கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே வெள்ளச்சிவிளையில் கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நர்சிங் படிக்கும் மாணவிகள் கடந்த டிசம்பர் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த புகாரில்,``நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் விடுதியில் தங்கி நர்சிங் பயின்று வருகிறோம். இக்கல்லூரிக்கு மத்திய, மாநில அரசுகளின் சான்றிதழ் மற்றும் இந்திய மருத்துவ பல்கலை கழகங்கள் மற்றும் கவுண்சிலில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகக் கூறி ஏமாற்றி எங்களைச் சேர்த்துள்ளனர். முதலில் சிறிய தொகை செலுத்தினால் போதும், இலவச படிப்பு என்று கூறி பின்னர் ஆண்டிற்கு முப்பதாயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள். இங்கு போதுமான அடிப்படை வசதி எதுவும் இல்லை. மிகச் சிறிய அறையில் நூறுபேருக்கு மேல் தங்க வைத்துள்ளார்கள். போதுமான உணவு, கழிவறை வசதிகள் இல்லை" என்பதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தனர்.
மேலும், கல்லூரியின் தாளாளர் அடிக்கடி மாணவிகளிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதுபற்றி புகார் அளித்தால் ஒரிஜினல் சான்றிதழ்களைத் தர மாட்டோம் எனக்கூறி மிரட்டல் விடுத்ததாகவும் மாணவிகள் புகாரில் தெரிவித்திருந்தனர். இது குறித்து பத்மநாபபுரம் துணை ஆட்சியர் மாணவிகளை விசாரணைக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர்களை விசாரணைக்கு செல்லவிடாமல் தடுத்து வைத்துள்ளனர்.
Also Read: `அதிக மார்க் வாங்கித் தருகிறேன்!'- சிவகங்கை பா.ஜ.க பிரமுகரால் நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை
இதையடுத்து மாணவிகள் கல்லூரி வளாகத்துக்கு முன்பு பெற்றோருடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் அங்கு வந்த இரணியல் போலீஸார் அவர்களிடம் புகார் மனுப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த நிலையில் மாணவிகள் புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் உத்தரவிட்டார்.
இரணியல் போலீஸார் மாணவிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, பள்ளி தாளாளர் செல்வகுமார் மற்றும் அவரது மனைவியும் கல்லூரி முதல்வருமாகிய செல்வராணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களைத் தேடி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/nagaercoil-nursing-students-staged-protest-against-college-administration
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக