தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு, ஜூன் 19-ம் தேதி ஊரடங்கில், குறித்த நேரத்திற்குள் கடையை அடைப்பது தொடர்பாக போலீஸாருக்கும் ஜெயராஜூவுக்கும் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயராஜ். தந்தையைத் தேடி ஸ்டேஷனுக்குச் சென்ற பென்னிக்ஸ், போலீஸார் தன் தந்தையை தாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து தடுத்துள்ளார். இதனால், ஆத்தரமடைந்த போலீஸார் தந்தை, மகன் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இரவு முழுவதும் கடுமையாகத் தாக்கவே, இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தொடர்ந்து, சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி, இருவரையும் கோவில்பட்டி சிறையில் அடைக்க உத்தவிட்டார். தொடர்ந்து, இருவருக்கும் உடற்தகுதிச் சான்றிதழ் பெற, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அரசு மருத்துவர் வினிலா, சான்றிதழ் தர மறுத்துள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதரின் வற்புறுத்தலால் 3 மணி நேரம் கழித்து சான்றிதழில் கையெழுத்து போட்டுள்ளார் வினிலா. அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், 22-ம் தேதி இரவில் பென்னிக்ஸும், 23-ம் தேதி அதிகாலையில் ஜெயராஜூம் சிறையிலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரிடமிருந்தும் கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
’பென்னிக்ஸ் நெஞ்சுவலியாலும், ஜெயராஜ் காய்ச்சலாலும் உயிரிழந்தார்’ என போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்படுவதற்கு முன்னரே, ‘இருவரும் உடல்நலகுறைவால்தான் உயிரிழந்துள்ளனர்’ என அப்போதைய முதல்வர் பழனிசாமி கூறியதும் அப்போது சர்ச்சையானது. ‘போலீஸ் ஸ்டேஷனில் உயிரிழந்தால்தான் ‘லாக்அப் டெத்’ ஆகும். சிறையில் உயிரிழந்தது எப்பது ’லாக்அப் டெத்’ ஆகும்?’ என அப்போதைய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூற, எதிர்க்கட்சியினர் உட்பட அனைவரும் கொந்தளித்தனர்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும், உயர் நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் ’ரிமாண்ட்’க்கு உத்தரவித்த நீதிபதி மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் (ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், காங்கிரஸின் வழக்கறிஞர்கள் பிரிவு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய நான்கு சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்) கடந்த ஆண்டு ஜூலை 6-ம் தேதி உயர் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன், அக்காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களும் கூண்டோடு வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதையடுத்து, தடயங்கள் அழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சமூகப் பாதுகாப்புத்துறை தனி தாசில்தார் செந்தூர்ராஜனின் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம் கொண்டுவரப்பட்டது. தாசில்தாரின் கட்டுப்பாட்டில் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்த சில நாட்களில் சாத்தான்குளம் டி.எஸ்.பி., பிரதாபன், ஏ.டி.எஸ்.பி குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அடுத்த 3 மணி நேரத்தில் பணி வழங்கப்பட்டதும் சர்ச்சையானது. இதனால், அப்போதைய எஸ்.பி.,யான அருண் பாலகோபாலனும் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு ஒரு மாதம் கழித்த பின்னரே, சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர்-2 ஆக நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சம்பவத்தன்று இரவு என்ன நடந்தது என்பது குறித்த தலைமைக்காவலர் ரேவதியின் துணிச்சலான வாக்குமூலம்தான் குற்றவாளிகளை தப்பவிடாமல் சிக்க வைத்தது. இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியது தமிழக அரசு. ஐ.ஜி சங்கர் தலைமையிலான போலீஸார் விசாரணையில் இறங்கினர். அன்றைய தினமே 5 போலீஸார் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து கைதுகள் அரங்கேறியது. மொத்தம் 10 போலீஸார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பிலும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. காவல்துறையின் மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. வழக்கின் தீவிரத்தை உணர்ந்த நீதிமன்றம், இவ்வழக்கினை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி எஸ்.எஸ்.ஐ., பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பால்துரையின் இறுதிச்சடங்கின்போது துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. ‘சிறையில் அடைக்கப்பட்ட கைதிக்கு அரசு மரியாதையா?’ என பெரும் சர்ச்சையானது. தந்தை, மகன் தாக்கப்பட்டதில் ’பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’குழுவைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதால், ’அக்குழுவை கலைக்க வேண்டும்’ என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இக்குழு செயல்பட தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ., அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதில், “தந்தை, மகன் உயிரிழந்ததற்கு சாத்தான்குளம் காவல் நிலையத்தின் போலீஸரே காரணம். சி.பி.சி.ஐ.டி., போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரும் குற்றத்தில் தொடர்புடையவர்கள்” எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரணை செய்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகளில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், ஊரடங்கினாலும் இவ்வழக்கு விசாரணை மந்தமானது.
இந்த வழக்கில் இருந்து போலீஸாரைக் காப்பாற்ற சில முயற்சிகள் நடந்தாலும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கயை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கின் தற்போதைய நிலை குறித்து, ஜெயராஜ் குடும்பத்தின் தரப்பின் வழக்கறிஞரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், ராஜீவ்ரூபஸிடம் பேசினோம், “இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. பின்னர், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், 9 போலீஸாரும் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலும், மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், ’தூத்துக்குடி நீதிமன்றத்தில் சிலரும் மதுரை நீதிமன்றத்தில் சிலரும் ஜாமீன் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்பதை சுட்டிக்காட்டி இந்த வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றினார்.
அதன் பின்னரே விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் இதுவரை, பென்னிக்ஸின் சகோதரி பியூலா, கோவில்பட்டி கிளைச்சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சங்கர் ஆகிய இரண்டு பேர் மட்டும்தான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் 9 பேருக்கும் ஒவ்வொரு வழக்கறிஞர்கள் இருப்பதால், ஒரு சாட்சியத்தை விசாரணை செய்து முடிக்கவே 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது. இதில், கொரோனா ஊரடங்கினால் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளதால் விசாரணையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமீன் கேட்டும், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் கேட்டதுடன், ‘தமிழக மக்கள் எங்களுக்கு எதிராக உள்ளனர். நீதித்துறை கண்டிப்புடன் நடந்து கொள்கிறது. எங்கள் தரப்பு நியாயம் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பில்லை. எங்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விடும். அதனால், இவ்வழக்கை கேரள மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் மாநில அரசையும் பார்டியாக சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணை விரைவில் முடிவடைந்தால், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு உரிய நீதியும், தவறு செய்த போலீஸாருக்கு கடுமையான தண்டனையும் கிடைக்கும். இந்த வழக்கு, இந்தியா முழுவதும் முன்னுதாரணமாகவே இருக்கும்” என்றார் அவர்.
ஜெயராஜின் மூத்த மகளானபெர்சிஸிடம் பேசினோம், “இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது, அன்றைய தினம், நீதிமன்றத்திற்குள் வைத்தே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், அவரைப் பார்க்க வந்த உறவினர் ஒருவரின் செல்போனை வாங்கி, ‘ஒழுங்கா நான் கேட்ட முப்பத்தாறு லட்சம் பணத்தைஎன் மகள் கிட்ட கொண்டு கொடுத்துடு. இல்லேன்னாஉன் கதையை முடிச்சுடுவேன்’ன்னுயார்கிட்டயோ ஆவேசமாப் பேசினார். இதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு போனோம்.
ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி-க்கும் மனு அனுப்பியிருந்தோம். நீதிமன்றத்திற்குள்ளேயே சட்டவிதி மீறலா போன் பேசுறாருன்னா, மத்த போலீஸ்காரங்களோட ஒத்துழைப்பு இல்லாம எப்படி நடந்திருக்கும். இந்த வழக்கைப் பொறுத்த வரையில், குற்றம் இழைத்தவர்கள் மேல்நிலை காவல் அதிகாரிகள். ஆனால், சாட்சிகள் கீழ்நிலை காவலர்கள் என்பதால், அதிகார பலம், அழுத்தத்தால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது என்பதால், இவ்வழக்கை விரைவாக விசாரணை செய்தால் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தோம். அதற்குப் பிறகு, ‘இவ்வழக்கு விசாரணயை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது.
ஆனா, கொரோனா ஊரடங்கால விசாரணை தள்ளிப்போயிட்டே இருக்கு. ஒரே குடும்பத்தில் ரெண்டு உயிர்களை இழந்திருக்கோம். நீதிமன்றத்தை மட்டும்தான் முழுமையா நம்புறோம். எங்களுக்கான நீதி நிச்சயம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையில இருக்கோம்” என்றார். நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில், ஒன்றாக ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கும் மாறிவிடுமோ என்ற அச்சம் தற்போது எழுதுள்ளது. நீதிமன்றத்தின் மக்களின் நம்பிக்கை வீண் போகாது என்று நாமும் நம்புவோம்!
source https://www.vikatan.com/news/crime/sathankulam-incident-marks-one-year-what-is-the-status-of-the-trial
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக