Ad

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

`வீடியோ ஷூட்டிங்... டெஸ்ட் வைத்த ஸ்டாலின்!’ -ஈரோடு தி.மு.க கிராம சபைக் கூட்ட லைவ் ரிப்போர்ட்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட சிறுவலூரில் தி.மு.க சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வழக்கம்போல ஜமக்காளம் செட்டப்போடு, கிட்டத்தட்ட ஆயிரம் பெண்களை கூட்டத்திற்கு திரட்டியிருந்தனர். கூட்ட அரங்கில் அழைத்துவரப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் பெண்களும், யூனிஃபார்மாக ஸ்டாலினின் உருவம் பதித்த தி.மு.க., தொப்பியினை அணிந்திருந்தனர். இவர்களுக்கு மட்டுமல்ல மேளம், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், ஏன் வேட்டு வெடிப்பவர்கள் என அனைவருக்குமே தி.மு.க., தொப்பி தான்.

மேளம், நாதஸ்வரம் வாசித்தவர்கள் தி.மு.க தொப்பி, துண்டுடன்

இடையிடையே, ‘வீடியோ எடுக்கப் போறாங்க எல்லாரும் கையில கொடுக்கப்பட்டிருக்க தலைவரோட (ஸ்டாலின்) படம் போட்ட அட்டையை தலைக்கு மேல தூக்கிக் காட்டுங்க; எல்லாம் கோரஸா அ.தி.மு.கவை நிராகரிக்கிறோமுன்னு சொல்லுங்க’ என கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்த பெண்களை வைத்து வீடியோ ஷூட்டிங் வேறு நடத்திக் கொண்டிருந்தனர். ‘மக்கள் சபைக்கூட்டமுன்னு சொல்லி எல்லாருக்கும் தி.மு.க., தொப்பி போட்டதோடு, இதைச் சொல்லு அதைச் சொல்லுன்னு சென்னையிலிருந்து வந்தவங்க செஞ்ச வேலைக்கான வீடியோ ஆதாரத்தை தான் திரட்டுறாங்க. இதலெல்லாம் எங்க போய் முடியுமோ!’ என கூட்டத்தில் உடன்பிறப்புகளின் பொறுமல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

காலையில் கோவையில் நடந்த சம்பவத்தின் கொதிப்பு, ஈரோட்டில் எதிரொலித்தது. முதல்வர், ஆளும் அரசின் செயல்பாடுகளை விட, அமைச்சர் வேலுமணியை அட்டாக் செய்தே ஸ்டாலின் பேச்சு இருந்தது. அவர் பேசுகையில், “நான் இன்னைக்கு காலையில தொண்டாமுத்தூர் தொகுதிக்கு போயிருந்தேன். அங்க நம்ம கூட்டத்தைக் கெடுக்கணும்னு திட்டம் போட்டது, நேற்றிரவே எங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. நல்ல போலீஸ்காரர் சிலர் மூலம் அந்த தகவல் நமக்கு தெரிஞ்சிடுச்சி. ஒரு பொண்ணை புடிச்சி, அவங்களுக்கு நம்மளோட தி.மு.க., படம் போட்ட தொப்பியை போட்டு கூட்டத்தோட கூட்டமா உட்கார வச்சிருந்தாங்க. கூட்டம் நடக்குறப்ப பேசணும்னா ஒன்னு கையை உயர்த்தணும், இல்லைன்னா நாங்க பேர் படிச்சி அனுமதிக்கிறவங்க தான் பேசணும்.

ஆனா, அந்தப் பெண் ‘ஏன் இந்த கிராம சபைக் கூட்டத்தை நடத்துறீங்க’ன்னு சத்தம் போட்டு கலவரத்தில் ஈடுபட்டாங்க. மரியாதையா வெளியப் போய்டுங்கன்னு சொல்லிப் பார்த்தோம். நம்ம ஆளுங்க அடிச்சா, அதை வச்சி ஏதாவது டிராமா செய்யலாமுன்னு பார்த்தாங்க. ஆனா, நம்ம ஆட்கள் அந்தப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சி புகார் கொடுத்தாங்க. ஸ்டேஷன் வாசல்ல நின்னுக்கிட்டு அந்த சகோதரி, வேலுமணிகிட்ட ஃபோன்ல பேசுது. அ.தி.மு.க.,வுல ஏதோ அந்த பொண்ணு பொறுப்பாளராக இருக்காங்களாம். வேலுமணிக்கு பக்கத்து வீடாம். எப்படியாவது திட்டமிட்டு நம்ம கூட்டத்துல பிரச்னை செய்யணும்னு நினைக்கிறாங்க” என்றார்.

மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

தொடர்ந்து பேசியவர், ``ஏற்கனவே கிராம சபைக் கூட்டங்களை நடத்தி மக்கள்கிட்ட மனுக்களை வாங்கி வச்சிருக்கோம். இதெல்லாம் இந்த ஆட்சியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுப்பாங்கன்னு இல்லை. நாம ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கணும்னு. உள்ளாட்சித் தேர்தல்ல பல முறைகேடுகள், அக்கிரமங்கள் செஞ்சாங்க. இவ்வளவு நடந்தும் 75 சதவிகித இடத்துல வெற்றி பெற்றிருக்கோம். நியாயமா நடந்திருந்தா 90 சதவிகித வெற்றி பெற்றிருப்போம். உள்ளாட்சித் துறையில் ப்ளீச்சிங் பவுடர், துடைப்பம் வாங்குனதுல எல்லாம் வேலுமணி ஊழல் செஞ்சிருக்காரு. இதையெல்லாம் பாக்குறப்ப, வேலுமணி இருக்க கேடுகட்ட பொறுப்புல நான் கடந்த காலத்துல இருந்துருக்கேனே! ன்னு இப்ப ஃபீல் பண்றேன்”.

“ஜெயலலிதா நமக்கு எதிரி தான். அது அரசியல். ஆனா, செத்தது சுப்பனோ, குப்பனோ இல்ல. தமிழ்நாட்டோட முதலமைச்சர். நாம பதவிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்துல உள்ள மர்மத்தை விசாரணை செஞ்சு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம். சம்பிரதாயத்துக்கு என்ன பார்த்து சிரிச்சதால, எப்படி சிரிக்கலாம்னு ஓ.பி.எஸ்ஸோட முதலமைச்சர் பதவியை பிடுங்கிட்டாங்க. அப்புறம் யார் எப்படி முதலமைச்சர் ஆனாங்கன்னு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இன்னும் நாலு மாசம் தான் இருக்கு”.

மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

“கோபி தொகுதியில் எட்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்க செங்கோட்டையன், மூத்த அமைச்சராகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருக்காரு. ஆனா, பள்ளிக்கல்வித் துறையில் என்ன மாற்றம் நடக்குது, என்ன அறிவிப்பு வருதுன்னே அவருக்குத் தெரியாது. செங்கோட்டையன் முன்னாடி முதல்வர் பழனிசாமி கைகட்டி நின்ற காலம் இருந்தது. இப்போது பழனிசாமி முன்பாக செங்கொட்டையன் கைகட்டி நிற்கிறார். செங்கோட்டையன் ஒரு அப்பிராணி. அவரைப் பற்றி நான் விமர்சனம் செய்யத் தயாராக இல்லை” என முடித்தார்.

கூட்டத்தில் ஸ்டாலின் பெயர் படித்த 10 பேர் எழுந்து பேசினர். அதில் வாசுமதி என்கின்ற பெண் பேசி முடித்ததும், ‘சார் நான் கத்துக்கிட்ட ஒரு விஷயத்தை உங்க முன்னாடி செஞ்சுக் காமிக்கணும்னு நினைக்கிறேன்’ எனக் கேட்க, ஸ்டாலின் ஓகே சொன்னார். கண்களை துணியால் கட்டிக்கொண்ட அந்தப் பெண், ‘என் கண்ணை கட்டிட்டு என் கண்ணு முன்னாடி எதைக் கொண்டு வந்தாலும், எதிர்ல என்ன இருக்குன்னு சொல்லிடுவேன் சார்’ எனச் சொல்ல, ஸ்டாலினோடு சேர்ந்து கூட்டமும் பரபரப்பானது. அருகிலிருந்த பெண் ஒருவர் செய்தித்தாளை எடுத்து நீட்ட, ‘தலைவர் அவர்களே வருக வருகன்னு எழுதியிருக்கு... பக்கத்துல உங்க படம் போட்ருக்குன்னு’ சொல்ல கூட்டம் ஆர்ப்பரித்தது.

ஸ்டாலின்

அந்தப் பெண்ணை அருகே அழைத்து அ.தி.மு.கவின் குற்றப்பத்திரிக்கை என்னும் நோட்டீஸை நீட்டி ‘இதுல என்ன போட்ருக்குன்னு சொல்லுங்க’ என ஸ்டாலின் சோதித்தார். ‘அ.தி.மு.க குற்றப்பத்திரிக்கைன்னு எழுதியிருக்கு. வலது பக்கம் முதல்வர் எடப்பாடி படம் போட்ருக்கு. துப்பாக்கியில சுடுற மாதிரி போட்டோ இருக்கு. ஓ.பி.எஸ் படம் இருக்கு’ என அந்தப் பெண் சொல்லச் சொல்ல கூட்டம் அதிர்ந்தது. இதையெல்லாம் பார்த்து நம்பாத ஸ்டாலின் ஒரு வெள்ளைப் பேப்பரில் ஏதோ எழுதி ‘இது என்னன்னு படிங்க பார்க்கலாம்’ என டெஸ்ட் செய்தார். ‘அடுத்து உதிக்கப்போவது உதயசூரியனின் ஆட்சி தான்’ என அந்தப் பெண் சொல்ல, ஒட்டுமொத்தக் கூட்டமும் ஆராவாரத்தில் கத்தியது. ‘எப்படிம்மா இது... ஏதாவது பயிற்சி எடுக்குறீங்களா’ என ஸ்டாலினே அந்தப் பெண்ணின் செயலைப் பார்த்து ஷாக்காகிப் போனார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/from-video-shoot-to-stalin-test-women-cadres-skill-reporting-from-erode-dmk-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக