இரண்டு வயது பெண் குழந்தைக்கு நுரையீரல் பகுதியில் நிலக்கடலை சிக்கியதையடுத்து அபாயகட்டத்திற்குச் சென்ற நிலையில், தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு சுவாசக் குழாய் உள்ளே செலுத்தும் கருவி(ஸ்கோப்பி) உதவியுடன் நிலக்கடலையை வெளியே எடுத்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர். இதனால் நெகிழ்ந்த பெற்றோர் கண்ணீர் மல்க டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பெரியகண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண். இவர் சுவர் ஓவியம் வரையும் தொழிலாளி. இவரின் மனைவி கீர்த்தனா. இந்த தம்பதியின் மகள், 2 வயது குழந்தை அனுமித்ரா. சில தினங்களுக்கு முன்பு அனுமித்ரா வீட்டின் முன் பகுதியில் நிலக்கடலை சாப்பிட்டுக்கொண்டே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சிறிது நேரத்தில் அனுமித்ராவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. நன்றாக விளையாடிய குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து பதறிய அனுமித்ராவின் பெற்றோர் உடனடியாக டூவீலரில் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர்.
அங்கு பணியிலிருந்த டாக்டர் குழந்தையின் நிலையை உணர்ந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரைத்தார். 'குழந்தைக்கு என்ன ஆச்சோ' என்ற பதற்றத்துடன், 'எங்க பிள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது' என கடவுளை வேண்டிக்கொண்டு நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு விரைந்தனர் பெற்றோர்.
இதையடுத்து நாகை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். திருவாரூர் மருத்துவமனைக்கு வந்தபோது, குழந்தைக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்துகொண்டே இருந்தது.
குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் அபாயகட்டத்தில் இருந்ததை அடுத்து, உடனடியாக வென்டிலேட்டர் பொருத்தி தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்றிரவு சரியாக 7.30 மணிக்கு அனுமித்ரா தஞ்சை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
குழந்தையின் மோசமான நிலையைக் கண்டு டாக்டர்கள் பதற்றமடைந்தனர். இதையடுத்து காது, மூக்கு தொண்டை டாக்டர் ராஜ்கமல், மயக்கவியல் டாக்டர் மாலினி, குழந்தைகள் நல டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அப்போது, நுரையீரலில் வலது பக்கத்தில் மூன்று துண்டுகளாக நிலக்கடலை சிக்கியிருப்பதை 'பிராங்கோஸ்கோபி(Bronchoscopy)' மூலம் கண்டுபிடித்தனர். தொடர்ச்சியாக இரண்டு மணிநேரம் நடைபெற்ற சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் குழு போராடி நிலக்கடலையை வெளியே எடுத்தனர்.
தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், அனுமித்ரா அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமித்ரா அபாய கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருக்கிறார். தங்கள் முன்னிலையிலேயே டாக்டர்கள் குழு போராடி குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதையடுத்து, அனுமித்ராவின் பெற்றோர் சிகிச்சையில் ஈடுபட்ட டாக்டர்களிடம், 'கிட்டத்தட்ட நின்னுபோன எங்க மக உசுரை மீட்டுக் கொடுத்துட்டீங்க, நீங்க எங்களுக்கு கடவுள் மாதிரி' என ஆனந்தக் கண்ணீரில் நனைந்தபடி நன்றி தெரிவித்தது அனைவரையும் நெகிழவைத்தது.
இதையறிந்த பலரும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் குழுவைப் பாராட்டினர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மருது துரை, ''டாக்டர்களின் கடுமையான, சவால் நிறைந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. குழந்தையின் பெற்றோர் முகத்தில் ஒளிரும் சிரிப்பே இதற்கு சாட்சி'' என வாழ்த்திப் பாராட்டினார்.
இதுகுறித்து டாக்டர்களிடம் பேசினோம், ''அனுமித்ரா மிக அபாயகட்டத்தில் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக இதயதுடிப்பு குறைந்து கொண்டேயிருந்தது. தொடக்கத்தில் இதன் சீரியஸ்னெஸ் குழந்தையின் பெற்றோருக்குத் தெரியவில்லை.
நாங்கள் நொடிகூட தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினோம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து சுவாசக் குழாய் உள்ளே செலுத்தக்கூடிய கருவியை எடுத்து வந்து சிகிச்சை மேற்கொண்டோம். அப்போது நுரையீரல் பகுதியில் சிக்கிய மூன்று துண்டு நிலக்கடலைகளை வெளியே எடுத்தோம்.
பின்னர் குழந்தையின் உடல்நிலை சீரானது. 15 நிமிடம் தாமதமாகியிருந்தால்கூட நிலைமை கையைவிட்டுப் போயிருக்கும்'' என்றனர். அதிவேகமாக ஆம்புலன்ஸை ஓட்டி குழந்தையை உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்த்த டிரைவருக்கு டாக்டர்கள் குழு பாராட்டு தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர், ''எங்க உசுர எங்க கையில கொடுத்துட்டாங்க'' என்றனர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து.
source https://www.vikatan.com/news/kids/thanjavur-govt-hospital-successfully-saved-the-kid-who-got-stuck-with-peanuts-in-the-lungs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக