* சிவனின் 64 வடிவங்களில் ஒருவர் ஸ்ரீபைரவ மூர்த்தி. மகாஞானியாகவும் ரௌத்ர ரூபமும் கொண்டு அருள்பாலிப்பவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் திகழ்வார். ஆலயம் திறந்தவுடனும், இரவு கோயில் மூடப்படும்போதும் பைரவ பூஜை செய்வார்கள். சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரி இவர் என்பது ஐதிகம்.
* அந்தகாசுரன் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்ய சிவபெருமான், தன் திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம் கொண்ட பிரம்மதேவரின் தலையைக் கொய்தவர் ஸ்ரீபைரவர்தான்.
* தாருகாவனத்தை சிவபெருமான் அழித்தபோது அவரின் கோபாக்னியைப் பொறுக்கமுடியாமல் சூரிய தேவனும் ஓடி ஒளிந்தார். அப்போது இந்த உலகமே இருண்டது. அப்போது பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார். அவ்வாறு தோன்றிய ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் ஆகிய எட்டு பைரவர் மூர்த்திகளையே அஷ்ட பைரவர் என்று குறிப்பிடுகின்றன ஞான நூல்கள்.
* சனிபகவானின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் தெய்வமாகவும் விளங்குபவர் பைரவர். எனவே கால பைரவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. காசி நகரம் பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு இறப்பவருக்கு கால பைரவர் மோட்சம் அளிப்பதாகவும் புராணங்கள் சொல்கின்றன.
* அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி ஆகியவற்றால் உண்டாகும் தீமைகள் அனைத்தும் நீங்கி நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தவர் என்பதால் பரணி நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நன்மைகள் அதிகரிக்கும்.
* அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபடுவது விசேஷம் என்றாலும் தேய்பிறை அஷ்டமி அன்று மாலையில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் மிகவும் முக்கியமானவை.
* தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை மனதால் நினைத்து வணங்கினாலே துன்பங்கள் தீரும். குறிப்பாக நோய்களும் பயமும் என்பது நம்பிக்கை. இன்று (2.6.21) காலை 6.26 முதல் அஷ்டமி திதியே உள்ளது. எனவே தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்பவர்கள் இன்றுதான் அந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.
* ஆலயங்கள் சென்று வழிபட முடியாத சூழ்நிலையில், இந்த நாளில் தவறாமல் வீட்டில் மாலை வேளையில் சிவபெருமான் படத்துக்கு மலர் சாத்தி, கால பைரவாஷ்டகம் கேட்பதும் படிப்பதும் மிகவும் நன்மை பயக்கும். காலபைரவாஷ்டகம் ஆதி சங்கரரால் பாடப்பெற்றது. இதைப் பாராயணம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் பலன்களாக பலஸ்துதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
காலபைரவாஷ்டகத்தைப் படிப்பவர்கள் ஞானம், முக்தி ஆகியவற்றோடு பற்பல புண்ணியங்களையும் அடைவார்கள். வாழும் வாழ்வில் துக்கம், மோகம், லோபம், ஏழ்மை, கோபம், தாபம் ஆகியன நீங்கப் பெற்று காலபைரவர் சந்நிதியை நிச்சயம் அடைவார்கள் என்று அந்த ஸ்லோகம் சொல்கிறது. எனவே தவறாமல் இந்த நாளில் கால பைரவாஷ்டகத்தைக் கேட்டோ அல்லது படித்தோ காலபைரவரின் அருட்கருணையைப் பெறுவோம்.
source https://www.vikatan.com/spiritual/gods/the-significance-of-theipirai-ashtami-worship
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக