Ad

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

பா.ஜ.க Vs சிவசேனா: ஒரே கொள்கை... 30 ஆண்டுகள் கூட்டணி... இருந்தும் சண்டையிட்டுக் கொள்வது ஏன்?

மகாராஷ்டிர அரசியலில் தினந்தோறும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. சிவசேனாவும் பா.ஜ.க-வும் தொடர்ந்து மோதிக் கொண்டிருப்பதுதான் பரபரப்புக்குக் காரணம். இவ்விரண்டு கட்சிகளும் ஒரே கொள்கைகளைக் கொண்டு செயல்படும் கட்சிகளாக இருந்தாலும், பரம எதிரிகளைப் போலச் சண்டையிட்டு வருகின்றன.

இந்தச் சண்டை எங்கே தொடங்கியது... எந்த விஷயங்களிலெல்லாம் இந்த இரு கட்சிகளும் சண்டையிட்டுக் கொண்டன என்பதை அலசுவதுதான் இந்தக் கட்டுரை.
பா.ஜ.க - சிவசேனா

எப்போது தொடங்கியது கூட்டணி?

1989-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் சிவசேனாவும்-பா.ஜ.க-வும் முதன்முதலாகக் கூட்டணி அமைத்தன. 25 ஆண்டுகளாக இருந்த கூட்டணியில் 2014-ம் ஆண்டு முறிவு ஏற்பட்டது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்தக் கூட்டணி முறிந்ததாகச் செய்திகள் சொல்லப்பட்டன. இரு கட்சிகளும் 2014 சட்டமன்றத் தேர்தலைத் தனித் தனியே எதிர் கொண்டன. பா.ஜ.க 122 இடங்களில் வெற்றிபெற்றது. சிவசேனா 63 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. தேர்தலுக்குப் பிறகு நடந்த பேச்சு வார்த்தையை அடுத்து பா.ஜ.க-வும் சிவசேனாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

கூட்டணியிலிருக்கும் போதே சண்டை?

பா.ஜ.க, சிவசேனா இடையே 2014-ம் ஆண்டு வரையிலும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட சில விஷயங்களில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தன. ஆனால், 2015-ம் ஆண்டு இவ்விரு கட்சிகளுக்குமிடையே மிகப் பெரிய சண்டைகள் நிகழத் தொடங்கின. 2015-ல் நடைபெற்ற ஜெயின் மதத்தினர் திருவிழாவையொட்டி மாட்டிறைச்சிக்குத் தடை விதித்து, மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா வசம் உள்ள மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதைக் கடுமையாக எதிர்த்தது சிவசேனா. எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் மாட்டிறைச்சி விற்பனையிலும் களமிறங்கியது. கூட்டணியில் ஆட்சியிலிருந்து கொண்டு இரு கட்சிகள் வெளிப்படையாக இப்படி மோதிக் கொள்வது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து மும்பையில், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கசூரியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் உதவியாளராக இருந்த சுதீந்தரா குல்கர்னி ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சுதீந்தரா குல்கர்னிமீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தேவேந்திர பட்னாவிஸ்

Also Read: `தயங்கும் சரத் பவார்; மீண்டும் பா.ஜ.க?’ -மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கத் தவிக்கும் சிவசேனா

குல்கர்னி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்வானியும் இதனைக் கடுமையாக விமர்சித்திருந்தார். சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ``குல்கர்னியும் மும்பையில் தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப்பும் ஒன்றுதான்'' என்று எழுதப்பட்டிருந்தது.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ``குல்கர்னிக்கு எதிரான எங்களது போராட்டத்தால் மாநிலத்துக்குக் கெட்ட பெயர் வந்து விட்டதாக முதல்வர் சொல்கிறார். அவர் மகாராஷ்டிரத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. குல்கர்னியின் முகத்தில் கருப்பு சாயம் பூசியது, மகாராஷ்டிராவின் நலனுக்காகத்தான். அதை பா.ஜ.க ஆதரிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு உபதேசம் செய்கிறது. முதலில், நாட்டுப்பற்றுடன் தொடர்புடைய ராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்னை ஆகியவை பற்றி பா.ஜ.க. பேசட்டும். எங்கள் கட்சியின் தேசப்பற்று சார்ந்த நடவடிக்கைகள் பிடிக்காவிட்டால் மகாராஷ்டிர மாநில கூட்டணி அரசிலிருந்து பா.ஜ.க. வெளியேறலாம்'' என்றார் காட்டமாக.

பா.ஜ.க - சிவசேனா

தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்தாலும், கூட்டணி ஆட்சியில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இவ்விரு சம்பவங்களைத் தொடர்ந்து, வேறெந்த சம்பவத்திலும் சிவசேனாவும் பா.ஜ.க-வும் பெரிய அளவில் முட்டி மோதிக் கொள்ளவில்லை என்றாலும், இரு கட்சிகளுக்குமிடையே முன்னர் இருந்த அளவுக்கு நட்புறவு இல்லை என்றே சொல்லப்பட்டது. தொடர்ந்து 2018 ஜனவரியில், `` 2019 சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா தனித்துப் போட்டியிடும்'' என்று அறிவித்தார் உத்தவ் தாக்கரே. இதையடுத்து, ``இது சிவசேனாவுக்குத்தான் பின்னடைவு'' என்று சொல்லி கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது பா.ஜ.க. 2019 பிப்ரவரியில், பா.ஜ.க மேலிடத்திலிருந்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மீண்டும் பா.ஜ.க-வுடன் கைகோர்த்தது சிவசேனா. அந்த சமயத்தில் பா.ஜ.க தலைவராகச் செயல்பட்ட அமித் ஷா முன்னிலையில் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், ``ஆட்சிப் பொறுப்பு மற்றும் பதவிகளில் இரு கட்சிகளுக்கும் சமமான பங்குண்டு'' என்று வாக்குறுதியளித்தார்.

கூட்டணியில் முறிவு?

2019 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க - சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றது. பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி கண்டன. வெற்றிக்குப் பின்னர் பேசிய பட்னாவிஸ், ``இரண்டரை வருடம் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுத் தருவதாக நாங்கள் சொல்லவேயில்லை'' என்றார். `ஆட்சிப் பொறுப்பில் சம பங்கு என்று சொல்லிவிட்டு, இப்போது பேச்சை மாற்றுகிறார்கள்' என்று கொந்தளித்தனர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர், பா.ஜ.க-வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறியது சிவசேனா. அதுமட்டுமல்லாமல் தங்கள் கட்சியோடு கருத்தியல் முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது.

சிவசேனா
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை நகரம் அமைந்திருக்கும் மகாராஷ்டிராவில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றிருந்த பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தது சிவசேனா.

சுஷாந்த் மரணம்!

இதையடுத்து 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், மும்பையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் பாலிவுட் நடிகர் சுஷாந்த். இந்த வழக்கில் சிவசேனா அரசின் அமைச்சரும் உத்தவ் தாக்ரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரேயின் பெயர் அடிபட்டது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பேசிய அவர்..

ஆதித்யா தாக்கரே

`` சம்பந்தமேயில்லாமல் சுஷாந்த் வழக்கில் ஆதித்யா தாக்ரேவின் பெயரைக் கோர்த்துவிட்டது பா.ஜ.கதான். சுஷாந்த் மரண வழக்கைக் கொண்டு சிவசேனாவைப் பழி தீர்க்க நினைக்கிறது பா.ஜ.க அதனால்தான் மும்பை காவல்துறை வசமிருந்த இந்த வழக்கை தங்கள் கைக்கு, அதாவது சி.பி.ஐ கைக்கு மாற்றிக் கொண்டது மத்தியில் ஆளும் பா.ஜ.க'' என்று சிவசேனாவினர் கொதித்தனர்.

கங்கனா என்ட்ரி!

சுஷாந்த் வழக்கில் ஆரம்பம் முதலே பாலிவுட் நட்சத்திரங்கள்மீது குற்றம்சாட்டி வந்த பாலிவுட் நடிகை கங்கனா, ஒருகட்டத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்களோடு நேரடியாகவே வார்த்தைப் போரில் ஈடுபட்டார். மும்பை காவல்துறை குறித்து கங்கனா குற்றச்சாட்டு வைக்கவே சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் கொதித்தெழுந்தனர். ``மும்பை காவல்துறை குறித்த அவரின் ஒப்பீட்டுக்குப் பின்னர், அவருக்கு இங்கு வசிக்க உரிமை இல்லை'' என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறினார். அதுமட்டுமல்லாமல் மும்பையை `மினி பாகிஸ்தான்' என்றும் கங்கனா குறிப்பிட்டார். இதையடுத்து `கங்கனா மும்பை வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்' என சிவசேனா நிர்வாகிகள் எச்சரிக்கை விடுக்க, `நான் செப்டம்பர் 9-ம் தேதி நிச்சயம் மும்பை வருவேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்' என்றார் கங்கனா. அதேபோல தனது சொந்த ஊரான மணாலியிலிருந்து ஒய் ப்ளஸ் பாதுகாப்புப் படையோடு மும்பை வந்தடைந்தார் கங்கனா.

நடிகை கங்கனா ரணாவத்

Also Read: ஹ்ரித்திக் Vs கங்கனா: 2016-ல் போடப்பட்ட FIR... டெலிட் செய்யப்பட்ட இ-மெயில்கள் - என்ன பிரச்னை?

இது குறித்து அந்த சமயத்தில் பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர், ``கங்கனா, மும்பையில் போதைப் பொருள் சகஜமாகக் கிடைக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார். பின்னர் சிவசேனா கட்சியை எதிர்த்துப் பேசுகிறார். அடுத்த சில நாள்களில் அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்குகிறது மத்திய அரசு. அதற்காக அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிக்கிறார் கங்கனா. இதற்கிடையில் மும்பை மாநகராட்சி, கங்கனாவின் மும்பை வீடு, விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லி அதன் ஒரு பகுதியை இடித்துத் தள்ளியது.

கங்கனாவுக்கும் சிவசேனாவுக்குமான சண்டைகள் ஒருபுறமிருக்க, கங்கனாவின் ஒவ்வோர் அசைவுக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் உட்பட பல்வேறு பா.ஜ.க நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வுகளையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது மகாராஷ்டிராவில் சிவசேனாவின் பலத்தை அசைத்துப் பார்க்கப் புகழ்பெற்ற பாலிவுட் நடிகையான கங்கனாவை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்று கூறியிருந்தனர்.

அமலாக்கத்துறை நோட்டீஸ்!

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதியில், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணமோசடி செய்துள்ள வழக்கு தொடர்பாக, சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மன் குறித்துப் பதிலளித்த சிவசேனா மாநிலங்களவை எம்.பி சஞ்சய் ராவத்,

சஞ்சய் - வர்ஷா ராவத்

``மத்திய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை போன்றவற்றை பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் தலைவர்கள்மீது அரசியல் வெறுப்புக்காக பா.ஜ.க பயன்படுத்திவருகிறது'' என்று சிவசேனா கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பேனர் வைக்கும் சிவசேனா கட்சியினர்
இதைத் தொடர்ந்து மும்பையிலுள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்துக்கு வெளியே `பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையகம்' என்று சிவசேனா கட்சித் தொண்டர்கள் பேனர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

சண்டைக்குத் தீர்வு?

இரு கட்சிகளுக்கும் இடையேயான சண்டைகள் ஓய்வதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்ற கேள்விக்கு, அரசியல் விமர்சகர்கள் சிலர், ``காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து சமீபத்தில் விமர்சித்திருந்தது சிவசேனா. ஆனால், அதனைச் சரி செய்யும் விதமாக, சமீபத்தில் சிவசேனாவின் சாம்னா நாளேட்டில் கட்டுரை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. `டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் ராகுல் காந்திக்கு அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை. ராகுல் காந்தி ஒரு பலவீனமான தலைவர் என்று பிரசாரம் செய்த போதிலும், அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை ஒரு போர்வீரனைப்போல அஞ்சாமல் எதிர்த்து நின்று தாக்குகிறார். ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வருவது நல்ல விஷயம்' என்று ஏகத்துக்குப் ராகுலைப் புகழ்ந்து செய்தி வெளியிட்டுள்ளது சாம்னா. இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பா.ஜ.கதான் நம் எதிரி என்பதில் சிவசேனா திடமாக உள்ளது. எப்போதும் கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பது சிவசேனாவின் ஸ்டைல். ஆனால், பெரும்பாலும் சொன்ன கருத்திலிருந்து சிவசேனா பின் வாங்கியதில்லை. ஆனால், தற்போது காங்கிரஸ் தலைமையை விமர்சித்துவிட்டு, பின்னர் புகழ்ந்து கட்டுரை வெளியிட்டதற்கு காரணம், பா.ஜ.க-வை எதிர்க்கக் காங்கிரஸின் துணை வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

சிவசேனா - பா.ஜ.க

Also Read: `சம்மன் அஸ்திரம்; 121 பேர் பட்டியல்!’ - சிவசேனா Vs பா.ஜ.க; என்ன நடக்கிறது மகாராஷ்டிராவில்?

30 ஆண்டுகளாகப் பிரிவதும் சேருவதுமாக பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணியில் இருந்திருக்கின்றன. ஆனால், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்டையில் சேருவதற்கான வாய்ப்பேயில்லை. காரணம், சிவசேனாவுக்கு ஆட்சியில் பங்கு தருவேன் என்று சொல்லிவிட்டு, பின்னர் பா.ஜ.க பின் வாங்கியதை பச்சை துரோகமாகப் பார்க்கிறது சிவசேனா. அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முடியாமல் போனதற்குக் காரணம் சிவசேனாதான் என்ற கோவத்தில் இருக்கிறது பா.ஜ.க. தற்போது இரு கட்சிகளும் `யார் வலிமை பெற்றவர்கள்?' என்பதைக் காட்டும் நோக்கில் சண்டையிட்டு வருகின்றன. இந்தச் சண்டை இப்போது முடிவதற்கான வாய்ப்புகள் இல்லை'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/why-bjp-and-shiv-sena-are-fighting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக