மத்திய பா.ஜ.க அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. புதிய விதிமுறைகளைப் பின்பற்ற ட்விட்டர் நிறுவனத்துக்கு இறுதிக் கெடு விதித்துள்ள மத்திய அரசு, ‘விதிமுறைகளை ஏற்காவிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்றும் எச்சரித்துள்ளது. இந்த மோதல் விவகாரம் குறித்து ‘கானல் நீராகிறதா கருத்து சுதந்திரம்?’ என்கிற தலைப்பில் 2.6.2021 தேதியிட்ட இதழில் எழுதியிருந்தோம். இந்தநிலையில்தான் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டிருந்த ‘வெரிஃபைடு அக்கவுன்ட்’ எனப்படும் ‘ப்ளூ டிக்’குகளை நீக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ட்விட்டர் நிறுவனம். தொடர்ந்து, இருவர் தரப்பிலிருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டதை அடுத்து ப்ளூ டிக்கைத் திருப்பியளித்த ட்விட்டர், அவர்களின் கணக்குகள் வெகு நாள்களாகச் செயல்படாமல் இருந்ததே ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்குக் காரணம் என்று விளக்கமும் அளித்துள்ளது. ஆனாலும் விவகாரம் முடிவதாகத் தெரியவில்லை.
சமூக வலைதள நிறுவனங்கள் மட்டுமல்லாது, டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கும் சில கட்டுப்பாடுகளையும், புதிய விதிமுறைகளையும் விதித்துள்ளது மத்திய அரசு. அதன்படி ஒவ்வொரு செய்தி நிறுவனமும் குறை தீர்க்கும் அதிகாரி ஒருவரை நியமித்து, தங்கள் செய்திகளுக்கு எதிராக வரும் புகார்களை விசாரித்து, 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இதையடுத்து, ‘மத்திய பா.ஜ.க அரசின் புதிய விதிமுறைகள் உள்நோக்கம் கொண்டவை. இது கருத்துரிமையை நெரிக்கும் செயல்’ என எதிர்க்கட்சியினரும் பத்திரிகையாளர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்துரையாடல் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் நம்மிடம், “சமூக வலைதளங்களையும், டிஜிட்டல் செய்தி நிறுவனங்களையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக புதிய ஐ.டி விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை. தற்போது, ட்விட்டர் நிறுவனத்துக்கு இறுதிக்கெடு விதித்திருக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனத்தினர் இவர்களுக்கெல்லாம் பணிய மாட்டார்கள்; சர்வதேச அளவில் லாபி செய்வார்கள். அதேபோல, பா.ஜ.க அரசும் ட்விட்டருக்குத் தடை விதிக்காது. ஏனெனில், இவர்களின் பிரசாரமே ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம்தான் நடக்கிறது. மத்திய அரசின் இந்தச் செயல்பாடுகளை மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.
மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் நம்மிடம், “ஒருவர் புகார் தெரிவித்தால், 24 மணி நேரத்துக்குள் அக்னாலெட்ஜ்மென்ட் அனுப்ப வேண்டும்; 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற விதிகளை அனைத்து நிறுவனங்களாலும் பின்பற்ற முடியாது. ‘இதுதான் சட்டம்; அதனால் அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்கிறது மத்திய அரசு. அதேநேரம், மத்திய அரசு தடுப்பூசிக்கு விதித்திருக்கும் விலை நிர்ணயத்தைத் தடுப்பூசி நிறுவனங்கள் பின்பற்றுவதே இல்லை. ஆனால், அதற்கு பா.ஜ.க தலைவர்கள் யாரும் குரல் கொடுப்பதில்லை. பேரிடர் காலத்தில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வாயிலாக மக்களுக்கு உதவிகள் சேர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இது போன்ற விதிமுறைகளை பின்பற்றச் சொல்வது கண்டிக்கத்தக்கது. மத்திய பா.ஜ.க அரசின் இந்தச் செயல்பாடுகள், அடுத்த ஆண்டு நடக்கப்போகும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு நடப்பதாகவே நான் பார்க்கிறேன். உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால், 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்கு போடுகிறது பா.ஜ.க’’ என்றார்.
தமிழக பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசனோ, “உ.பி தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சர்வதேச வர்த்தக நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் ஒரே மாதிரியான சட்டங்கள் எதுவும் இல்லை. அதனால், இந்த நிறுவனங்கள் தாங்கள் இயங்கும் நாடுகளின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். சமீபத்தில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் ட்விட்டருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘வதந்திகளைப் பரப்பக் கூடாது; நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்துவிடக் கூடாது’ என்று மத்திய அரசு நினைப்பதில் என்ன தவறு? ஆனால், எதிர்க்கட்சிகள்தான் இந்த விஷயத்தை அரசியல் ஆக்குகின்றன. சமூக வலைதளங்கள் மட்டுமல்ல... டிஜிட்டல் மீடியாக்களிலும் வதந்திகளைச் செய்தியாக்கும்போது ஒரு கட்சியோ, தனி நபரோ பாதிக்கப்படுகிறார்கள். அதைத் தடுக்கும் நோக்கத்தில்தான் இப்படியான விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. இதனால், பலன் அடையப்போவது பா.ஜ.க மட்டும் இல்லை... காங்கிரஸ், தி.மு.க போன்ற கட்சிகளுக்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளையும் இதனால் தடுக்கலாம்” என்றார் திட்டவட்டமாக.
நல்ல நோக்கம் எனில் வரவேற்கலாம்... உள்நோக்கம் எப்போதும் ஆபத்தே!
source https://www.vikatan.com/government-and-politics/news/central-government-vs-twitter-digital-war
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக