Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

`கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின்!' - குட்டி ரேவதி பகிரும் சித்த மருத்துவக் குறிப்புகள்

கவிஞர் குட்டி ரேவதி என எல்லோராலும் அறியப்பட்ட இவர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல, ஒரு சித்த மருத்துவரும்கூட. இந்தப் பெருந்தொற்று நேரத்தில், சித்த மருத்துவம் கொரோனா வராமல் தடுப்பது மற்றும் வந்தவர்களை எப்படிக் காப்பாற்றுகிறது என்பதுபற்றி, பல சித்த மருத்துவர்களின் கட்டுரைகள், குறிப்புகள், அனுபவங்களைத் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தொடர்ந்து எழுதியும் பகிர்ந்தும் வருகிறார். அவரிடம் பேசினோம்.

சித்த மருத்துவம்

``வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்கள் குறைந்தாலும் கூடினாலும் மனித உடலில் பிரச்னைகள் வரும். அப்படி வரும்போது, அவை சில அறிகுறிகளை நம் உடலில் ஏற்படுத்தும். அந்த அறிகுறிகளை வைத்து நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்றபடி மருந்துகள் தருவோம்.

கொரோனாவை பொறுத்தவரை, காய்ச்சல் வருகிறது; உடலில் கபம் அதிகரிக்கிறது. கொரோனா முதல் அலையில், இதற்கு கபசுரக்குடிநீரே போதுமானதாக இருந்தது. ஆனால், இரண்டாவது அலையில் கொரோனாவுக்கான அறிகுறிகள் தீவிரமாக இருப்பதால், கபசுரக் குடிநீர் மட்டுமல்லாமல், அதற்கடுத்த சில பெரு மருந்துகளையும் தந்து தொற்றாளர்களை மீட்டுக்கொண்டிருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

corona virus

கொரோனா வருவதற்கு முன்...

`உணவே மருந்து; மருந்தே உணவு' என்ற முறையில் நோய்த் தடுப்பாற்றலை அதிகரிப்பதற்காக இஞ்சி, மிளகு, பூண்டு ஆகியவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து, ஊட்டச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, வைட்டமின் டி-யை பெறுவதற்காகத் தினமும் வெயிலில் சிறிது நேரம் உட்காருவது என்று செய்யலாம். இதனுடன் கபசுரக் குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நோய் வராமல் தடுக்கும்; நோய் வந்தாலும் அது தீவிரமடையாமல் தடுக்கும்; ஒருவேளை தீவிரமடைந்தாலும் நோயை எதிர்த்துப் போராடுகிற எதிர்ப்பாற்றலை உடலுக்குக் கொடுக்கும்.

கபசுரக் குடிநீர் அளவு!

கொரோனா வருமுன் தடுக்க, கபசுரக் குடிநீரை 3 நாள் இடைவெளியில் வாரத்துக்கு 2 நாள்கள் மட்டும் அருந்தினால் போதும். ஆனால், கொரோனா வந்துவிட்டாலோ, அது சரியாகும் வரை ஒருநாளைக்கு மூன்று முறை கபசுரக் குடிநீர் அருந்த வேண்டும்.

கபசுரக்குடிநீர்

கொரோனாவுக்குப் பின்... சித்த மருத்துவம் எப்படி உதவுகிறது?

கொரோனா வந்த பிறகு, தொண்டை கரகரப்பாக இருப்பது, சளி அதிகமாக இருப்பது, இதன் விளைவாகத் தொண்டையில் சதை வளர்வது, களைப்பாக இருப்பது போன்ற பிரச்னைகள் வருகின்றன. இவற்றுக்குத் தீர்வாக, கிராம்புக் குடிநீர், சய சூரணம், கபசுரக் குடி நீர் + ஆடாதோடை மணப்பாகு ஆகிய சித்த மருந்துகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் குடிநீரின் நிலை!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில், நிலவேம்புக் குடிநீரை விஷஜூரக் குடிநீர் என்று சொல்வார்கள். எந்த வகையான காய்ச்சல் வந்தாலும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். அதனால், டெங்கு காய்ச்சல், சிக்கன்குன்யா போன்ற நோய்களுக்கும் இது பயன்பட்டதை நாம் அறிவோம்.

கொரோனா, கபம் தொடர்பான நோய் என்பதால் கபசுரக் குடிநீரை அருந்தச் சொல்கிறோம். தவிர, கபசுரக் குடிநீர் ஏற்றுக்கொள்ளாத சிலருக்கு நிலவேம்புக் குடிநீரை பரிந்துரைக்கிறோம்’’ என்றவர், கொரோனா தொற்றாளர்களுக்கு சித்த மருத்துவர்கள் வழங்குகிற சில மூலிகைக் குறிப்புகளையும் பகிர்ந்துகொண்டார்.

நிலவேம்புக்குடிநீர்

ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும் கிராம்புக் குடிநீர்!

தேவையானவை:

கிராம்பு - 10 கிராம்

ஓமம் - 20 கிராம்

மஞ்சள் தூள் - 10 கிராம்

மிளகு - 10 கிராம்

இஞ்சி - 10 கிராம்

அதிமதுரம் - 20 கிராம்

செய்முறை:

ஒரு வேளைக்கு, 250 மிலி தண்ணீருடன் மேலேயுள்ள கூட்டு மருந்து பொடியில் இருந்து 80 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து 60 மில்லியாக காய்ச்சி எடுக்க வேண்டும். இந்தக் கிராம்புக் குடிநீரை, பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை என ஒருநாளைக்கு இரண்டு தடவை கொடுக்க வேண்டும்.

பெரும்பாக்கம் அரசு மகளிர் சட்ட கல்லூரி சித்தா சிறப்பு சித்தா கொரோனா சிகிச்சை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், இதை கொரோனா நோயாளிகளுக்கு அளித்து, இந்தக் குடிநீர் ஆக்சிஜன் அளவை உடலில் அதிகரிக்கிறது என்பதை நிறுவியிருக்கிறார்.

கொரோனாவுக்குப் பிறகான தொண்டை கரகரப்பையும் தொண்டையில் சதை வளர்ச்சியையும் போக்கும் சய சூரணம்!

தேவையானவை:

வால்மிளகு - 40 கிராம்

காபூல் கடுக்காய் - 20 கிராம்

சித்தரத்தை - 20 கிராம்

திப்பிலி - 20 கிராம்

சாதிக்காய் - 15 கிராம்

செய்முறை:

நாட்டு மருந்துக் கடைகளில் மேற்சொன்ன மூலிகைகளை வாங்கி தனித்தனியே புடைத்து, தூசி நீக்கி, சிறிதளவு சுத்தமான நெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்து தூள்செய்யவும். இதைச் சலித்து எடுத்து காலை, மாலை இருவேளையும் உணவுக்குப் பின், தலா ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

கிராம்பு

கபசுரக்குடி நீர் + ஆடாதோடை மணப்பாகு

35 கிராம் கபசுரக் குடிநீர்ப் பொடியை. ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து, அது கால் லிட்டராக வற்றும்வரை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி ஃப்ளாஸ்கில் வைத்துகொண்டு, ஒரு நாளைக்கு ஐந்து வேளை சூடாக அருந்த வேண்டும். பெரியவர்கள் என்றால் 50 மிலி, சிறியவர் 20 மிலி கபசுரக் குடிநீருடன் ஒரு டீஸ்பூன் ஆடாதோடை மணப்பாகு சேர்த்து அருந்த வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆடாதோடை மணப்பாகுக்குப் பதிலாக ஆடாதோடை இலைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.



source https://www.vikatan.com/health/healthy/kutti-revathi-shares-siddha-tips-to-follow-while-pre-and-post-covid-situations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக