Ad

செவ்வாய், 8 ஜூன், 2021

"100 ஆண்டு சமூகநீதிப் பயணத்தில் ஓர் மைல் கல்"-அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன்

கலைஞர் பிறந்த நாளில் அவரின் வாழ்நாள் விருப்பத்தை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? என்ற தலைப்பில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதி மாணவர்கள் சங்க தலைவர் ரங்கநாதன் பேட்டியை கடந்த 3-ம் தேதி விகடன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம்

அக்கட்டுரையில், 'அர்ச்சகர் பயிற்ச்சி முடித்து பல வருடங்கள் கடந்தும், பரம்பரை அர்ச்சகர் நியமனம் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தங்களுக்கு கோயில்களில் பணி வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் கலைஞரின் விருப்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்திருந்தார்.

இந்த நிலையில், '100 நாட்களில் பயிற்சி முடித்த அனைத்து சாதியினர் அர்ச்சகராக்கப்படுவர்கள்' என்று, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தெரிவித்துள்ளார். இத்தகவல் கேட்டு அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேகர்பாபு

இந்த அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன், "தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறைத் தீண்டாமையை அகற்றும் விதமாக கலைஞர் கொண்டு வந்த இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தற்போது நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக நன்றி.

திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுகால சமூக நீதிப் பயணத்தில் இந்த அறிவிப்பு ஓர் மைல் கல்லாகும். கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வது மட்டுமல்லாது, அரசியல் சட்டத்தின் உயரிய நோக்கமான சமத்துவ சமூகத்தை அடையும் சட்டப்பூர்வ முயற்சி இது.

ரங்கநாதன்

இந்த சாதியைச் சேர்ந்தவர் பூஜை செய்தால்தான் மகிழ்வேன் என்று கடவுள் ஒருபோதும் சொல்லவில்லை. கடவுள் அனைத்து மக்களையும் தன் பிள்ளைகளாகவே பாவிக்கிறார். குறிப்பாக அறநிலையத்துறை கோயில் அர்ச்சகர் பணி என்பது அரசுப்பணி ஆகும்.

அரசுப் பணியில் சேர பொது அறிவிப்பு, தேர்வு, நேர்காணல் என்ற முறையே பின்பற்றப்படுகிறது. பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில், திருவரங்கம் அரங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் பரம்பரை, வாரிசுரிமை அடிப்படையில்தான் நடக்கிறது. இது அரசியல் சட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.

போராட்டம் நடத்தியபோது

தமிழகத்தில் அரசுப் பயிற்சிப் பள்ளியில் ஆகமம் கற்று, தீட்சை பெற்ற இந்து மதத்தின் அனைத்து சாதி மாணவர்களை கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை.

நியாயம் கேட்டு மாணவர்களாகிய நாங்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் உதவியுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீதிகளிலும், நீதிமன்றத்திலும் போராடி வந்தோம். எதுவும் நடக்கவில்லை. ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள சமூக நீதி அரசு, கொரானா பேரிடர் காலத்திலும் அனைத்து சாதி அர்ச்சகர் நியமன அறிவிப்பு வெளியிட்டிருப்பது சமத்துவத்தின் மீது தமிழக அரசு கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. எங்கள் கோரிக்கையை தொடர்ந்து வெளியிட்ட விகடனுக்கும் நன்றி." என்றார்.

இந்து அறநிலையத்துறை

அமைச்சரின் இந்த அறிவிப்பை இதற்காக சட்ட போராட்டம், அறப்போராட்டம் நடத்திய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய நிர்வாகிகளும் வரவேற்றுள்ளானர். பல்வேறு கட்சியினர், அமைப்பினரும் வரவேற்றுள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/president-of-the-priest-trained-student-union-ranganathan-says-that-its-a-social-justice-announcement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக