மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை கூட்டணிக் கட்சிகளாக இருந்த சிவசேனா, பா.ஜ.க ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு தனித்தனியாகப் பிரிந்துவிட்டன. காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, சிவசேனா எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து அவர்களிடம் அமலாக்கப்பிரிவு மூலம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. தற்போது முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் பா.ஜ.க குறிவைத்துள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரே 2014-ம் மார்ச் 21-ம் தேதி அலிபாக் அருகில் உள்ள கொர்லாய் என்ற கிராமத்தில் அன்வாய் நாயக் என்பவரிடமிருந்து 19 வீடுகள், நிலத்தை வாங்கினார் என்று பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கிரீத் சோமையா குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read: `தைரியமிருந்தால் ஆட்சியைக் கலைத்துப் பாருங்கள்!’ - பா.ஜ.க-வுக்குச் சவால்விட்ட உத்தவ் தாக்கரே
அந்த வீடுகள் 2020-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி தாக்கரே பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், இந்த வீடுகள் குறித்து உத்தவ் தாக்கரே தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்றும் கிரீத் சோமையா கூறுகிறார். மேலும், அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கிரீத் சோமையா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே குற்றச்சாட்டை கிரீத் சோமையா முன்வைத்தார். மொத்தம் 23,500 சதுர அடி கொண்ட அந்த வீடுகளின் மதிப்பு ரூ.5.29 கோடியாகும்.
இந்த வீடுகளை விற்பனை செய்த இண்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் குமுத் நாயக் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் இருவரிமும் ரீபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மேலும் இரண்டு பேரும் சேர்ந்து நிலம் வாங்கினர். அந்த வகையில் ரூ.5.40 கோடியை அர்னாப் கொடுக்காததால் மன உளைச்சலில் அன்வாய் தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவர்களை உத்தவ் தாக்கரேயுடன் பா.ஜ.க சம்பந்தப்படுத்தியுள்ளது. சிவசேனாவுக்கு கடுமையான நெருக்கடியை கொடுப்பதன் மூலமே அக்கட்சியை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற்ற முடியும் என்று பா.ஜ.க கருதுகிறது. அதனால் இந்தப் பிரச்னையை கிளப்பி உத்தவ்தாக்கரே பதவியை பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.
ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தவ் தாக்கரேவை `மாபியா கும்பல்’ என்று கிரீத் சோமையா குற்றம்சாட்டி இருந்தார். இதனால், கடந்த மக்களவைத் தேர்தலில் கிரீத் சோமையா மீண்டும் போட்டியிடுவதை சிவசேனா தடுத்துவிட்டது. `கிரீத் சோமையா போட்டியிட்டால் அவருக்கு எதிராக நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம்’ என்று பா.ஜ.க-விடம் சிவசேனா தெரிவித்தது. இதனால் கிரீத் சோமையாவுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனாவும் பா.ஜ.க-வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/politics/maharastra-cm-didnt-mention-his-19-houses-accuses-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக