Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

திண்டுக்கல்:"கொரோனா டூட்டி பார்க்காத மருத்துவர்களுக்கும் உதவித்தொகையா?" கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. சில மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், சுகாதாரப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன் அடிப்படையில், தொடர் பணியில் இருந்த மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ரூ.20,000, பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.15,000, ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைப் பிரிவு

மேலும், கிராம மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள், 108 அவசர ஊர்தி பணியாளர்கள், 104 அமரர் ஊர்தி பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவம் சாரா பணியாளர்கள் (பாரா மெடிக்கல்) ஆகியோருக்கும், புற ஆதார முறையில் பணியமர்த்தப்பட்டோர் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கும் ரூ.15,000 வழங்கிடவும் உத்தரவிடப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஊக்கத் தொகையை வழங்குவதற்கு தேவைப்படும் நிதியைப் பெறுவதற்கான கருத்துருக்களையும், 2021-2022-ம் ஆண்டிற்கான துணை நிலை மதிப்பீடுகளில் அவற்றைச் சேர்ப்பதற்கு தேவையான விளக்கக் குறிப்புகளையும், அந்தந்த துறை இயக்குநர்கள் அளவிலேயே நேரடியாக நிதித்துறைக்கு அனுப்பி, நிதி ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளுமாறு தொடர்புடைய துறை இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகுமார்- டீன், திண்டுக்கல் அரசு மருத்துவமனை

இந்நிலையில், `கொரோனா வார்டில் பணியாற்றாத சில மருத்துவர்களுக்கும் அரசு அறிவித்த ஊக்கத்தொகை பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய சிலர் ``கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில், தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் , சில கர்ப்பிணி பெண் மருத்துகர்களும் அடக்கம் என்பதுதான் வேதனைக்குரியது. அதேபோல, செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், காவலர்கள் என பல துறையினருக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை பட்டியலில் கொரோனா டூட்டி பார்க்காத மருத்துவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்களில், கொரோனா டூட்டி பார்க்காத மருத்துவர்களின் பெயர்களை இணைப்பது தவறில்லையா?.

கொரோனா தடுப்பூசி

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் கொரோனா பிரிவில் டூட்டி பார்ப்பது கிடையாது. அப்படி இருக்கும்போது, மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும் அந்தப் பட்டியலில் ஏன் இணைக்க வேண்டும்?. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 108 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். 108 மருத்துவர்களையும் ஊக்கத்தொகை பெறும் பட்டியலில் சேர்த்து மருத்துவர்களுக்கு மட்டும் ஊக்கத்தொகையாக, ரூ.32,40,000-ஐ தேவைப்படும் நிதியாக பட்டியலில் சேர்த்துள்ளார் மருத்துவமனை டீன், விஜயகுமார்.

இதில், கடந்த மாத நிலவரப்படி, 108 மருத்துவர்களில் 50 முதல் 60 மருத்துவர்கள்தான் கொரோனா டூட்டி பார்த்தவர்கள். இவர்கள் 6 முதல் 8 முறை சுழற்சி முறையில் பணி செய்திருக்கிறார்கள். மொத்த மருத்துவர்களில் 7 மருத்துவர்கள், ஒரே ஒரு முறை மட்டும்தான் டூட்டி பார்த்திருக்கிறார்கள், கிட்டத்தட்ட 8 மருத்துவர்களுக்கு மேல், இதுவரை ஒருமுறைகூட கொரோனா டூட்டி பார்க்காதவர்கள். மேலும், 52 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. அப்படி உள்ள நிலையில், பணியில் ஈடுபடாத மருத்துவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் எங்களின் கேள்வி. இதில், சில மருத்துவர்கள், ’கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்’ என்று கூறி விடுமுறை எடுத்துக்கொண்டு, தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சை பெறுவதுபோல ஆவணங்களை தயார் செய்துகொண்டு, அவர்கள் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துமனையிலேயே கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து பல்லாயிரக்கணக்கான ரூபாயை வருமானமாக பெற்றிருக்கிறார்கள்.

கொரோனா சிகிச்சை பிரிவு

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சில மருத்துவர்கள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை நடத்தி வருகிறார்கள். இந்த மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பலரையும், மருத்துவமனை பணியாளர்கள் சிலரே கேன்வாஷ் செய்து மேற்படி மருத்துவமனைகளில் சேர்த்து விடுகிறார்கள்.

இதற்காக ஒரு நோயாளிக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கமிஷனாகவும் சம்மந்தப்பட்ட மருத்துவமனை மூலம் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், இறப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அப்படியென்றால், கொரோனா சென்டர்களில் டாக்டர்கள் அவர்களின் டூட்டியை சரியாக செய்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது” என்றனர். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் விஜயகுமாரிடம் பேசினோம்,

கொரோனா சிகிச்சைப் பிரிவு

“திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், கண்காணிப்பாளர் அலுவலகம் தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளும் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துமனைக்குள் நுழைந்தாலே கொரோனா தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதனால்தான், அனைத்து மருத்துவர்களுக்கும் அரசின் ஊக்கத்தொகை பெறுவதற்காக பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளேன்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/is-there-a-subsidy-for-doctors-who-do-not-work-in-the-corona-wards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக