Ad

செவ்வாய், 22 ஜூன், 2021

திண்டுக்கல்: சசிகலா குறித்து சர்ச்சைப் பேச்சு!-நத்தம் விசுவநாதனுக்கு எதிராகக் கொதித்த அ.ம.மு.க-வினர்

திண்டுக்கல்லில் உள்ள அ.தி.மு.க மாவட்டக் கட்சி அலுவலகத்தில் கடந்த 19-ம் தேதி, நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நத்தம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான நத்தம் விஸ்வநாதன் கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், ``சசிகலாவுக்கும் அண்ணா தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் கட்சியில் அடிப்படை உறுப்பினரே இல்லை. அவரைத் தொலைபேசியில் அல்லது வேறு எந்த ஒருவிதத்தில் தொடர்பு கொண்டாலும் அவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்” எனப் பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் நத்தம் விசுவநாதன்

இவை தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டன. அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் " ‘தாயையும் பிள்ளையும் பிரிக்க முடியாது’ என, சசிகலா கூறியுள்ளார். அவர், தாயாக இருந்தால்தானே பிரிக்க முடியும்... அவர் தாய் இல்லை. அவர் ஒரு பேய். அவர் ஒரு வேஸ்ட் லக்கேஜ். அந்த லக்கேஜைச் சுமந்து செல்ல நாங்கள் ரெடியாக இல்லை. அவர் கட்சியில் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அப்படி இருக்கையில், அவரது செயல் வேடிக்கையாக உள்ளது. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் ஏதோ நடந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். சசிகலா என்பவர், அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியல்ல. அது தவிர்க்கப்பட வேண்டிய சக்தி. சிறைக்குச் சென்று திரும்பிவிட்டு, அ.தி.மு.க நன்றாக இருப்பதைப் பார்த்து, அதை மீண்டும் கைப்பற்றிவிட நினைக்கிறார். அதனால், பல குறுக்குவழிகளைக் கையாளப் பார்க்கிறார். அ.தி.மு.க-விலுள்ள ஒரு கோடி தொண்டர்களில் ஒருவரிடம் மட்டும் பேசிவிட்டு இந்த இயக்கத்தைக் கைப்பற்ற நினைப்பது நகைப்புக்குரியது. அவரால் ஒரு சதவிகிதம்கூட கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது" எனப் பேசினார். இதில், சசிகலாவை, பேய் என்றும், வேஸ்ட் லக்கேஜ் எனவும் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.

உருவ பொம்மை எரிப்பு

நத்தம் விஸ்வநாதனின் இந்தப் பேச்சு, அ.ம.மு.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நத்தம் பேருந்து நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் ராஜா, நகரச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் தொண்டர்கள் நத்தம் விசுவநாதனைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நத்தம் விசுவநாதனின் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்புப் பணியில், ஈடுபட்டிருந்த நத்தம் காவல்துறையினர் உருவ பொம்மையைக் கைப்பற்றி தீயை அணைத்தனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



source https://www.vikatan.com/news/politics/controversial-talk-about-sasikala-ammk-protest-against-natham-viswanathan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக