நினைத்துப் பார்க்கவியலாத பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா இரண்டாவது அலை. இதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு தொடர்ந்து பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைச் சரி செய்தது, ரெம்டெசிவிர் மருந்தைத் தேவையான தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக விநியோகித்தது, தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தியது என ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், `கொரோனா பரிசோதனை என்ற முக்கியமான விஷயத்தில் கோட்டை விடுவது ஏன்?’ என்று குற்றச்சாட்டு எழத் தொடங்கியிருக்கிறது.
ஏப்ரல் 6-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 80,000. ஏப்ரல் மாதம் 28-ம் தேதி அந்த எண்ணிக்கை 1,30,000 ஆக உயர்ந்தது. இந்நிலையில், மே 7-ம் தேதி ஆட்சியமைத்த தி.மு.க படிப்படியாகப் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. நேற்று முன்தினம் (1.6.2021) மட்டும் 1,67,397 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரே நாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவே… இதைவிட வேறென்ன செய்ய முடியும் என்கிறீர்களா?
ஒரு நாளைக்கு எத்தனை பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன என்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியமானது அந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் எவ்வளவு விரைவில் வழங்கப்படுகின்றன என்பதும். தற்போதைய நிலவரப்படி அரசின் பரிசோதனை மையத்தில் ஒருவர் கொரோனா பரிசோதனை கொடுத்தால் முடிவு வருவதற்கு 3- லிருந்து 5 நாள்கள் ஆகின்றன. அதுவும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்தால்தான். `நெகட்டிவ்’ஆக இருந்தால் முடிவு தெரிவதற்கு சில இடங்களில் ஒரு வாரம்கூட ஆகிறது என்கின்றனர்.
``முழுமையான ஊரடங்கு அறிவித்தும் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியாமல் திணறுவதற்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் உடனடியாகக் கிடைக்காததும் மிக முக்கியமான காரணம். சென்ற முறை கிராமங்களுக்குள் நுழையாத கொரோனா இந்த முறை பெருமளவில் கிராமங்களையும் தாக்கியிருக்கிறது. கிராமங்களில் பெரும்பாலும் காய்ச்சல் வந்ததும் அதை கொரோனாவாக எடுத்துக் கொள்வதில்லை. தங்கள் வசதிக்கேற்ப வெவ்வேறு காரணங்களைச் சொல்லி சில நாள்கள் காத்திருக்கின்றனர்.
வீட்டிலோ அக்கம் பக்கத்திலோ கொரோனா குறித்த தெளிவு உள்ளவர்கள் இருந்தால்தான் அவர்கள் பரிசோதனைக்கே செல்கின்றனர். அதுதான் யதார்த்தம். இப்படியான சூழலில், அவர்களுக்கு முடிவு கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும்போது அது பெரும் சிக்கலாக உருவாகிறது. பரிசோதனை எடுப்பவர்களுக்கு அடுத்த நாளே அதன் முடிவு கிடைத்துவிட்டால் பாசிட்டிவ் என்றால் அவர் உடல்நிலைக்கேற்ப உரிய சிகிச்சையளிக்கலாம். நெகட்டிவ் என்றால் அவர்கள் நிம்மதியாக இருக்க வழிவகை செய்யலாம். முடிவு தாமதமாவதால் பாசிட்டிவ்வா, நெகட்டிவ்வா எனத் தெரியும் வரை அனைவரும் பெரும் பதற்றத்துடனேயே இருக்கின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட நாள்களுக்குள் நோய் தீவிரமாகிறது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் மேலும் பலருக்கு கொரோனாவைப் பரப்பிவிடுகின்றனர். பாதிப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு குறையாததற்கும் இறப்புகள் அதிகமாவதற்கும் இந்த அடிப்படை நடவடிக்கையில் தாமதமாவது முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே, அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறனர் இதை உற்றுநோக்கும் மருத்துவர்கள்.
`உடனடியாக முடிவுகள் வெளியாகாததற்கு என்ன காரணம்?’ என விவரமறிந்த சிலரிடம் கேட்டோம், ``தமிழகத்தில் மொத்தம் 269 கொரோனா பரிசோதனை மையங்கள் இருக்கின்றன. அதில் 200 தனியாருடையவை. 69 மையங்கள்தான் அரசு பரிசோதனை மையங்கள். கிராமப்புறங்களிலும் சரி, நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களும் சரி, கொரோனா பரிசோதனைக்கு அணுகுவது அரசு பரிசோதனை மையங்களைத்தான்.
பெரும்பான்மையானோர் அரசு பரிசோதனை மையங்களைச் சார்ந்திருப்பதும் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் அரசு பரிசோதனை மையங்கள் இல்லாததும்தான் பரிசோதிப்பதில் ஆரம்பித்து அதன் முடிவுகளைப் பதிவேற்றுவது வரை அனைத்திலும் தாமதம் ஏற்பட காரணமாகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாததுதான் இறப்புகளுக்கான காரணம் என்கின்றனர். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாததற்குக் காரணம் அறிகுறி தென்பட்டதும் பரிசோதனை மேற்கொள்ளாததும் அப்படி பரிசோதனை மேற்கொண்டாலும் உடனடியாக முடிவுகள் தெரியாததும்தான் காரணம்.
ஆக்ஸிஜன் வசதியை அதிகரிப்பது, படுக்கை வசதிகளை அதிகரிப்பதைப் போல ஆணி வேராக இருக்கும் கொரோனா பரிசோதனை கட்டமைப்பை பலப்படுத்துவதும் முக்கியமான விஷயம். ஒரே நாளில் முடிவு கிடைக்கும் சூழலை எல்லா இடங்களிலும் உருவாக்கினால்தான் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும் இறப்புகளைக் குறைக்கவும் முடியும். எனவே தி.மு.க அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் இதுகுறித்துப் பேசினோம். ``48 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு அனைத்து மையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். மீண்டும் ஒருமுறை அனைத்து மையங்களுக்கும் இதை வலியுறுத்துகிறேன்” என்றார்.
கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்து உங்கள் பகுதி நிலையையும் அதுகுறித்த உங்கள் கருத்தையும் கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்...
source https://www.vikatan.com/government-and-politics/healthy/experts-says-delayed-test-results-will-hurt-tamilnadus-covid-19-battle
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக