பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
உயிரோடு உணவு விழுங்கும் காட்டு விலங்குகளின் மனம் பசிக்காத போது ஏற்படும் அந்த அமைதியை நான் இழந்து விட்டேன். அவற்றின் பரபரப்பின்மை , வேட்டையாடி உண்டு முடித்த திருப்தியில் உருவாகுகின்றது. அதற்கு முன் அவைகளின் மனமும் என்னைப் போலவே பரபரப்போடு இயங்கும்.
என் பசியின் ஆதாரம் தொலைந்து போய்விட்டது. நீங்கள் இப்போது படித்து கொண்டு இருக்கும் போது நான் பிறந்து கூட இருக்கமாட்டேன். என் குரல் வருங்காலத்தில் இருக்கிறது. அங்கு உங்களால் பார்க்க இயலாததால் வருத்த பட வேண்டிய அவசியம் இல்லை. உலகம் மாறிவிட்டது . மிகவும் மாறிவிட்டது. ஆனால் ஒரு சராசரி அறிவியல் பூகம்ப திரைப்படத்தில் காட்டும் மாற்றத்தை உலகம் பெறவில்லை. ஆனால் இங்கு வாழும் சராசரி மனிதனின் சிந்தனைகள் மாறிவிட்டன. அதில் தெரியும் முற்போக்கை தவிர வேறு எதையும் ரசிக்க விருப்பம் இல்லை.
உங்களுடைய காலத்தை பற்றி மேலோட்டமாக படித்ததில் கலையை இன்னமும் மனிதர்கள் உருவாக்கி மகிழ்ந்ததாக கேள்விப்பட்டேன். ஆச்சரியம் அடையாதீர்கள். இங்கு அதற்கும் ஒரு இயந்திரம் வந்துவிட்டது. அதன் பேர் கூட என் வாயில் நுழையவில்லை. சூரியன். அதன் பெயர் சூரியன்.
சூரியன் அடிப்படையில் ஒரு கம்ப்யூட்டர். மனிதனின் காமத்தை மட்டும் தான் அதற்கு அவன் கற்பிக்கவில்லை. அதை தவிர உலக விஷயங்கள் எல்லாம் அதற்கு கற்றுத்தரப்பட்டு சுயமாக சிந்திக்கும் அறிவை ஏற்படுத்தி வைத்து இருக்கிறான் மனிதன் இங்கு. அதனால் அது கதை எழுதுகிறது. சுழியத்திலும் ஒன்றிலும் இலக்கியம் படைக்கிறது. கவிதை எழுதுகிறது. படம் கூட வரைகின்றது. உலகம் மாறுகின்றது என்று வருத்தபடுகின்றாயே என்று கேட்பது புரிகிறது. நான் ஒரு எழுத்தாளன். இதற்கு மேல் என்ன காரணம் சொல்ல இருக்கிறது. காரை பார்த்து மாட்டு வண்டிக்காரன் பொங்கியது போல இருக்கிறது.
என் நிகழ்கால கிறுக்கல்கள் வருங்காலத்தை பாதிக்குமா என்று தெரியாவிட்டாலும் கடந்த காலத்தை கண்டிப்பாக பாதிக்கும். நான் இனி வரப்போபவர்களுக்காக எழுதவில்லை. ஏற்கனவே இருந்தவர்களுக்காக எழுதுகிறேன்.
சூரியன் தினமும் என் கனவில் வருகிறது. என்னோடு கடற்கரையில் அமர்ந்து கொண்டு கதை எழுதுகிறது. அதோடு என்னால் போட்டி போட முடியவில்லை. நான் ஒரு வரி எழுத , அது பத்து வரி எழுதி முடித்து விடுகிறது. இறுதியில் கனவு முடியாமல் நான் எழுந்து விடுகிறேன்.
என்னுடைய பழக்க வழக்கங்கள் மிகவும் சுருங்கி விட்டன. முன்போல் நான் எந்த வேலையும் செய்வது இல்லை. தெரிந்து வைத்து இருந்த கொஞ்ச வேலையும் மறந்து போய்விட்டன.இன்னும் கொஞ்ச நாளில் சாப்பிடவும் மறந்து விடுவேன் என்று நினைக்கிறேன்.
நான் வெளியில் அவ்வளவாக செல்ல மாட்டேன். எனக்கு வீட்டுகுள்ளேயே நாள் கணக்காக அடைந்து கிடக்கும் விநோதாமான பழக்கம் இருக்கிறது. எனது சிறுவயதில் அம்மாவை இழந்து விட்டேன். ஒரு விபத்தில் இறந்து விட்டதை தெரிந்து கொள்ளும் போது நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தேன். என்னுடைய வயது ஏற ஏற , தனிமை என்னும் நண்பனை சந்தித்தேன். உருவம் இல்லாத அவன் என்னை போட்டு மிகவும் படுத்துகிறான். அவ்வபோது நான் வாழாத வாழ்கையை எனக்கு வாழ்ந்து காட்டுகிறான்.
உணராத உணர்ச்சிகளை மனதில் ஊற வைக்கிறான். எனது பாதி உரையாடல்கள் கற்பனை உலகில் அறிமுகமான பெயர் தெரியாத மனிதர்களோடு தான் இருந்து இருக்கின்றன. நான் எழுத தொடங்கியது ஒரு விபத்து. ஆனால் அந்த விபத்தில் நான் யாரையும் இழக்கவில்லை. ஒரு வெள்ளையான ,வெறுமையான தாள் என் முன் இருந்தது. தேவைக்கு அதிகமான எண்ணங்கள் மனதுக்குள் இருந்தன. அதிசயம் நடந்தது அன்று.
கல்லூரியில் இந்த முறை நிஜமாலுமே ஒரு நண்பன் எனக்கு அறிமுகம் ஆனான். அவன் பெயர் ஷ்யாம். அவனிடம் இலக்கியம் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவு கொஞ்சம் இருந்தது. ஆரம்ப காலத்தில் என்னுடைய பாதி குப்பையை அவனிடம் தான் கொட்டினேன்.
“ரொம்ப நல்லா இருக்குடா “ என்று அதே வரியை எப்போதுமே கூறுவான்.
“எனக்கு ஒரு கதை படிக்கும் போது தப்பு கண்டு பிடிக்கிற அளவு அறிவு இல்லைடா. என்னோட மாமா இருக்கார். அவர் கதை நிறையா படிப்பார். அவர்கிட்ட கேளேன்” என்று பேச்சு வழக்கில் ஒரு நாள் கூறினான். அவரிடம் என் முதல் கதையை கொடுத்தேன்.
“எழுத்து நல்லா கோர்வையா வருது. ஆனால் கதை ரொம்ப சோகமா முடியுது”
“மாத்தனுமா சார்” என்று கேட்டேன்.
“மாத்த வேணாம்” என்று கதையை கையில் கொடுத்தார்.
அவர்,”சந்தோசமா எந்த கதை முடிஞ்சு இருக்கு” என்று சிரித்தார்.
அன்று முதல் எந்த கதை எழுதினாலும் அவரிடம் தான் கொண்டு போய் கொடுப்பேன். சில நாட்களுக்கு பிறகு கோர்வையாக ஒரு மாதிரி கதை வந்து இருந்தது. பத்திரிகைக்கு அனுப்ப சொன்னார். அனுப்பிய அடுத்த நாள் எப்போதும் என் வீட்டு வாசலில் சைக்கிள் வந்து நிற்கும். கதையை பத்திரமாக வைத்து கொள் என்று சொல்வது போல இருக்கும் எனக்கு. இரண்டு மாதங்களுக்கு பிறகு முதல் கதையை பத்திரிகையில் பிரசுரம் செய்து இருந்தனர். புத்தகத்தை தூக்கி கொண்டு அவர் வீட்டிற்கு சென்றேன். அவர் அதை வாங்கி பார்த்து எப்போதும் போல சிரித்துக்கொண்டார்.
“ஒரு வழியா மனசு வந்துருச்சா அவனுக்கு..”
திடீரென போன் அடித்தது. அந்த அழைப்பு என்னை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. ஷ்யாம் தான் பேசினான்.”டேய் என்ன உயிரோட இருக்கியா.?கடைக்கு கிளம்பி வா.ஒரு மணிநேரத்துக்குள்ள.”
நான் பேசுவதற்குள் லைன் துண்டிக்கப்பட்டுவிட்டது.
***
ஷ்யாம் இப்பொது ஒரு publishing house வைத்து நடத்துகிறான்.கல்லூரி சமயத்திற்கு பிறகு ஒரு நூலகத்தில் சேர்ந்தான். அதன் பிறகு அவன் என்னை பார்த்தது என் கல்யாணத்தில் .
என் அப்பாவிற்கும் எனக்கும் அவ்வளவாக பேச்சு வார்த்தை கிடையாது. நான் ஏணி என்றால் அவர் கோணி என்பார். ஆனால் செய்ய வேண்டிய கடமையை அவர் என்றுமே செய்யாமல் விட்டது இல்லை. எனக்கும் அவளுக்கும் திருமணம் மிகவும் விமர்சையாக நடந்தது. எனக்கு தெரியாத , அப்பாவின் நண்பர்கள் நிறைய பேரை நான் அங்கு பார்த்தேன். ஷ்யாமும் வந்து இருந்தான்.
“உன்னை நான் அங்க எதிர்பார்க்கல “ என்று அடிக்கடி கூறுவான். எதேர்ச்சியாக என் மண்டபத்தில் அவனுக்கு ஒரு வேலை இருக்க போய் அங்கு வந்து என்னை பார்த்து விட்டான். அவனை கல்லூரியில் அவ்வளவாக தெரியாது. நான் அவனிடம் பேசியதை விட அவனுடைய மாமாவிடம் தான் அதிகம் பேசி இருக்கிறேன். கல்லூரி முடிந்த பிறகும் அவனை நான் பார்க்கவில்லை. எப்படியோ தொடர்பு ஏற்படாமல் போய்விட்டது.
10 வருடங்களாக அவனுடைய அச்சகத்தில் தான் என் கதையை பிரசுரிக்கிறேன். இது வரை பொது விழா , பேட்டி என்று எதுவுமே கொடுத்தது இல்லை. காவேரி என்னை அடிக்கடி திட்டியது உண்டு. காவேரி? என் மனைவியாக இருந்தவள். அவளிடம் நான் ஓரிரு முறை என் கதையை நீட்டி இருக்கிறேன். “ இதெல்லாம் படிக்கிற பொறுமையே எனக்கு இல்லை. படம்னா ஒரேடியா பார்த்து முடிச்சுடலாம். “ என்பாள்.
“நாலு பேட்டி, விழானு கிளம்பினாலாவது உங்களை நாலு பேருக்கு தெரியும் இல்லையா”
நான், “ என்னை தெரியனும் னு யாருக்கும் அவசியம் இல்லை.”
அவள் அதற்கு பிறகு வாதாட மாட்டாள். அவளை குறை சொல்ல முடியாது. என்னிடம் அவளுக்கு எல்லாமே பிடிக்கும், என் எழுத்தை தவிர. 20 களில் ஏற்பட்ட கொரோனா நோயில் இறந்து விட்டாள்.
நான் அங்கு போய் சேர்ந்தபோது நன்கு இருட்டி விட்டது. செல்லும் வழியெல்லாம் மழை பெய்ததால் கொஞ்சம் நனைந்து விட்டேன்.
அந்த அலுவலகம் மிகவும் அழகாக இருந்தது. இங்கு நான் அவ்வளவாக வந்ததே இல்லை,மிகவும் அபூர்வம். எப்போதும் ஷ்யாம் தான் என் வீட்டுக்கு வந்து என் கதையை படித்துவிட்டு எடுத்து செல்வான். கடந்த நான்கு வாரங்களில் நானும் எழுதவில்லை. அவனும் கேட்கவில்லை.
இன்று அவனை சந்தித்தேன்.
“உன்னை எவ்வளவு நேரமா எதிர்பார்கிறது?” ஷ்யாம் சலித்து கொண்டான்.
“என்ன விஷயம் ?” கொஞ்சம் நிதானமாக கேட்டேன்.
“அந்த computer, சூர்யா வுடைய latest version வாங்கி இருக்கோம். அதை பார்க்க தான் உன்னை கூப்டேன்”
என்னுடைய கடந்த காலத்தை பற்றி நினைக்காத மிச்ச நேரத்தில் எதிர்காலம் என்னை பயமுறுத்துகிறது. Classic.
“கடைசியா நீயும் வாங்கிட்டபோல “ என்று கேட்டேன். சிரித்து கொண்டான். அதை பற்றி சொல்ல தொடங்கினான்.
“அதுக்கு writer’s block வராது. மனுஷங்க எடுத்துக்கிற ஆறு மாசத்தில இருந்து ஒரு வருஷத்துக்கு இந்த computer அஞ்சு நிமிஷத்துல ஒரு கதை எழுதி கொடுத்துருச்சு. “
“கலை மனிதர்களுக்கு ஆனது. நேரத்தை மிச்சபடுத்தினாலும் ஒரு உணர்ச்சி குறைஞ்சபட்சமா என்னால குடுக்க முடியும்.”
“ரொம்ப personal ஆக எடுத்துக்காத டா. அறிவியல் இன்னும் நமக்கு என்ன எல்லாம் பைக்குள்ள வெச்சு இருக்கோ”
“ஒரு கைப்பிடி ஏமாற்றம்”
“கவிதை “ என்றான். என்னையைவே ஒரு நிமிடம் உற்று பார்த்தான்.
“உனக்கு அது எப்படி வேலை செய்யுதுனு காட்றேன்”
“டிவி முழுக்க அது தான விளம்பரம். Printout எடுக்குற மாதிரி வருது. “
“உனக்கு என்ன genre ல ,எவ்வளவு பக்கத்துக்கு கதை வேணுமோ அதை நீ input ஆ குடுத்தனா அஞ்சு நிமிஷத்துல computer கதை எழுதும்” என்றான்.
“கவிதை , எழுதி வெச்சுகிறேன்” என்றான்.
ஒரு பெண்ணை அழைத்து server roomஇற்கு இவரை கொண்டு போய் நிறுத்து. எப்படி வேலை செய்யுதுனு காட்டு. நான் கொஞ்ச நேரத்துல வரேன். “
அந்த பெண்,”ஜெகன் லைன்ல இருக்கார் சார். புதுசா நாம அச்சிட போற sci-fi series உடைய முதல் பிரதி கேட்கிறார். நல்லா இருந்தா television series rights பத்தி பேசலாம் னு சொல்றார்.”
அவன் சரி என்பது போல தலை ஆட்டினான்.
இப்பொது நான் ஒரு பெரிய அறைக்குள் அழைத்து செல்லப்பட்டேன். அந்த அறைக்குள் நிறைய server கள் இருந்தன. அவற்றுள் முதன்மை computer உடைய பட்டன் ஐ on செய்து சில button களை தட்டினாள். பிறகு பொதுவாக ஒரு input கொடுத்தாள். ஐந்து நிமிடத்தில் ஒரு file திரையில் தெரிந்தது.
ஷ்யாம் பின்னால் இருந்து “ தேவைப்பட்டா printout எடுத்துக்கலாம்”
என்றான்.
நான் கிளம்புகிறேன் என்று தான் முதலில் சொன்னேன்.
“படிச்சு பாரு பொறுமையா “ என்றான்.
“விருப்பம் இல்லை.” என்றேன்.
“மக்கள் விரும்புறாங்க. “ என்றான்.
“சரி ஒரு காபி மட்டும் குடிச்சுட்டு போ” என்றான்.
***
வீட்டுக்கு வரும்போது மழை நின்று விட்டிருந்தது. ஊர் அடங்கி இருந்தது. என்னுடைய மேஜையில் அமர்ந்த போது உறங்கும் நேரம் வந்து விட்டது. அடிக்கடி இறந்து போய் விடலாமா என்று யோசித்தது உண்டு. ஆனால் எண்ணத்தில் ஏற்பட்ட வீரியம் செயலில் இருந்தது இல்லை. நான் எதற்காக இருக்கிறேன்?என்னால் இந்த உலகத்திற்கு என்ன பெரிதாக கிடைத்து விட்டது. நான் இருப்பதற்கு முன்னால் இந்த உலகத்திற்கு நான் தேவைப்படவில்லை. நான் இறந்த பிறகு என்னை யாரும் தேட போவது இல்லை. ஆனால் இருப்பதற்கு இருந்து தொலைக்கலாம் என்று தோன்றும் போதே இறப்பதற்கு இருந்து தொலைக்கலாம் என்று தோன்றும்.
என்னை விட வேகமாக எழுதும் ஒரு இயந்திரத்தின் மீது எந்த அளவு கோபம் வருகிறதோ அந்த அளவு அது எவ்வளவு முட்டாள்தனம் என்று தோன்றுகிறது.
ஷ்யாம் இன் மாமா ஞாபகம் வந்தது. அவர் எனக்கு திருமணம் நடக்கும்போதே மெதுவாக நடமாடிக் கொண்டு இருந்தார். இப்போது என்ன ஆனார் என்று தெரியவில்லை. நான் பேசி ரொம்ப நாள் ஆகிறது. அவருக்கு போன் செய்தேன்.
எடுத்தார்.
“என்னப்பா எப்படி இருக்க நல்லா இருக்கியா ? கதை எல்லாம் எழுதுறியா ?” என்று ஆரம்பித்தார்.
“இருக்கேன் சார். ஷ்யாம் ஆபீஸ் போயிட்டு வந்தேன். அவன் அந்த புது computer வாங்கி இருக்கான். பார்த்துட்டு வந்தேன்.”
“அது என்ன computer ?”
நான் , “ மனுஷங்க மாதிரி ,அவங்கள விட வேகமா கதை எழுதும். “
“என்னமோ எனக்கு ஒன்னும் இதெல்லாம் புரிய மாட்டேங்குது. நீ எழுதிட்டா என்னை பார்க்க வா. கதையை எடுத்துட்டு வா.”
“ஷ்யாம்” என்றேன்.
“அவன் ஒரு கிறுக்கன். ஏதோ பண்ணிட்டு போறான். நீ கொண்டு வாப்பா” என்று கூறிவிட்டு வைத்து விட்டார்.
நான் வழக்கம் போல எழுத தொடங்கி விட்டேன். இதை இனிமேல் யார் படிக்க போகிறார்கள் என்ற எண்ணம் எட்டி பார்த்தது. நான் மாமாவுக்காக எழுதுகிறேன். இறந்தவர்களுக்காக எழுதுகிறேன். மனிதர்களின் மதிப்பு தெரிந்து , தொலைந்து போனவர்களுக்காக எழுதுகிறேன்.
-ஷ்யாம் சுந்தர் ப.சு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-of-a-writer-who-was-in-future-world
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக