சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆந்திர அரசு தெலுங்கு-கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை வழங்கி வருகிறது. ஆந்திராவிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை `ஜீரோ பாயிண்ட்' வந்தடையும் கிருஷ்ணா நதி நீரானது, அங்கிருந்து கால்வாய் வழியாக 25 கிலோமீட்டர் தூரம் பயணித்து பூண்டி ஏரியை அடைகிறது. பின்னர் அங்கிருந்து சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட பிரதான ஏரிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால், ஆந்திர அரசு ஒப்பந்தத்தின் படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 12 டி.எம்.சி நீரை முறையாக வழங்குவதில்லை. கடந்தாண்டு 2019-2020 நீர்நிலைகளில் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதாகக் கூறி தமிழகத்திற்கு வெறும் 8.05 டி.எம்.சி நீர் மட்டுமே வழங்கப்பட்டது. நடப்பாண்டிலும் 2020-2021 ஆந்திர அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய முதல் தவணை கிருஷ்ணா நீரை வழங்கவில்லை.
பின்னர், செப்டம்பர் மாத இறுதியில் ஆந்திராவில் தென்மேற்குப் பருவமழையால் கண்டலேறு அணையில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்ததால், கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் 7 மாதங்கள் தொடர்ந்து ஆந்திரா தமிழகத்திற்குக் கிருஷ்ணா நதி நீரை வழங்கியது. அதன் மூலம் தமிழகம் பெறவேண்டிய 12 டி.எம்.சியில் 7.65 டி.எம்.சி நீர் கிடைத்திருந்தது.
சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் ஏரிகளில் தற்போது 6.91 டி.எம்.சி அளவுக்கு நீர் கையிருப்பு உள்ளது. இருப்பினும், கோடைக்காலம் என்பதால் ஏரிகளின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன் காரணமாக, தமிழக நீர்வளத்துறை ஆந்திரா வழங்கவேண்டிய 4 டி.எம்.சி கிருஷ்ணா நீரை உடனடியாக வழங்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திர நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதியது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கையினை ஆந்திரா அப்போது மறுத்துவிட்டது. அதனால், தமிழகத்திற்கு மே மாதம் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்கப்படாமல் போனது.
அதனையடுத்து, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் மீண்டும் ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதி இரு மாநில ஒப்பந்தத்தின் படி மீதம் வழங்கவேண்டிய நீரை வழங்குமாறு வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், நடப்பாண்டில் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 4 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை வழங்க ஆந்திரா முன்வந்துள்ளது. அதன்படி, இம்மாதம் 14-ந் தேதி ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்குக் கிருஷ்ணா நதி நீரைத் திறப்பதாக ஆந்திர பொதுப்பணித்துறை உறுதி அளித்திருக்கிறது.
Also Read: தமிழகத்துக்கு தண்ணீரை நிறுத்திய ஆந்திரா... இந்த ஆண்டு கோடையை சமாளிக்குமா சென்னை?
ஆந்திர அரசு கூறியுள்ள படி 14-ம் தேதி 4 டி.எம்.சி நீரை திறந்து விடும் பட்சத்தில் தமிழகத்திற்கு இந்தாண்டு கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர் முழுமையாக கிடைத்து விடும்.
14-ந் தேதி ஆந்திராவில் திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீரானது, தமிழக எல்லைக்கு 15-ந் தேதி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் போதியளவில் நீர் கையிருப்பு உள்ள நிலையில், ஆந்திராவிலிருந்து கிடைக்கப்பெறவுள்ள 4 டி.எம்.சி நீரால் பருவமழை தாமதமானாலும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/chennai-to-receive-4-tmc-krishna-water-from-andhra-from-june-14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக