Ad

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

மதிமோவும் கால்சென்டரும், அந்த விடியற்காலையும்! - எல்லோரும் இன்புற்றிருக்க! #MondayMotivation

வேலைபார்க்கும் இடத்தில் நாம் பழகும் பல மனிதர்கள் இருந்தாலும் நம்மால் சில முகங்களை மட்டும் மறக்க முடியாமல் போகும் அல்லவா? மதிமோ யத்தங் முகமும் அப்படி ஒரு மறக்கமுடியா முகம்தான்!

மதிமோ யத்தங்... இந்தியாவின் வட கிழக்கில், மேகாலயா மாநிலத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவன். பெங்களூரில் இருந்த அமெரிக்க கம்பெனியொன்றின் கால் சென்ட்டரில் வேலை. அபார ஆங்கில ஆக்சென்ட்டோ, வார்த்தை ஜாலங்களோ செய்யத் தெரியாத ஜஸ்ட் பாஸ் மனிதன். அவனது பேட்சில் (batch) சுமார் பர்ஃபாமரே அவன்தான்.

கால்சென்ட்டரில் அடுத்த சில மாதங்களில் வேலையை விட்டு நீக்கப்படப் போவோரின் பட்டியலில் மதிமோ யங்கின் பெயரும் இருந்தது. காரணம் அந்நிறுவனத்தின் குவாலிட்டி ஸ்டாண்டர்ட் படி அவனது மொழியறிவும், அவன் வாடிக்கையாளர்களின் அழைப்புகளைக் கையாண்ட விதமும் சுமார்.

கால்சென்டர் | #MondayMotivation

அன்றும் வழக்கம்போல அந்த நாளைத் தொடங்கினான் மதிமோ. விடியற்காலையின் முதல் அழைப்பே மிரள வைக்கும் அழைப்பாக இருந்தது. அமெரிக்காவைச் சார்ந்த பிரைவேட் விமான நிறுவனமொன்றின் கஸ்டமர் கேருக்கான கால் சென்டர்தான் அது. அழைத்த கஸ்டமர் கோபத்தின் உச்சியில் இருந்தார். இதேபோன்றதொரு ஜனவரி மாதம் அது. மேற்சொன்ன கஸ்டமர் பயணம் செய்ய வேண்டிய விமானம் ரத்தாகியது பற்றி கோபம் தெறிக்க கத்தத் தொடங்கினார். அவரைச் சமாதனப்படுத்தவோ அல்லது அவரின் பிரச்னைக்கான தீர்வை சொல்லவோ மதிமோ-வால் இயலவில்லை. பொறுமையை வேகமாக இழந்து கொண்டிருந்த அந்த கஸ்டமர் – "Put me to somone who can speak better English” எனக் கத்த, அவரை சில நிமிடங்களில் ஹோல்டில்வைத்த மதிமோ, சீனியர்கள், டீம் லீடர் எனப் பலரையும் தொடர்பு கொள்ள முயன்றும் யாரும் அந்நேரம் கிடைக்கவில்லை.

மீண்டும் அதே கஸ்டமரிடம் மதிமோ பேசினான். என்ன பேசினான் என்பதும், அதை எப்படி பேசினான் என்பதும்தான் இங்கே மிக முக்கியம்.

"Dear customer... It's the same Mathimo but with a better English'' எனச் சொன்னதும் கோபத்தின் உச்சியில் இருந்த அந்த கஸ்டமர் வெடித்துச் சிரித்தார். சிரித்தவர், "You won me with your confidence" என்றார்.

"இந்தச் சூழலில் ஒரு வாடிக்கையாளனுக்கு பெஸ்ட்டாக எதைக் கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்திருக்கிறாய். அதுதான் நம்பிக்கை. உன்னுடைய பொறுமையையும், இக்கட்டான சூழலை கையாண்ட உன் தன்னம்பிக்கையையும் நான் பாராட்டுகிறேன்" என்றார் வாடிக்கையாளர்.

வேலையை விட்டு நீக்கப்பட வேண்டியவர் பட்டியலில் இருந்த மதிமோவின் பெயர் அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் இ-மெயில்களைக் கையாளும் நான்- வாய்ஸ் (non voice) பிரிவிற்கு மாற்றப்பட்டான்.

கால்சென்டர் | #MondayMotivation

உண்மையைச்சொன்னால், மதிமோ அந்த வாடிக்கையாளருக்கான தீர்வு என்று எதையும் கொடுக்கவில்லை. ஆனால், அவரின் மனதை தன் நம்பிக்கை மற்றும் தன் சமயோசித புத்தி கலந்த அணுகுமுறையால் வென்றான். எப்பேர்பட்ட இக்கட்டான சூழலிலும் பின் வாங்காமல் அந்த சூழலை எதிர் கொள்ளலாம் எனும் தன்னம்பிக்கைதான் மதிமோவிடமிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்.

"நெருக்கடிகள் மற்றும் முட்டுக்கட்டைகளால் நன்மை ஒன்றுண்டு... அவை நம்மை சிந்திக்க கட்டாயப்படுத்துகின்றன!"

ஜவஹர்லால் நேரு சொன்னதில் அத்தனை உண்மையிருக்கிறது.



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/a-dose-of-motivation-to-start-your-monday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக