Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

``இது பெண் காவலர்களுக்கான சலுகையா? ஆண் காவலர்களுக்கான சுமையா?" - திலகவதி ஆதங்கம்

ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியமான பிரமுகர்கள் பயணிக்கும் பாதைகளில், சில அடி இடைவெளியில் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவலர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அந்தப் பணியில் இருக்கும் பெண் காவலர்கள், சில அசெளகர்யங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, இதுபோன்ற சாலைப் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து, அவர்களுக்கு வேறு பணி வழங்க, தமிழக காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் உத்தரவிட்டார்.

பெண் காவலர்கள்

இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. முதல்வரின் இந்த அறிவிப்புக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான திலகவதி ஐ.பி.எஸ். இதுபோன்ற பாதுகாப்புப் பணியில் ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களைச் சரிசெய்து, பெண் காவலர்களையும் சாலைப் பாதுகாப்புப் பணிகளில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இதுகுறித்து திலகவதியிடம் பேசினோம்.

``பெண் காவலர்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பைப் பாராட்டுகிறேன். ஆனால், இந்த அறிவிப்புக்குப் பின்னால் ஏற்படவிருக்கும் சிக்கல்களையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும், காவல்துறையினரின் முக்கியமான பணிகளில் ஒன்று. இந்த வகையில், முதல் நிலை காவலர்கள்தாம் சாலையில் நின்று கொண்டு மணிக்கணக்கில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். சில நேரங்களில், நாளைக்கு வருகை தரும் பிரமுகருக்காக, முந்தைய நாளிலேயே பாதுகாப்புப் பணிக்காகச் சாலையில் நிறுத்தப்படுவார்கள். இதுபோன்ற பணி முடிந்ததும், காவல் நிலைய வேலைகள், கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட தங்களுக்கான மற்ற பணிகளைச் செய்வார்கள்.

காவலர்கள்

இத்தகைய முதல்நிலை காவலர்களில் பெண்களும் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். பணிக்கு வரும்போதே, தங்களுடைய பணிச்சூழல் குறித்து இவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். பணிக்கு வந்த பிறகு, இத்தகைய பெண் காவலர்களுக்குப் போதிய பயிற்சியும் வழங்கப்படுகின்றன. எனவே, தங்களுக்கு உண்டான பணிகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டியது அவர்களின் கடமை. அதைத்தான் அவர்களும் செய்துகொண்டிருந்தனர்.

இதுபோன்ற சாலைப் பாதுகாப்புப் பணிகளில் இருக்கும் ஆண் மற்றும் பெண் காவலர்கள், ஒரே இடத்தில் பல மணிநேரம் நிறுத்தப்படுகின்றனர். வெயிலின் தாக்கம், கால்வலி சிக்கல்களுடன், இயற்கை உபாதைகளைக் கழிப்பது போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட போதிய வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால், உடல்ரீதியாகப் பெண் காவலர்கள்தான் கூடுதல் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளைத்தான், போக்குவரத்துப் பணிகளில் ஈடுபடும் காவலர்களும் எதிர்கொள்கின்றனர்.

சாலைப் பாதுகாப்பில் காவலர்கள்

இதுபோன்ற பணிகளில் பெண் காவலர்களுக்குக் கூடுதல் சிரமங்கள் இருப்பதை உணர்ந்து, அவர்களுக்கு இதுபோன்ற பணிகளில் விலக்கு அளிப்பதால், சாலைப் பாதுகாப்பு பணிகளில் ஆண் காவலர்கள் கூடுதலாகப் பயன்படுத்தப் படுவார்கள். மணிக்கணக்கில் சாலையில் நிற்பதால், ஆண் காவலர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதா? அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சரிசெய்வது யார் பொறுப்பு?

ஒரு பெண் காவலர் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, அதைப் பல்வேறு சிறுமிகள், பெற்றோர்கள் கவனிக்கலாம். அதன் மூலம், அந்தப் பெண் காவலரை முன்னுதாரணமாக வைத்து, `இவரைப் போல துணிச்சலான பணியில் நாமும் சேரலாம்' என்ற எண்ணம் பெண்களுக்கு ஏற்படலாம். இப்படி, நம்முடைய இயல்பான பணிகளால் சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் பல்வேறு பயனுள்ள மாற்றங்கள் உருவாகலாம். எனவே, அவரவர் பணிகளை மகிழ்ச்சியாகவும் சிரமங்கள் இன்றியும் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டுமே தவிர, ஒருவர் சுமையை இன்னொருவருக்கு மடைமாற்றி கூடுதல் அழுத்தங்களை உருவாக்கக் கூடாது. 

திலகவதி

பெண் காவலர்கள் பயன்படுத்தப்படாததால்தான், தங்களுக்குப் பணிச்சுமை கூடுகிறது என்று ஆண் காவலர்கள் நினைப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கிவிடக் கூடாது. ஆர்வமுடன் பணிக்கு வரும் பெண் காவலர்களுக்கு, அந்தப் பணியின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவங்களும் இதன் மூலம் தடைப்படும்" என்று அழுத்தமாகக் கூறும் திலகவதி, இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார்.

``சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பணிகளில், மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் காவலர்களை மாற்றம் செய்ய வேண்டும். அந்தப் பணியில் உள்ளவர்களுக்கு, மொபைல் டாய்லெட் வசதி, பெண்களுக்கான மொபைல் டாய்லெட்டில் நாப்கின் வசதி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நடமாடும் உணவக வசதிகளை  ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற பணியில் இருக்கும் காவலர்களுக்குப் போதுமான அளவு ஓய்வு அளிக்கப்பட வேண்டும். இதைச் செய்தாலே, நடைமுறைச் சிக்கல்கள் பெருமளவில் சரியாகும். 

போக்குவரத்துக் காவலர்கள்

Also Read: பெண் அர்ச்சகர்கள்... ஸ்டாலின் அரசின் முயற்சி ஒரு புரட்சியா?

குறிப்பாக, இதுபோன்ற பாதுகாப்புப் பணியில் அதிக அளவில் காவலர்கள் பயன்படுத்தப்படுவதே தேவையற்றதுதான். சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில், அவர்களின் பாதுகாப்புக்காக அதிக அளவிலான காவல்துறையினரைப் பயன்படுத்தலாம். ஆனால், இன்றைய நடைமுறை யதார்த்தம் அப்படியா இருக்கிறது? காவல்துறை பாதுகாப்பு என்பதை, சமூகத்தில் மதிக்கப்படும் நபராக அடையாளப் படுத்திக்கொள்ளவும், கெளரவ விஷயமாகவும் நினைத்து முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் சாலைகளில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரைக் குவிக்கின்றனர். இதனால், காவல்துறையினர் பலரும் மக்கள் பணியில் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ந்துள்ள இன்றைய சூழலில், இதுபோன்ற பாதுகாப்புப் பணிகளில் ரோபோக்களைப் பயன் படுத்துவது, சிசிடிவி கேமரா கண்காணிப்பை இன்னும் மேம்படுத்துவது போன்றவற்றை அதிகப்படுத்தலாம்" என்பவர்,

``காவல்துறையில் பணியாற்றும் பெண்கள், கர்ப்பமாக இருக்கும்போது புடவை அணிந்து கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர். அதற்கான அனுமதி கேட்டு, தங்கள் மேலதிகாரியிடம் கடிதம் தருவார்கள். அந்தக் கடிதம் ஒவ்வோர் அதிகாரியாகக் கடந்து, சம்பந்தப்பட்ட ஓர் உயரதிகாரிக்குச் சென்று ஒப்புதல் கிடைப்பதற்கு மாதக்கணக்கில் ஆகிவிடும். இதுபோன்ற கால விரயத்தைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட உயரதிகாரியிடமே நேரடியாகக் கடிதம் அளிப்பதற்கு அல்லது மிக விரைவாக அனுமதி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். 

காவல்துறை

Also Read: `பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே என்பது தவறாகவே முடியும்!' - மனநல மருத்துவர்

காவல்துறையில் பணியாற்றும் பெண்கள், ஐந்து வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க சிரமப்படுகின்றனர். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் போதிய அளவில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை பிரத்யேகமாக அமைக்க வேண்டும். இவற்றைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தினால் சிறப்பான முன்னெடுப்பாக அமையும்" என்று முடித்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/ex-ips-thilakavathi-shares-her-view-on-women-police-officers-exempted-from-cm-bandobast

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக