோயில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்' என்று பா.ஜ.க உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் குரல் எழுப்பி வந்தன.

சென்னை உட்பட பல இடங்களில் கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்ற நிலையில், கோயில் நிலத்தை கதர், கிராமத்தொழில்கள் வாரிய முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் ஆக்கிரமித்து, கட்டுமான வேலைகளை செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கிளம்பியது.

முன்னாள் அமைச்சர் பாஸ்கரன்

சிவகங்கையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கௌரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 142 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் முன்னாள் அமைச்சர் பஸ்கரனின் உறவினர்கள் ஆக்கிரமித்து வணிக நோக்கில் கட்டடங்கள் கட்டி வருவதாக தி.மு.க நகர செயலாளர் துரை ஆனந்த் முதலைமைச்சர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறைக்கு சில நாட்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். இது பற்றி மாவட்ட அமைச்சர் பெரியகருப்பனிடம் புகார் செய்யப்பட்டது.

அமைச்சர்களின் உத்தரவால் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த புகாரை விசாரித்து கடந்த 19-ம் தேதி ஆக்கிரமிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலத்தை சீல் வைத்தனர். இதனால் சிவகங்கையில் பரபரப்பு ஏற்பட்டது.

சீல் வைக்கப்பட்ட இடம்

இது சம்பந்தமாக புகார் அளித்த சிவகங்கை நகர திமுக செயலாளர் துரை ஆனந்திடம் பேசினோம், "அ.தி.மு.க ஆட்சி நடந்தபோதும் இந்த புகாரை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்போதிருந்த அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இப்போதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கௌரி பிள்ளையார் கோயிலுக்கு 142 ஏக்கர் 8 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் பலகோடி ருபாய் மதிப்புள்ள 11 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள்.

துரை ஆனந்த்

ஏற்கனவே சில பேரால் இக்கோயில் நிலம் பல ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள 11 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி உறவினர்கள் மூலம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அதில் கம்பி வேலி அமைத்து திருமண மண்டபம் உட்பட மிகப்பெரிய வணிக வளாகம் கட்டி வந்தார்கள். அதற்கு விதிமுறைகளை மீறி மின்சார இணைப்பும் பெற்றிருந்தனர். கடந்த வருடத்திலிருந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் சிவகங்கை கலெக்டருக்கும் புகார் அனுப்பினேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை

.இந்த நிலையில்தான் கழக ஆட்சி அமைந்தது. மீண்டும் புகாரை முதலமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும், எங்கள் மாவட்ட அமைச்சரிடமும் அளித்தேன். உடனே அவர்கள் விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள். தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள இடத்தை முழுமையாக மீடக வேண்டும், மின் இணைப்பு, கட்டட அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி. ' என்றார்.

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தில் எப்படி மின் இணைப்பு கொடுக்கப்பட்டது என்பதை, நிலம் அமைந்திருக்கும் காஞ்சிரங்கால் ஊராட்சியின் தலைவர் மணிமுத்துவிடம் கேட்டோம், "கட்டடம் கட்டுவதற்கு முன்பாக தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கும் அதன் பின்பு ப்ளான் அப்ரூவல் பெற்று கட்டடம் கட்டுவதற்கும் எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை.

நான் பொறுப்புக்கு வருவதற்கு முன் சிறப்பு அதிகாரிகள்தான் ஊராட்சி நிர்வாகங்களை கவனித்து வந்தார்கள். அந்த காலகட்டத்தில் தமறாக்கியை சேர்ந்த அய்யனார் மகன் சரவணன் என்பவர் காமராஜர் காலனியிலுள்ள ஒரு வீட்டுக்கு வரி ரசீது போட்டு வாங்கியிருக்கிறார். அந்த வீட்டு வரி ரசீதுக்கான இடம் பைபாஸ் ரோட்டுக்கு அந்த பக்கம் உள்ளது.

மணிமுத்து

ஆனால், இந்த பக்கமுள்ள இந்த ஆக்கிரமிப்பு இடத்துக்கு அந்த ரசீதை கொடுத்துதான் மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள். இதையெல்லாம் மின்வாரியத்தினர் அப்போதே ஆய்வு செய்திருக்க வேண்டும். சாமனியர்கள் மின் இணைப்பு கேட்டால் ஆயிரம் கேள்வி கேட்பார்கள். அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் எதையும் விசாரிக்காமல் விட்டுவிட்டார்கள். அதன் பிறகுதான் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தேன்.

இந்நிலையில்தான், ஒருநாள் இரவு, போலிஸ் பாதுகாப்போடு அந்த இடத்தை சுத்தி அமைச்சர் ஆட்கள் கம்பி வேலி போடுறதா மக்கள் என்னிடம் சொன்னாங்க. அது அவர் இடமா இருக்கும்னு ஆரம்பத்தில் நினைச்சோம், ஆனாலும் சந்தேகம் வந்து வி.ஏ.ஓ மூலமாக கிராம ஆவணங்களை எடுத்து பார்த்தால் அது கோயில் இடமுன்னு தெரிய வந்துச்சு.

அதுக்குள்ள செங்கல் சிமெண்டுன்னு இறக்க ஆரம்பிச்சாங்க. அங்கு எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு ஊராட்சி ஊழியர்களும், நாங்களும் நேர்ல போய் எச்சரித்தோம். அப்ப இடத்துக்கு சொந்தமானவங்களோ, எஞ்சினியரோ யாரும் அங்கு இல்லை. அதோடு, வேலையை தொடரக்கூடாது, ஊராட்சிக்கு வந்து பார்க்க சொல்லுங்கன்னு அங்க வேலை செய்றவங்ககிட்டே கடிதம் கொடுத்துட்டு வந்தோம்.

அதோடு அறநிலையத்துறையின் கொல்லங்குடி இ.ஓ.விடம் தகவல் சொன்னேன். அவர் மூலமா போலிஸில் புகார் கொடுத்தோம். அடுத்ததா மின்வாரியத்துல போய் எப்படி இணைப்பு கொடுத்தீங்கன்னு கேட்டோம், அதற்கு அவங்க தமறாக்கி அய்யனார் மகன் சரவணன்ங்கிறவர்தான் இணைப்பு வாங்கியிருக்கார்னு சொன்னாங்க.

யாரு இந்த சரவணன்னு அந்த ஊரில் போய் விசாரிச்சோம். அப்படி யாரும் இல்லன்னு சொன்னாங்க. அதோட ஈ.பி.-ல கொடுத்திருந்த அந்த முகவரிக்கு பதிவு தபால்ல நோட்டீஸ் அனுப்பினோம். அதுவும் திரும்பி வந்துடுச்சு. அதோடு மின் இணைப்பை டிசி பண்ண சொல்லி ஈ.பி.க்கு லட்டர் அனுப்பினேன்.

சுருக்கமா சொல்லனும்னா சம்பந்தப்பட்ட இடத்துக்கு ரசீதும் நாங்க கொடுக்கல. பிளான் அப்ரூவலும் கொடுக்கல. ஆனால், அமைச்சர் தலையிட்டதால் அதிகாரிகள் இதை செஞ்சு கொடுத்துள்ளார்கள். இந்த இடம் கோயில் இடம்னு தெரிஞ்சும் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை யார் பண்றாங்கன்னு வி.ஏ.ஓ மூலம் எஸ்.எல்.ஆர் காப்பி, ஏ ரிஜிஸ்டரை செக் பண்ணினால் குமரன், கண்ணன்னு ரெண்டு பேர் வந்தது.

சர்வே நம்பர் 330/2, 335/1ஏ,-யில் இவர்கள் இருவருக்கும் கொஞ்சம் இடம் உள்ளதாக காட்டினாலும் அதுவும் கோயில் இடம்தான். இடையில் இந்த பெயரை ஆவணங்களில் யாரோ சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

இந்த முறைகேட்டுக்கு முழுக்காராணம் அதிகாரிகள்தான்.
இந்து சமய அறநிலையத்துறை ஜெ.சி, ஈ.ஓ சிவகங்கையிலதான் இருந்தாங்க. அப்பவே இதை தடுத்திருக்கலாம். கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உதவியிருக்காரான்னு விசாரணையிலதான் தெரிய வரும்.

ஆக்கிரமிப்பு கட்டடம் சீல்

ஆனா, ஒரு விஷயம், சாதாரண ஆட்கள் கோயில் நிலத்துல இந்த மாதிரி வேலைகள தைரியமா பண்ண முடியாது. அதிகார பின்னணி உள்ளவங்கதான் பண்ண முடியும்.

ஒரு ஊராட்சித் தலைவர் என்ற முறையில் இந்த கோயில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டிருக்கேன். ஆட்சி மாறியதும்தான் இதற்கு நல்ல தீர்வு கிடைச்சிருக்கு" என்றார்.

இப்புகார் பற்றி முன்னாள் அமைச்சர் பாஸ்கரனிடம் கேட்டோம், ''அந்த பிரச்னைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதனால் அதைப்பற்றி நான் சொல்ல முடியாது'' என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.

அமைச்சர் சேகர்பாபு

இந்த நிலையில், சீல் வைக்கப்பட்ட நிலத்தை ஆய்வு செய்ய கடந்த 20-ம் தேதி சிவகங்கை வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, "கோயில் நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் தலையீட்டால் இது நடந்துள்ளது. இந்த ஆட்சியில் கோயில் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க விடமாட்டோம். கோயில் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்தவர்கள் தாமாக ஒப்படைக்க முன்வரவேண்டும்.

முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தாமாக வந்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்த நில அபகரிப்பில் அவருக்குள்ள தொடர்பு பற்றிய ஆதாரங்கள் அரசிடம் உள்ளது. அதனால் முன்னாள் அமைச்சர் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் கௌரி விநாயகர் கோயில் நிலத்திலுள்ள மற்ற ஆக்கிரமிப்புகளும் மீட்கப்படும் " என்றார்.

சேகர்பாபுவின் பேச்சு இந்த விவகாரத்தில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-temple-land-occupation-issue-records-in-the-name-of-unknown-person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக