Ad

புதன், 23 ஜூன், 2021

புத்தம் புது காலை : அடிக்கடி மனதுக்குள் குரல் கேட்கிறதா... உள்ளுணர்வு சொல்வதையெல்லாம் செய்யலாமா?

நீங்கள் அப்போதுதான் வண்டியை நிறுத்துகிறீர்கள்... அதுவரை ஒன்றும் தோன்றாமல் இருந்த உங்களுக்கு, அலுவலகத்திற்குள் நுழையும்போதே "இன்னிக்கு என்னமோ சரியில்லை" என்று தோன்றுகிறது. உள்ளே போனால் அது நிஜமாகவும் இருக்கிறது. நீங்கள் நினைத்தது போலவே, நேற்றைய பணியில் நடந்த பெரிய தவறு, மேனேஜரின் கத்தல், நண்பனுக்கு விபத்து என்ற ஏதோ ஒரு காரணத்தால் அந்த நாளின் துவக்கமே சரியாக இல்லாமலும் போகிறது. இப்படி எத்தனையோ முறை இதுபோன்ற நிகழ்வுகள் நம் அனைவருக்கும் நிகழ்ந்திருக்கும் தானே?


ஆனால், எனக்கு நடந்தது கொஞ்சம் வித்தியாசமானது. பல வருடங்களுக்கு முன், அறுவைசிகிச்சை உதவிமருத்துவராக நான் பணிபுரிந்த நாட்கள் அது... ஒரு பிரபலமான பள்ளியின் தாளாளரான அந்த ஐம்பது வயதுப் பெண்மணி, கர்ப்பப்பை அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அனுபவமிக்க, மூத்த லேப்ராஸ்கோபி மருத்துவர் அவருக்கு அந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்ள, மூத்த மருத்துவரின் உதவியாளராக நான் அசிஸ்ட் செய்ய, கட்டிகள் நிறைந்த கர்ப்பப்பை, லேப்ராஸ்கோபியின் உதவியுடன் அகற்றப்பட்டது.

சிக்கலான அந்த அறுவைசிகிச்சை இரவு பத்து மணிக்கு முடிய, "எவ்ரிதிங் இஸ் ஃபைன்" என்று மயக்கவியல் நிபுணர், அனஸ்தீயாவிலிருந்து முற்றிலும் வெளிவந்த பெண்மணியிடம் பேசிய பிறகுதான், அறுவைசிகிச்சை மருத்துவர் புறப்பட்டார். புறப்படும்போது என்னிடம், "என்னடா... நீ வீட்டுக்கு கிளம்பலையா?" என்று அவர் கேட்க,"இல்ல சார் என்னவோ தோணுது... இன்னிக்கு நைட் நான் இங்கேயே தங்கிக்கறேன்!" என்றேன். "சரி நீ பாரு... காலைல எனக்கு ஃபோன் பண்ணு!" என்று சொல்லி அவர் புறப்பட்டார்.

உள்ளுணர்வு

Post operative ICU எனும் அறுவைச்சிகிச்சைக்குப் பின் கண்காணிக்கும் பிரிவில், பள்ளியின் தாளாளர் இருக்க, இருமுறை சென்று அவரது பல்ஸ், பிளட் பிரஷர், ஆக்சிஜன் அளவு, யூரின் அளவு ஆகியவற்றை சரிபார்த்து, அனைத்தும் நார்மல் என்பதால், மருத்துவர் அறையில் ஓய்வெடுக்கச் சென்றேன்.


சரியாக இரவு இரண்டு மணி..."மேடம்... போஸ்ட் ஆஃப் வார்டுக்கு சீக்கிரம் வாங்க" என்று செவிலியர் பதற்றமாக அழைப்புவிடுக்க, ஓடினேன்.


உள்ளே மானிட்டர்கள் அலற, பல்ஸ், பிபி, ஆக்சிஜன் அளவு அனைத்தும் டிஸ்ப்ளேயில் கேள்விக்குறியுடன் இருந்தது. அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அந்தப் பெண்மணியின் முகம் முற்றிலும் வெளுத்திருந்தது. "கார்டியாக் அரெஸ்ட்... டீம் அலெர்ட்" என்று கத்தியபடி, CPR எனும் இருதயமீட்பை நான் ஆரம்பிக்க, அடுத்தடுத்து நிகழ்ந்தவை அனைத்தும் கனவுபோலத்தான் இருந்தது.

டிசி கன்வெர்ஷன், இருதயமீட்பு மருந்துகள், உள்ளே ஏற்பட்ட இரத்தக்கசிவைக் கட்டுப்படுத்தும் மறு அறுவைசிகிச்சை, நான்கு யூனிட்கள் இரத்தம் என அவரது உயிர் காக்கப்பட்டபோது விடிந்திருந்தது.

"ஏன்டா உனக்கு மட்டும் தோணிச்சு..?" என்று அறுவைசிகிச்சை மருத்துவர் என்னிடம் கேட்க, "நிஜமாவே தெரியல சார்... ஒரு intuition.. அவ்வளவுதான்!" என்றேன். அதற்குப்பின் இதுபோல எத்தனையோ முறை தோன்றியிருக்கிறது என்றாலும், இந்த நிகழ்வு ஏனோ என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது!

மூளை

உள்ளுணர்வு... நமது அன்றாட வாழ்வில் இதுபோன்ற எத்தனையோ நிகழ்வுகளை பணியிடத்தில், பரீட்சைகளில் எதிர்கொண்டிருப்போம். அந்த உள்ளுணர்வின்படி நடக்கும்போது அது சரியாக இருப்பதையும் உணர்ந்திருப்போம்.


ஆனால், எங்கிருந்து உற்பத்தியாகின்றன இந்த உள்ளுணர்வுகள், இவற்றுக்கு அறிவியல் ஆதாரங்கள் ஏதும் உள்ளனவா, உள்ளுணர்வை 'ஆறாம் அறிவு' என்று கூறும் ஆன்மீக அறிஞர்கள், யோகம் மற்றும் தியானத்தின் மூலம் இதனுடன் தொடர்பு கொள்வதும் இதனை வளர்த்துக் கொள்வதும் சாத்தியம் என்று கூறுகிறார்களே... இவையனைத்தும் உண்மையா?


தனது கட்டுரை ஒன்றில் உள்ளுணர்வை விளக்கும் எழுத்தாளர் ஜெயமோகன், "கண் தெரியாதவன் காட்டுக்குள் செல்வதுபோலத்தான் உள்ளுணர்வும்... அங்கே அவன் காணமுடியாத மாபெரும் மிருகம் ஒன்றிருப்பதை உணர்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த மிருகத்தை அவன் புரிந்துகொள்கிறான். காற்று வீசும் ஒலி, பாறை சரியும் ஒலி போன்றவை அல்ல... அது நடக்கும் ஒலி என பிரித்தறிகிறான். பின்னர் அதன் ஒலியை வாசனையை, அது வரும் நேரத்தை, அது செல்லும் பாதைகளை எல்லாம் பழகிக்கொள்கிறான். ஒருகட்டத்தில் அந்த மிருகத்துக்கு ஒரு துண்டு கரும்பை நீட்டவும், அதன் நல்லெண்ணத்தைப் பெறவும் கற்றுக்கொள்கிறான். அதன் மத்தகத்தைத் தொடவும், கொம்புகளை நீவவும் பயில்கிறான். அதன்மீது ஏறி அமர்ந்து செல்லும்போது காடே அவன் காலடியியின் கீழ் இருக்கும்" என்கிறார்.

ஆனால் உண்மையில் இது "இது ஆறாம் அறிவல்ல... இது மந்திர-தந்திரமும் அல்ல. கடவுள் தந்த வரமும் அல்ல... ஆழ்மனதின் தகவல்களை ஒன்றிணைத்து மூளை பிறப்பிக்கும் கட்டளை... அவ்வளவே!” என்கிறார்கள் அறியலாளர்கள். Intuition என்ற உள்ளுணர்வை, உண்மைநிலைக்கும், உணர்வுகளுக்கும் இடையே உள்ள மெல்லிய இழை என்றும், இவையனைத்தும் intuitive brain என்ற வலதுபக்க மூளையைச் சார்ந்தவை என்றும் கூறுகிறது அறிவியல்.

தியானம்

ஆம்... கிட்டத்தட்டநமது கனவுகளைப் போன்றதுதான் நமது உள்ளுணர்வும். நமக்குத் தெரியாமலே நம் மனம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் தோன்றும் எண்ணங்கள்தான் உள்ளுணர்வு என்று கூறுகிறது அறிவியல்.

சிக்மண்ட் ஃபிராய்ட் உட்பட மனவியல் நிபுணர்கள் யாரும் பெரிதாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாத இந்த intuition எனும் உள்ளுணர்வை சமீப காலமாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருபவர் ஆஸ்திரேலிய விஞ்ஞானியான டாக்டர் ஜோயல் பியர்சன். "ஏதோ நடக்கவிருக்கிறது என்று உள்மனதிற்குத் தோன்றினாலும், அதற்கான காரணங்களோ, அறிவியல் ஆதாரங்களோ இல்லாதபோதிலும் அதனை நம்பும் உணர்வு தான் Intuition என்ற உள்ளுணர்வு. நமது ஆழ்மனதில் பதிந்திருக்கும் தகவல்களின் வெளிப்பாடுதான் இது. எதிர்காலத்தில் கனவுகளைப் போலவே இவற்றையும் பதித்து வைக்கும் காலமும் வரும்” என்கிறார்.

மேலும் இந்த உள்ளுணர்வுகளை, குட் இன்ட்யூஷன் மற்றும் பேட் இன்ட்யூஷன் என்று வகைப்படுத்தும் மனவியல் ஆராய்ச்சியாளர்கள், இன்ட்யூஷன் என்ற உள்ளுணர்வு ஏற்படும்போது, அந்த உணர்வின்மீது நம்பிக்கை வைத்து, அதன்வழியே முடிவை எடுத்து, அதில் வரும் வெற்றி தோல்வியை அப்படியே ஏற்றுக்கொண்டு, நம்மை நாமே ஒவ்வொரு முறையும் செதுக்கிக் கொள்வதை பாசிடிவ் இன்ட்யூஷன் என்கிறார்கள்.

அதேசமயம் சிந்திப்பதையும், செயலாற்றுவதையும் முற்றிலும் தடுக்கும் உணர்வுகளை நெகட்டிவ் இன்ட்யூஷன் என்றும் விளக்குகின்றனர். சிலசமயங்களில் ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் முன்னரே மனம் அனுமதி கொடுத்துவிடும். மாறாக சிலசமயங்களில் ஆரம்பிக்கும்போதே வேண்டாம் என்று உள்ளுணர்வு தடுக்கும். அது பெரும்பாலும் சரியாகவும் இருக்கும். அதையும் மீறிச் செய்யும்போது பாதிப்பில் முடிந்திருக்கும். இப்படி எதிர்மறையாகத் தோன்றும்போது நாம் என்ன செய்யலாம்?

"ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, வெளியே விடுங்கள்... மனம் அமைதியாக இருக்கும்போது, மீண்டும் உள்ளுணர்வு கூறுவதை ஆழமாக சிந்தித்து, பிறகு முடிவெடுங்கள்" என்று தீர்வு கூறுகிறது நமது லாஜிக்கல் மூளை + இன்ட்யூட்டிவ் மனம்.

ஏனென்றால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிவதைப் போல, "எண்ணக் கூடிய எல்லாம் எண்ணிக்கையில் சேர்வதும் இல்லை... எண்ணிக்கையில் இருப்பவை எல்லாம் எண்ணக் கூடியவையும் இல்லை!" என்பது உள்ளுணர்வு என்ற நமது இன்ட்யூஷனுக்கும் பொருந்தும்!

#அகநிலை



source https://www.vikatan.com/health/healthy/what-is-intuitiveness-and-how-brain-works

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக