Ad

வெள்ளி, 11 ஜூன், 2021

சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதமே கொரோனா வைரஸ்! - துப்பு துலக்கிய இந்தியர்

’இது உண்மைதானா என்று விசாரித்து மூன்று மாதங்களில் ரிப்போர்ட் கொடுங்கள்’ என மே 26 அன்று உத்தரவு போட்டிருக்கிறார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ‘சீனாமீது நடவடிக்கை எடுங்கள், 730 லட்சம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு வாங்குங்கள்’ என்று கொதிக்கிறார் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப். உலகின் முன்னணி உயிரியல் நிபுணர்கள் பலர், ‘இதில் உண்மை இருக்கிறது’ என்று சாட்சியம் சொல்கிறார்கள். ‘சீனாவின் செயலால் நூறாண்டுகளில் காணாத பேரழிவு ஏற்பட்டுவிட்டது’ என்ற கோபக் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

அத்தனைக்கும் காரணம், கொரோனா வைரஸின் உருவாக்கம் குறித்து இப்போது வெளியாகியுள்ள ரகசியங்கள். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர் ஒன்றிணைந்து, ரகசிய ஆவணங்களைத் தோண்டி எடுத்திருக்கிறார்கள். ‘கொரோனா வைரஸ் சீனாவில் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அங்கிருந்து கசிந்தே அது உலகம் முழுக்கப் பரவியது’ என்பதற்கு வலுவான ஆதாரங்களாக இந்த ஆவணங்கள் உள்ளன. ‘DRASTIC’ (Decentralized Radical Autonomous Search Team Investigating COVID-19) என்ற பெயரில் பல நாடுகளில் இருந்தபடி செயல்படும் இந்தக் குழுவின் முக்கியமான புலனாய்வாளர் ஓர் இந்தியர். தன் உண்மை அடையாளத்தை வெளிப்படுத்தாமல், The Seeker என்ற பெயரில் ட்விட்டரில் இயங்கும் இவர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். தன்னை அறிவியல் ஆசிரியர் என்று மட்டும் அறிமுகம் செய்துகொள்ளும் இவர், இன்னும் 30 வயதைத் தொடாத இளைஞர். இவர் பல ரகசியங்களைத் துப்பறிந்துள்ளார். நம் வசதிக்கு இவரை ‘பெங்காலி ஸ்பை’ என்று அழைப்போம்.

சீனாவின் வூஹான் இறைச்சிச் சந்தையில் உயிர் விலங்குகளை விற்கும் கடை ஒன்றிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது. வௌவாலிடமிருந்து அலங்கு எனப்படும் எறும்புண்ணிக்கு இந்த வைரஸ் தொற்றியது. வூஹான் சந்தையில் இந்த விலங்கிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றியது. இதுதான் கொரோனாவின் பிறப்பு பற்றி நமக்குச் சீனா சொல்லும் வரலாறு. இதைப் பலர் நம்பவில்லை.

‘வூஹான் நகரில் அந்த மார்க்கெட்டுக்கு அருகிலேயே வைரஸ் ஆய்வுக்கூடம் இருக்கிறது. வௌவால்கள் வசிக்கும் குகைகளோ ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கின்றன. எங்கிருந்து தொற்று பரவுவது சுலபம்’ என்ற கேள்வியுடன் ‘DRASTIC’ குழுவினர் துப்பறியத் தொடங்கினார்கள். அவர்கள் சேகரித்திருக்கும் தகவல்கள் உலகையே அதிர வைத்துள்ளன.

* ‘சீனாவின் வௌவால் பெண்’ என்று அழைக்கப்படுகிறார் ஷி ஜெங்லி. இவர்தான் வூஹான் வைராலஜி இன்ஸ்டிட்யூட் இயக்குநர். இவர், இந்த ஆண்டு பிப்ரவரியில் மூன்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவற்றில் அவர் போகிற போக்கில் சொல்லியிருந்த ஒரு தகவல்தான், இந்தப் புலனாய்வின் ஆரம்பப் புள்ளி. ‘கொரோனா நோய்க்குக் காரணமான SARS-CoV-2 என்ற வைரஸ், இதற்குமுன் பார்த்த எந்த வைரஸ் போலவும் இல்லை. சார்ஸ் நோயை உண்டாக்கிய வைரஸ்கூட இதுபோல இல்லை. அதன் மரபணுவை ஆராய்ந்தபோது, கொரோனா வைரஸுக்கு நெருங்கிய உறவாக RaTG13 என்ற வைரஸ் மட்டுமே இருக்கிறது’ என்று ஷி ஜெங்லி கூறியிருந்தார்.

RaTG13 வைரஸ் என்ற பெயர் நம் பெங்காலி ஸ்பையின் ஆர்வத்தைக் கிளறியது. எங்கும் கேள்விப்படாத புதுப்பெயராக இருக்கிறதே என ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தேட ஆரம்பித்தார். அது அவரை ஒரு சுரங்கத்துக்கு அழைத்துச் சென்றது.

* சீனாவின் யுனான் மாகாணத்தில் மோஜியாங் என்ற இடத்தில் ஒரு சுரங்கம் இருக்கிறது. இந்தச் சுரங்கத்தில் வௌவால்கள் குடியேறி அசுத்தம் செய்திருந்தன. 2012-ம் ஆண்டு இதைச் சுத்தம் செய்ய ஆறு பேர் போனார்கள். அவர்களுக்கு ஜுரம், ஜலதோஷம், இருமல், மூச்சுத்திணறல் எனக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. மூன்று பேர் இறந்துவிட்டனர். கிட்டத்தட்ட கொரோனா போன்ற பாதிப்பு. அந்த நோய் பற்றி ஆய்வு செய்ய ஷி ஜெங்லி போயிருந்தார் என்பது தெரிந்தது.

சீன அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் தளங்களில் இதுபற்றித் தேட ஆரம்பித்தார் பெங்காலி ஸ்பை. பல நாள்கள் தேடி, ஒன்றும் தேறாது எனக் கைவிட இருந்த நேரத்தில் குன்மிங் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரை ஒன்று கிடைத்தது. அந்தச் சுரங்கத் தொழிலாளர்கள் ஆறு பேருக்கு அளித்த சிகிச்சை பற்றிய கட்டுரை அது. ‘சீன லாட வௌவாலில் இருந்து தொற்றிய சார்ஸ் போன்ற ஏதோ ஒரு வைரஸின் பாதிப்பு இது’ என அதில் எழுதியிருந்தார்கள். வைரஸ் சாம்பிள்களை வூஹானுக்கு அனுப்பி வைத்தது பற்றியும் குறிப்பு இருந்தது.

* இந்த விவரங்கள் இணையங்களில் வெளியானதும், மோஜியாங் சுரங்கம் பற்றிப் பலருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பி.பி.சி நிருபர் அங்கு போக முயன்றார். அவரைச் சீனாவிலிருந்தே வெளியேற்றினார்கள். ஏ.பி., என்.பி.சி என்று பல சர்வதேச ஊடகங்களின் நிருபர்கள் போனபோது, வழியிலேயே மடக்கிவிட்டார்கள். ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நிருபர் அந்தச் சுரங்கத்தின் வாசல் வரை போனார். அவரைக் காவலில் வைத்துப் பல மணி நேரம் விசாரித்து, திருப்பி அனுப்பிவிட்டனர். இன்றுவரை அந்தச் சுரங்கத்துக்குள் யாரும் போக முடியவில்லை.

* ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ ரிபேரா என்ற டேட்டா சயின்டிஸ்ட், வூஹான் வைராலஜி நிலையத்தின் ஆய்வுக்கட்டுரைகளை அலசி, பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தினார். 2012-ம் ஆண்டுக்குப் பிறகு அந்தச் சுரங்கத்துக்குப் பலமுறை வூஹான் நிபுணர்கள் சென்று ஏராளமான வைரஸ் சாம்பிள்களைச் சேகரித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எடுத்து வந்தது RaTG13 வைரஸ் மட்டுமல்ல, அதையும் சேர்த்து ஒன்பது விதமான வைரஸ்கள் கிடைத்திருக்கின்றன. இந்த வைரஸ்கள் பற்றி அவர்கள் வெளியுலகத்துக்கு எதுவுமே சொல்லவில்லை.

* இந்த வைரஸ்களை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. இந்த வைரஸ்களை மனிதர்களுக்குப் பரவும்விதமாக மாற்ற முடியுமா, அப்படிப் பரவினால் அது எப்படி உருமாற்றம் அடையும் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து வந்திருக்கிறார்கள். எலிகளிடம் இந்த சோதனைகளை நடத்தி, அந்த வைரஸ்களை வீரியம் உள்ளவையாக மாற்ற முயன்றிருக்கிறார்கள். கொரோனா வைரஸில் இருக்கும் ஸ்பைக் புரதமே, அதை எளிதில் மனிதர்களுக்குத் தொற்ற வழி செய்திருக்கிறது. இது வௌவால்களிடமிருந்து எடுக்கப்பட்டு, ஆய்வுக்கூடத்தில் வைத்து வைரஸ்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது நோய் அறிவியல் நிபுணர்களின் கணிப்பு. எதற்காக இதைச் செய்தார்கள்? ‘எதிர்காலத்தில் மனிதர்களை அச்சுறுத்தக்கூடிய நோய்களுக்கு மருந்து கண்டறியவே இந்த ஆராய்ச்சி’ என்கிறது வூஹான் ஆய்வுக்கூடம். ஆனால், ‘உயிரி ஆயுதமாக வைரஸ்களை உருமாற்றவே இந்த ஆராய்ச்சி நடைபெற்றது’ என்கிறது இதை உளவறிந்த குழு. ‘உயிரி ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் மூன்றாம் உலகப் போர்ச் சூழல் ஒன்றைச் சீன விஞ்ஞானிகள் யோசித்துப் பார்த்தனர்’ என்ற திடுக்கிடும் செய்தியை ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்று வெளியிட்டது.

* 2019 டிசம்பரில்தான் கொரோனாத் தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டதாக சீனா வெளிப்படையாகச் சொன்னது. ஆனால், நவம்பர் மாதமே வூஹான் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் மூன்று பேர் விநோதமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டனர். ‘இவர்களை என்ன நோய் தாக்கியது, என்ன சிகிச்சை கொடுத்தார்கள்’ என்ற தகவலை சீனா மறைத்துவிட்டது. ‘அதுதான் கொரோனாவின் முதல் தாக்குதல்’ என்று உலக அறிவியலாளர்கள் இப்போது குற்றம் சாட்டுகிறார்கள். ‘அந்த மூன்று பேருக்கு என்ன நேர்ந்தது எனச் சீனா சொல்ல வேண்டும்’ என்று இப்போது அமெரிக்கா கேட்டிருக்கிறது.

* வூஹானில் இருக்கும் இரண்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து 2020 பிப்ரவரியில் ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டனர். ‘வௌவால்கள் பெரும்பாலும் எங்கும் திரியாமல் அமைதியாக குகைகளில் முடங்கியிருக்கும் குளிர் காலத்தில், வௌவால்களே விற்கப்படாத ஒரு நகரத்து மார்க்கெட்டில் எப்படி கொரோனா வைரஸ் பரவும்? இது நம்புகிற மாதிரி இல்லை. நாங்கள் அந்த மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தோம். அங்கிருந்து வெறும் 280 மீட்டர் தூரத்தில்தான் வூஹான் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இருக்கிறது. வௌவால்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஏராளமான வைரஸ்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. வூஹான் வைராலஜி இன்ஸ்டிட்யூட்டும் இந்த நகரில்தான் உள்ளது. பாதுகாப்பு இல்லாத சூழலில் இங்கு வைரஸ்கள் கையாளப்படுகின்றன’ என்று குற்றம் சாட்டியது அந்த ஆய்வுக் கட்டுரை. வெளியான சில மணி நேரத்தில் அது இணையத்திலிருந்து நீக்கப்பட்டது.

* அதே 2020 பிப்ரவரியில் தென் சீன பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப நிபுணர் போடாவ் ஜியோ என்பவர், ‘வூஹானில் உள்ள ஓர் ஆய்வுக்கூடத்தில் இருந்தே கொரோனா வைரஸ் உருவாகியிருக்க வேண்டும்’ என ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். சில நாள்களில் அவர் அதைத் திரும்பப் பெற்றார்.

‘கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து கசிந்தது’ என இப்படி சில தன்னார்வலர்கள் செய்த கண்டுபிடிப்பை அறிவியல் சமூகமும் உறுதி செய்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற கொரோனா ஆய்வாளர் ஜெஸ்ஸி ப்ளூம் முதலில் இதை உறுதி செய்ய, ஹார்வர்டு, யேல், ஸ்டான்ஃபோர்டு எம்.ஐ.டி எனப் பல நிறுவனங்களின் விஞ்ஞானிகள், ‘வூஹான் வைராலஜி இன்ஸ்டிட்யூட் ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று குரல் கொடுத்துள்ளனர்.

‘`கொரோனா வைரஸ் ஏராளமான உயிர்களைப் பறித்துள்ளது. தங்கள் அன்புக்குரிய உறவுகளை இழந்து ஏராளமானவர்கள் தவிக்கிறார்கள். எத்தனையோ குடும்பங்கள் நஷ்டமடைந்து வீதிக்கு வந்துள்ளன. பல தொழில் நிறுவனங்கள் திவாலாகிவிட்டன. இது இயற்கையாகப் பரவிய நோய் என்றால், எதுவும் செய்ய முடியாது. ஆனால், சீனாவின் தவற்றால் இவையெல்லாம் நிகழ்ந்தன என்றால், மானுட குலத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அந்த தேசத்துக்கு உண்டு’’ என உறுதியாகச் சொல்கிறார் நம் பெங்காலி ஸ்பை.

அமெரிக்க நிதியில் சீனா செய்த சதி!

சீனாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்க அரசு துடிக்கும் நேரத்தில், அங்கேயே ஒரு கோஷ்டி சீனாவைக் காப்பாற்ற நினைக்கிறது. இதற்குத் தலைமை தாங்குபவர், பீட்டர் டஸாக். எக்கோ ஹெல்த் அலையன்ஸ் என்ற லாப நோக்கமற்ற ஆராய்ச்சிக் குழுவை நடத்தி வருகிறார் இவர். ஆபத்தான தொற்றுநோய்களை ஏற்படுத்தும் கிருமிகளை ஆய்வு செய்கிறது இந்த அமைப்பு. இந்த அமைப்பின் வழியாக அமெரிக்க அரசு 34 லட்சம் டாலர் நிதியுதவியை வூஹான் ஆய்வுக்கூடத்துக்குக் கொடுத்திருக்கிறது. வூஹான் ரகசியங்கள் அனைத்தும் அறிந்த இவர், ‘கொரோனா இயற்கையான வைரஸ்தான்’ என்று பிரசாரம் செய்துவருகிறார்.

வூஹான் ஆய்வுக்கூடத்தை ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவனம் ஒரு குழுவை அனுப்பியது. இதற்கு ஒரு நிபுணரைப் பரிந்துரைக்குமாறு அமெரிக்க அரசிடம் உலக சுகாதார நிறுவனம் கேட்டது. அமெரிக்க அரசு மூன்று பெயர்களைப் பரிந்துரை செய்தது. கடைசியில் குழுவில் இடம் பெற்றவர், அந்த லிஸ்ட்டிலேயே இல்லாத பீட்டர் டஸாக். அரைகுறையாக ஆய்வு செய்துவிட்டு, ‘ஆய்வுக்கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு’ என அறிக்கை கொடுத்தது அந்தக் குழு.

‘உயிரி ஆயுதங்கள் குறித்து அமெரிக்காவும் ஏராளமான ஆராய்ச்சிகளைச் செய்கிறது. உலகத்தின் நலனுக்காக இந்த ஆய்வுகள் பற்றிய உண்மைகளை எல்லா நாடுகளும் வெளியிட வேண்டும்’ என அக்கறையுள்ள விஞ்ஞானிகள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

பீட்டர் டஸாக், பெர்ஜர் சோரன்சன் , ஆங்கஸ் டேல்க்ளெஷ்

கொரோனா வைரஸ் இயற்கையானது இல்லை!

பிரிட்டிஷ் பேராசிரியர் ஆங்கஸ் டேல்க்ளெஷ், நார்வே விஞ்ஞானி பெர்ஜர் சோரன்சன் ஆகியோர் இணைந்து செய்த கொரோனா ஆய்வு, அதிர வைக்கும் பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது.

‘`வௌவால்களில் இருந்த வைரஸை எடுத்து, அதில் ஸ்பைக் புரதத்தை இணைத்து ஆபத்தானதாகவும், அதிகம் பரவுவதாகவும் மாற்றியுள்ளனர். இயற்பியல் விதிகளின்படி பாசிட்டிவ் சார்ஜ் உள்ள நான்கு அமினோ அமிலங்கள் ஒரே வரிசையில் இருக்காது. கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் இப்படி இருக்கிறது. ஆய்வுக்கூடத்தில் செயற்கையாகச் செய்தால் மட்டுமே இது சாத்தியம்’’ என்கிறார் சோரன்சன்.

‘`இயற்கையான ஒரு வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவும். ஆனால், அந்த வைரஸ் உருமாறி வீரியம் இழக்கும். கொரோனா வைரஸோ வீரியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கும் காரணம், சீனா செய்த இன்னொரு வேலைதான். ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்து மனிதர்களுக்குப் பரவிய வைரஸை மீண்டும் எடுத்து, ரெட்ரோ இன்ஜினீயரிங் முறையில் அதை இயற்கையானதுபோல மாற்றியுள்ளனர். அதுதான் உலகம் முழுக்கப் பரவியிருக்கிறது’’ என்று சொல்கிறார் சோரன்சன்.



source https://www.vikatan.com/news/general-news/coronavirus-created-in-china-lab

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக