Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

கொரோனா போலவே ஒரு வைரஸ், ஹைப்ரிட் குழந்தைகள்... `ஸ்வீட் டூத்' சீரிஸ் பேசும் அரசியல் என்ன?

உலகம் எல்லோருக்கும் சமமானதாக இருப்பதில்லை. வஞ்சிக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து பார்க்கும்போது நிச்சயம் அது வேறொன்றாகவே தெரியும். அதேபோல், தனக்கு உலகம் சரியாகவே இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு உலகத்தை மாற்றவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே வரப்போவதில்லை.

ஆனால், ஒரு வைரஸ், இந்த உலகத்தையே நிலைகுலையச் செய்திருக்கிறது. எங்குப் பார்த்தாலும் இறப்புகள், நோய்த் தொற்றிவிடும் என்று மக்களிடையே பெரும் பீதி, மாஸ்க் அணிந்த முகங்கள், நோய்வாய்ப்பட்டவர்களைக் கண்டாலே ஓடும் பயம் எனச் சமூகத்தின் அமைதியே ஆட்டம் காண்கிறது. நிற்க... இது கொரோனா வைரஸ் கதையல்ல. நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் 'ஸ்வீட் டூத்' கதையின் பின்னணியும் இதுதான். ஆனால், 'அது வேற ரமணா' என்பதுபோல இது வேறொரு வைரஸ்.
ஸ்வீட் டூத் | Sweet Tooth

பிரச்னைகள், குழப்பங்கள் இந்த வைரஸுடன் நிற்கவில்லை. 'ஸ்வீட் டூத்' கதை நடக்கும் உலகில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். ஒன்று இந்த வைரஸ் பரவல், அதைத் தொடர்ந்து நடக்கும் 'தி கிரேட் க்ரம்பிள்'. அதாவது சமூகத்தின் அமைதி நிலைகுலைந்து மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள எடுக்கும் சுயநலமிக்க முடிவுகள், அதனால் ஏற்படும் பிரச்னைகள், அரங்கேறும் குற்றங்கள் என அது நீள்கிறது.

இரண்டாவது சம்பவம், வைரஸ் பிரச்னையின்போதே மனித இனம் கண்டிராத வேறொரு அதிசயமும் நடக்கிறது. புதிதாகப் பிறக்கும் குழந்தைகள், விலங்குகளும் மனிதர்களும் கலந்த ஹைப்ரிட்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் விலங்குகளின் உடல் அமைப்புகளும் அவற்றின் தன்மைகளும் எட்டிப் பார்க்கின்றன. புரியாத, புலப்படாத ஒன்றைக் கண்டு அஞ்சுவதுதானே மனித இயல்பு! இந்தப் புதிய வைரஸ் பரவலுக்குக் காரணம் இப்படிப்பட்ட குழந்தைகளே என நம்புகிறது மனித இனம். தங்களைக் காத்துக்கொள்ள இக்குழந்தைகளைக் கொல்லும் எல்லைக்கும் செல்கிறார்கள் மனிதர்கள்.

இப்படியான குழப்பங்களுக்கு நடுவே இதுவரை உலகையே பார்த்திராத ஒரு ஹைப்ரிட் சிறுவன், முதன்முதலில் இந்த உலகில் காலடி எடுத்துவைத்தால்... தன் குழந்தைத்தன்மையுடன் அவன் இந்த வைரஸ் நிறைந்த, சுயநலமிக்க மனிதர்கள் நிறைந்த உலகை எப்படிப் பார்ப்பான்? மான் மற்றும் மனிதனின் கலவையாகப் பிறந்த கஸ் எனும் சிறுவனின் கதை இது. தலையிலிருந்து நீளும் மான் கொம்புகள், மான்களைப் போன்ற காதுகள், இரவிலும் துல்லியமாகப் பார்க்கும் மானின் கண்கள், மானின் மோப்ப சக்தி, கூடவே மனிதர்களுக்கு இருக்கும் அன்பு, பாசம் போன்ற குணாதிசயங்கள் என ஒரு குழப்பமான குழந்தையின் சாகசப் பயணம் இது.

ஸ்வீட் டூத் | Sweet Tooth

தன் தந்தையின் அரவணைப்பில், காட்டுக்குள் பத்து வருடங்களைக் கழித்துவிட்ட கஸ், அப்பாவை அந்தக் கொடிய வைரஸுக்கு பலிகொடுக்கிறான். கையிலிருக்கும் ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு தன் தாயைத் தேடி வெளியுலகுக்கு வருகிறான். முன்னாள் கால்பந்தாட்ட வீரனான டாமி ஜெப்பர்ட், முதலில் கஸ்ஸை உதாசீனப்படுத்தினாலும், பின்னர் அவனின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்டு அவனுக்கு உதவ முற்படுகிறான். தாயைத் தேடிச் செல்லும் கஸ்ஸும், தன் இறந்த காலத்தை மறக்க முடியாமல் சுற்றும் ஜெப்பர்டும், வைரஸுக்கும், ஹைப்ரிட் குழந்தைகளுக்கும் உண்டான தொடர்பைக் கண்டறிந்தார்களா என்பதே கதை!

DC காமிக்ஸ் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு 'அயர்ன்மேன்' ராபர்ட் டௌனி ஜூனியர் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த சீரிஸ் எட்டு எபிசோடுகளாக விரிகிறது.

கஸ் எனும் சிறுவனின் கதைதான் இது என்றாலும், வைரஸுக்கு மருந்து தேடும் இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர், நோயாளியாக அவரின் மனைவி, ஹைப்ரிட் குழந்தைகளைப் பாதுகாக்கச் சுற்றும் டீன்ஏஜ் மனிதக் குழந்தைகள் படை, அதன் தலைவி பேர் (கரடி) எனும் பதின்வயது சிறுமி, ஹைப்ரிட்களை ஜூவில் பாதுகாக்கும் பெண், ஹைப்ரிட் குழந்தைகளைக் கொல்லத் துடிக்கும் வில்லன், கால்பந்தாட்ட வீரன் ஜெப்பர்ட் என எக்கச்சக்க கதாபாத்திரங்கள்.

ஆனால், அனைவருக்குமே நிறைவான ஒரு பின்கதையும், ஒரு கேரக்டர் ஆர்க்கும் வைத்திருப்பது தனிச்சிறப்பு. அவரவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கேற்றவாறு அவர்கள் எடுக்கும் முடிவுகள், மாறும் எண்ணங்கள், இவை அனைத்தும் பொதுவான ஒரு புள்ளியில் வந்து இணைதல் எனத் தெளிவானதொரு திரைக்கதை அமைப்பு. அதிக வேகம் காட்டும் மசாலாவாகவும் இல்லாமல், நீண்ட நெடிய ஷாட்கள், பக்கம் பக்கமாக வசனங்கள் பேசும் கலைப் படைப்பாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் ஒரு சரியான மீட்டரைப் பிடித்திருக்கிறார்கள்.

ஸ்வீட் டூத் | Sweet Tooth

இதில் அதிகம் ஈர்ப்பது கஸ் மற்றும் ஜெப்பர்டு இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரிதான். அதேபோல், 'பேர்' எனும் பதின்வயது சிறுமியாக வரும் ஸ்டெஃபெனியாவுக்கும் இவர்களுடன் இணைந்து சுற்றும் முக்கியமான பாத்திரம். என்னதான் கஸ்ஸை முதலில் உதாசீனப்படுத்தினாலும், ஆபத்து என்றதும் காக்கும் ஆபத்பாந்தவனாக ஜெப்பர்டு மாறுவது முதிர்ச்சி. காடுகளில் சுற்றித் திரியும் பல காட்சிகள் கண்களுக்கு விருந்து என்றால், அதற்கு நேர்மாறாக அமைகின்றன நகரத்தில் அரங்கேறும் வைரஸ் தொற்று தொடர்பான காட்சிகள். இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர் அதித்ய சிங்காக வரும் அடீல் அக்தருக்கு எந்நேரமும் பதற்றத்திலேயே இருக்கும் பாத்திரம். மூக்கிலிருந்து வழியும் கண்ணாடி, மனைவியைக் காப்பாற்ற எடுக்கும் ஆபத்தான முயற்சிகள் என அவர் திரையை ஆக்கிரமிக்கும் போதெல்லாம் கதை வேகமாக நகர்கிறது.

மற்றொரு புறம், ஹைப்ரிட் குழந்தைகளைக் காக்கப் போராடும் ஏமியின் பாத்திரப் படைப்பு சிறப்பு. அவருக்கும் பன்றி - மனித ஹைப்ரிட்டாக வரும் வெண்டி எனும் சிறு பெண்ணுக்குமான உறவு கவிதையான வார்ப்பு. ஆனால், இவர்கள் அனைவரையும் ஓரங்கட்டி நம் மனதில் இடம்பிடிப்பது கஸ்ஸாக வரும் கிறிஸ்டியன் கான்வெரிதான். மான் கொம்புடன் அறியாமை, குழந்தைத்தன்மை, அப்பாவித்தனம் என எதுவுமே மாறாமல் அவன் பேசும் வசனங்கள், எடுக்கும் முடிவுகள்தான் இந்தக் கதையின் அடித்தளம். கஸ் அழும்போதும், சிரிக்கும்போதும் அத்தனை யதார்த்தம் இழையோடுகிறது. தன் அப்பாவை பப்பா என்றும், ஜெப்பர்டை பிக்மேன் என்றும் அவன் அழைப்பதே அவர்களின் பெயர்களாகிப் போவது சிறந்த கதை சொல்லும் யுக்தி.

ஸ்வீட் டூத் | Sweet Tooth
கதை ஃபேன்டஸியாக மாறிவிட வாய்ப்புகள் பல இருந்தும் சயின்ஸ் ஃபிக்ஷன் என்ற எல்லைக்குள்ளாகவே விளையாடியிருக்கிறார்கள். கஸ்ஸுக்கு ஓர் ஆபத்து என்றவுடன் பெரிய மான் ஒன்று எங்கிருந்தோ தோன்றுவது, அவன் வருத்தத்துடன் ஓடும்போது மான்கள் கூட்டமும் அவனோடு ஓடுவது போன்றவை காட்சிகளாக விரியும் ஹைக்கூ கவிதைகள்.

வாய்ஸ் ஓவரில் கதை சொல்லும் யுக்தி இப்படியானதொரு கதைக்கு இன்னமும் வலு சேர்த்திருக்கிறது. மொத்தம் மூன்று ஒளிப்பதிவாளர்கள், இரண்டு எடிட்டர்கள் உழைத்திருக்கிறார்கள். ஜெஃப் கிரேஸின் பின்னணி இசை அதிர்ந்து ஒலிக்காமல் கதையின் ஓட்டத்துடன் வருடிச் செல்கிறது. காமிக்ஸிலிருந்து கதையை எடுத்து நிறைய மாற்றங்கள் செய்து, குறிப்பாக கொரோனாவை நினைவூட்டும் விஷயங்களைச் சேர்த்து இதை உருவாக்கியிருக்கிறார் ஜிம் மிக்கில். கொரோனா காலத்தில் பார்க்கையில் நிறைய விஷயங்கள் க்ளிக்கானாலும் சில சறுக்கல்களும் இருக்கவே செய்கின்றன.

Also Read: மனிதன் vs மிருகம்: வித்யா பாலன் நடிப்பில் அமேஸானில் வெளியாகியிருக்கும் Sherni-யை பார்க்கலாமா?

'எக்ஸ்-மென்' பாணி மியூட்டன்ட் கதையாகவே இது விரிந்தாலும் பெரியளவிலான சாகசங்கள் ஏதுமில்லாமல் போனது மைனஸ். ஒரு ரயில் சீக்குவென்ஸ் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான ஆக்ஷனாக இருக்கிறது. சூப்பர்ஹீரோவாக காஸ்ட்யூம் அணிந்துகொண்டு சண்டைகள் செய்யும் தொடர் இது இல்லை என்றாலும், கஸ் போன்ற ஹைப்ரிட் சிறுவர், சிறுமியரின் சக்திகளை வெளியே காட்டும் காட்சிகளை இன்னமும் சேர்த்திருக்கலாம். மருத்துவ ஆராய்ச்சியாளர் அதித்ய சிங்கின் மனைவி வைரஸ் தாக்கியவர் என்றாலும், இத்தனை சுயநலத்துடனே சிந்திப்பாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஹைப்ரிட் முதலில் வந்ததா, வைரஸ் முதலில் வந்ததா என்ற கேள்விக்கு ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதிலைச் சொல்லியிருந்தாலும் இன்னமும் பல கேள்விகளுக்கு விடை சொல்லாமலே முடிந்திருக்கிறது சீசன் 1.

ஸ்வீட் டூத் | Sweet Tooth

கடைசி எபிசோடின் கடைசி காட்சியில், கஸ்ஸை நோக்கி வருகிறார்கள் பிற ஹைப்ரிட் குழந்தைகள். அவர்கள் அனைவருமே கஸ்ஸை அப்போதுதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். அதில் வெண்டி எனும் பன்றி - மனித சிறுமி கஸ்ஸைப் பார்த்தும் வந்து அணைத்துக் கொள்கிறாள். ஒடுக்கப்பட்டவர்கள் ஓர் அணியாகத் திரள வார்த்தைகள் கூட தேவையாக இருப்பதில்லை. அவர்களின் வலியைச் சொல்லாமலே உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக அணி சேர்வது ஓர் அவசியமான அரசியல் தேவை. அதை நெகிழ்ச்சியாகக் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு.

அந்தச் சிறுமி தரும் அணைப்பு, அந்த ஆதரவு, இங்கே பலருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று, பலரும் பிறருக்குத் தரவேண்டிய ஒன்று!


source https://cinema.vikatan.com/web-series/netflix-series-sweet-tooth-mesmerizes-with-its-fairy-tale-template

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக