ஏர் பொல்யூஷன்... அதாவது, காற்றுமாசு என்றவுடன், நம் அனைவரின் மனதிலும் சாலைகளில் வாகனங்கள் கக்கும் கரும்புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் பெரும்புகை, பஞ்சாலை, சிமென்ட் ஆலைகள், கட்டடக் கட்டுமானங்கள் புழுதி பரப்பி காற்றில் கலக்கும் நுண்ணிய துகள்கள் என வெளிக்காற்றில் நிறைந்திருக்கும் மாசுக்கள்தான் உடனடியாக நினைவுக்கு வரும்.
பொதுவாக நாம் வெளியில் இருக்கும் நேரத்தைக் காட்டிலும் வீடு, அலுவலகம், பள்ளி என ஏதோ ஒரு அறைகளுக்குள்ளேயே இருக்கும் நேரம்தான் அதிகம். அதிலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வீட்டின் உள்ளேயே இருக்கும் நேரம் 80-90 சதவிகிதமாகும். அப்படியிருக்க, இந்த இடங்களின் காற்றை மாசடைய வைப்பதாலோ அல்லது மாசடைந்த காற்றை சுவாசிப்பதாலோ ஏற்படும் பாதிப்புகள் எப்படிப்பட்டது?
உண்மையில் நமது காற்று மண்டலமானது 79% நைட்ரஜனும், 20% ஆக்சிஜனும், 3% கரியமில வாயுவும், சிறிதளவு பிற வாயுக்களும் கொண்ட கலவையாகும். இந்த சமச்சீர் நிலை மாறாத வரை, எந்தவொரு பாதிப்பும் நமக்கு ஏற்படுவதில்லை. அதேசமயம் இந்தக் காற்றின் சமச்சீர் நிலை மாறி, திடத்துகள்கள் மற்றும் தேவையில்லாத பிற வாயுக்கள் கலக்கும்போது காற்று மாசு ஏற்படுகிறது. இது வெளியே மட்டுமல்ல, வீட்டிற்குள் இருக்கும்போதும் ஏற்படக்கூடும்.
ஆம்... நாம் உள்ளறையிலேயே வசிக்கும்போது அங்கே ஏற்படும் அல்லது நாம் ஏற்படுத்தும் மாசுகள் 'இண்டோர் ஏர் பொல்யூஷன்' என அழைக்கப்படுகிறது. இது வெளிக்காற்றைக் காட்டிலும் ஐந்து மடங்கு மோசமாக உள்ளது என்பதுடன் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம். அதனால், நமக்கு இண்டோர் ஏர் பொல்யூஷன் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். அதிலும் இந்த கோவிட் சமயத்தில், வெளியே செல்லமுடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் நமக்கு இதற்கான தீர்வுகளும் அதிகம் தேவைப்படுகிறது.
உண்மையில் மரங்களிலும், குகைகளிலும் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மனிதன், இயற்கையின் மழை, குளிர், காற்று, வெயில், புயல் ஆகியவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள செயற்கையாக உருவாக்கிய பாதுகாப்பு கட்டமைப்புதான் வீடு. ஆனால், அந்த பாதுகாப்பு அமைப்பையே பாதுகாப்புக்கு எதிராக மனிதன் மாற்றிவிடுகிறான் என்பதுதான் வேதனை.
எங்கிருந்து உற்பத்தியாகிறது இந்த இண்டோர் ஏர் பொல்யூஷன் என்றால், நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அனைத்தையும் கைகாட்டுகிறது அறிவியல்.
ஆம்... கிராமங்களின் விறகு அடுப்பில் தொடங்கும் கரியமில வாயு, நைட்ரஜன் ஆக்சைடுகள் முதல் நகரங்களின் சமையலறை எரிவாயு, இன்டக்ஷன் அடுப்புகள், மைக்ரோவேவ், ஃபிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின்கள், பூஜையறையின் அகர்பத்திகள், கற்பூரம் மற்றும் சாம்பிராணி, படுக்கையறையின் கொசு விரட்டிகள், பூச்சி உருண்டைகள், கழிவறைகளின் கிருமிநாசினிகள், தெளிப்பான்கள், அனைத்து அறைகளின் பெயின்ட்கள் மற்றும் வார்னிஷ்கள், பூஞ்சை, பாசி உள்ளிட்ட நுண்கிருமிகள், ரேடான் கதிரியக்கம், இவையனைத்திற்கும் மேலாக, சிகரெட் புகை எனும் மிகப்பெரிய வில்லன் என அனைத்தையும் இண்டோர் ஏர் பொல்யூஷனில் உள்ளடக்கியுள்ளது வீடு என்ற கட்டமைப்பு.
இதில் மனிதன் தனது சௌகரியத்திற்காக ஏர் கூலர், ஏர் கண்டிஷ்னர் ஆகியவற்றைப் பொருத்தி, ஜன்னல்களையும், கதவுகளையும் அடைத்துவிட, சுவாசித்த காற்றே மீண்டும் உள்ளே சுற்றி, தேவையான ஆக்சிஜனைக் குறைத்துவிடுகிறது. இப்படி சுவாசித்த காற்றையே தொடர்ந்து சுவாசிப்பதை, 'காற்று தீட்டுப்படுதல்' என்று குறிப்பிடும் பழந்தமிழர் மருத்துவம், இதனால் மூட்டு தண்டுவட வலிகள் மற்றும் வாத நோய்கள் ஏற்படலாம் என்றும் கூறுகிறது.
உண்மையில் அடைக்கப்பட்ட வாகனம், அலுவலகம், படுக்கையறை, பள்ளி வகுப்புகள் என மாசுபட்ட காற்றுடன் வாழ்பவர்கள் அனைவருக்கும், இந்த உள்ளரங்க காற்று மாசுகளால் சாதாரண இருமலில் தொடங்கி ஆஸ்துமா, Legionnaires நிமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய், புற்றுநோய் உட்பட தீராத நோய்கள் வரை உண்டாகி, பல்வேறு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
பொதுவாகவே தனது வாழ்நாளின் பாதி அளவிற்கும் மேலாக வீட்டிற்குள் வசிக்கும் மனிதனுக்கு, சமீபத்திய கோவிட் நோய் இன்னும் அதிகமாக வீட்டிற்குள் அடைத்து வைக்க, இந்த இண்டோர் ஏர் பொல்யூஷனின் தாக்கம் முன்பைக் காட்டிலும் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்கிறது உலக சுகாதார அமைப்பு. சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட அதன் அறிக்கை, இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 17 லட்சம் மக்களை இந்த ஏர் பொல்யூஷனால் இழந்துள்ளோம் என்கிறது.
இதற்கான தீர்வுகளையும், வழிமுறைகளையும் வழங்கும் ஆலோசகர்கள்,வீட்டை சுத்தமாகத் துடைப்பதில் ஆரம்பித்து, வீட்டிற்குள் காற்றோட்டத்தை அதிகரிப்பது, கதவு ஜன்னல்களைத் திறந்து வைப்பது, குப்பை மற்றும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது, இரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது, வீட்டிற்குள் செடிகள் வளர்ப்பது, அறைக்குள் சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்ப்பது, ஃபில்டர்களை உபயோகப்படுத்துவது என இயல்பான அறிவுரைகளை நிறையவே நமக்கு அளிக்கின்றனர்.
எது எப்படியென்றாலும் நாம் அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். வாழ்வது வீடோ, அலுவலகமோ, இல்லை இந்த பரந்த உலகமோ எதுவாயினும்... வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும், நரகமாக்குவதும் நம் கைகளில்தான் உள்ளது!
#EnvironmentDay
source https://www.vikatan.com/news/healthy/indoor-air-pollution-kills-people-more-than-outdoor-air-pollution
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக