Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

மகாராஷ்டிராவில் முன்கூட்டியே கொரோனா 3-வது அலை?! - நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டிலேயே கொரோனாவால் மகாராஷ்டிரா மாநிலம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டது. அதே போன்று கொரோனா இறப்பும் மகாராஷ்டிராவில்தான் அதிகமாக இருக்கிறது. தற்போதுதான் தினத்தொற்று 10 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. அதற்குள் கொரோனா மூன்றாவது அலை குறித்து விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில் மத்திய அரசே அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஆலோசனை வழங்க மகாராஷ்டிரா அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இந்த நிபுணர் குழுவுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா மூன்றாவது அலை எதிர்பார்ப்பதை விட முன்கூட்டியே தாக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்தனர்.

corona test

இக்குழுவில் இடம் பெற்றுள்ள ராகுல் பண்டிட் இது குறித்து கூறுகையில், ``கொரோனா மூன்றாவது அலை முன்கூட்டியே பரவும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும். உலகில் இரண்டு கொரோனா அலைகளிடையே எத்தனை நாள் இடைவெளி இருக்கிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 100 முதல் 120 நாள் இடைவெளியில் கொரோனா அடுத்த அலை பரவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் 14 முதல் 15 வாரத்தில் பரவியிருக்கிறது. 8 வார இடைவெளியில் கூட அடுத்த கொரோனா தொற்று பரவி இருக்கிறது. எனவே கொரோனா அடுத்த அலை சற்று முன்கூட்டியே வந்தாலும் அதனை நாம் சந்திக்க தயாராக இருக்கவேண்டும். கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது. தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும்.

மக்கள் இரண்டு முககவசம் அணிந்து வெளியில் வரவேண்டும். கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் போது 8 லட்சம் கொரோனா நோயாளிகள் இருப்பார்கள். தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார். கொரோனா இரண்டு அலையில் பாதிக்கப்படாதவர்கள் மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது என்று நிபுணர் குழு முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் எச்சரித்துள்ளது.

``மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று சொல்லப்பட்டாலும் அதனை உறுதியாக கணிக்க முடியவில்லை. மூன்றாவது அலை எப்போது வரும் என்றும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்” என்று ஜஸ்லோக் மருத்துவமனை டாக்டர் ஓம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். ஒரு சில நிபுணர்கள் தெரிவிப்பது போல் குழந்தைகளை மூன்றாவது அலை பாதிக்காது என்று சொல்ல முடியாது என்றும், மூன்றாவது அலையில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் 10 சதவீதம் அளவுக்கு பாதிக்கபடுவர் என்று மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். கொரோனா முதல் அலை மகாராஷ்டிராவில் 19 லட்சம் பேரை தாக்கியது. இரண்டாவது அலையில் 40 லட்சம் பேரை தாக்கியதோடு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரையும் பறித்துள்ளது.

கொரோனா மரணம்

கணக்கில் வராத 5000 இறப்புக்கள்:

இதற்கிடையே கொரோனா இரண்டாவது அலையில் இறந்த 5 ஆயிரம் பேர் கணக்கில் இன்னும் வரவில்லை என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``கொரோனாவால் இறந்தவர்களில் 5 ஆயிரம் பேர் கணக்கில் வராமல் இருக்கிறது. அவை சரிபார்க்கப்பட்டு கணக்கில் சேர்க்கப்படும். கொரோனா தொற்று பயம் காரணமாக தெருக்களில் கூட்டம் குறைவாக இருக்கிறது. ஆனால் மக்கள் முகக்கவசம் அணிவவில்லை. சுத்தமாக இருப்பதில்லை. கொரோனா மூன்றாவது அலை எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால் கொரோனா விதிகளை சரியாக கடைப்பிடிப்பதாலும், முகக்கவசம் அணிவதாலும் மூன்றாவது அலை வருவதை தாமதப்படுத்த முடியும்” என்று அவர் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/risk-of-corona-third-wave-in-maharashtra-experts-warn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக