எலெக்ட்ரிக் கார் என்றால், IC இன்ஜின் கார்கள் அளவுக்கு பெர்ஃபாமன்ஸ் இருக்காது; சட்டென சார்ஜ் போட முடியாது, மணிக்கணக்கில் ஆகும்; கட்டுமானத் தரம் சுமாராக இருக்கும் என்றெல்லாம் ஒரு பேச்சு இருக்கிறது. இவையனைத்தும் டெஸ்லா கார்களுக்கு எடுபடாது.
உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லாதான் நம்பர் ஒன். டெஸ்லா கார்கள் வைத்திருப்பது – லம்போகினி, ஃபெராரி, ரோல்ஸ்ராய்ஸ் வைத்திருப்பதுபோல், மதிப்புக்குரிய விஷயமும்கூட! இதன் விலை 1 கோடியில் இருந்துதான் ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட டெஸ்லா, இந்தியாவுக்கு வந்தால் நன்றாக இருக்கும்; அது இந்தியாவுக்கு வரவே வராது என்றெல்லாம் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் பலரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
டெஸ்லா இந்தியாவுக்கு வந்தால், அதன் முதல் கார் – ‘டெஸ்லா மாடல் 3’ ஆகத்தான் இருக்கும் என்றும், புக்கிங்குகள் ஆரம்பித்து விட்டன என்றும் அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவித்திருந்தது டெஸ்லா. அதை நம்பி சில ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்லா மாடல்–3 காரின் புக்கிங்கை, PayTm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா போன்ற சில தொழிலதிபர்கள் 1000 அமெரிக்க டாலர்கள் (சுமார் 75,000 ரூபாய்) கொடுத்து புக்கிங் செய்து காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கப் போகிறது – ஆம், டெஸ்லா இந்தப் புத்தாண்டில் இந்தியாவில் உண்மையாகவே விற்பனைக்கு வருகிறது.
‘இந்தப் புத்தாண்டுக்குப் பிறகு டெஸ்லா இந்தியாவுக்கு உறுதியாக வரும்’ என்று டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க்கே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்து விட்டார். ‘எலான் மஸ்க்தான் ரொம்ப வருஷமா சொல்லிக்கிட்டே இருக்காரே’ என்று வழக்கம்போல் இதை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. காரணம், நமது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை யூனியன் அமைச்சர் நிதின் கட்காரியும் இதை உறுதி செய்துவிட்டார் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.
நம் நாட்டில் CBU முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கும் டெஸ்லா மாடல்–3தான், டெஸ்லாவின் விலை குறைந்த மாடல். சுமார் 60 லட்சத்தில் ஆரம்பிக்கும் இந்த எலெக்ட்ரிக் செடான், வெறும் 15 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் ஏறிவிடும்.
சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் மாடல்–3–ன் ரேஞ்ச், சுமார் 423 கிமீ. அதாவது, 15 நிமிஷம் சார்ஜ் செய்தால், 423 கிமீ வரை பயணிக்கலாம். இதன் 0–100 கிமீ– 6 விநாடிகள். இது சிங்கிள் மோட்டார் கொண்ட கார். இதுவே டூயல் மோட்டார் கொண்ட மாடல்–3–ன் பர்ஃபாமன்ஸ் வேறு லெவலில் இருக்கும். இதன் 0–100 கிமீ – வெறும் 3 விநாடிகள்தான். இதன் டாப் ஸ்பீடு 260 கிமீ. இது பெரிய ஏஎம்ஜி கார்களுக்கு இணையான பர்ஃபாமன்ஸ். இதன் ரேஞ்ச், 568 கிமீ. இவையெல்லாமே ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன்கள் கொண்ட மாடல்–3. இதிலேயே AWD (All Wheel Drive) மாடல்களும் உண்டு. இதன் 0–100 கிமீ, 4.5 விநாடிகள். இதில் அப்கிரேடு செய்யப்பட்ட பிரேக்குகள் இருக்கும்.
நேரடியாக சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கில் இறங்க இருக்கும் டெஸ்லா – மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொழிற்சாலைக்கு இடம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
மாடல்–3–க்குப் பிறகு, மாடல்–Y எனும் எஸ்யூவி, டெஸ்லா மாடல்–S, மாடல்-X போன்ற கார்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க இருக்கிறது டெஸ்லா. CBU முறையில் முழுக்க இறக்குமதி என்பதால், டெஸ்லா மாடல்–3–ன் விலை சுமார் 55 லட்சம் முதல் ஆரம்பிக்கலாம் என்கிறார்கள்.
விரைவில்… சாலையில் சத்தமே இல்லாமல் பறக்கும் எலெக்ட்ரிக் கார்களைப் பார்க்க ரெடியா இருங்க!
source https://www.vikatan.com/automobile/motor/tesla-electric-car-coming-to-india-in-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக