இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலை புலிகள் மீது இலங்கை ராணுவம் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதத்தில் இறுதி கட்ட தாக்குதல்களை நடத்தியது. இதில் புலிகள் இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்த போரின் போது இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான விடுதலை புலிகளுடன், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கை தமிழர்களும் குண்டு வீசி கொல்லப்பட்டனர். தமிழர் பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இந்த இறுதி கட்ட போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை பல்கலைக் கழக நிர்வாகம் கடந்த 8-ம் தேதி இரவோடு இரவாக இடித்து அழித்தது. இதனை அறிந்த மாணவர்கள், தமிழர் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் முன் திரண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இலங்கை போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் துணையுடன் முள்ளிவாய்க்கால் நினைவிடம் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து அன்று இரவு முதல் மாணவர்கள் உள்ளிட்ட தமிழர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், வைகோ, பழ.நெடுமாறன், சீமான் என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வைகோ, வேல்முருகன், வீரமணி ஆகியோர் அறிவித்தனர்.
இதனிடையே, `யாழ் பல்கலையில் இருந்த நினைவு ஸ்தூபி தகர்க்கப்பட்டதற்கும் இலங்கை அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். மேலும் அந்த நினைவு ஸ்தூபி சட்டவிரோதமானது என குறிப்பிட்டே பல்கலை நிர்வாகம், அதனை அகற்றியுள்ளது. இந்த சம்பவத்தை தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதே போல் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முழு அடைப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை சந்தித்த யாழ் பல்கலை துணைவேந்தர் ஶ்ரீ சற்குனராசா, `மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியை கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து இன்று காலை பல்கலைக் கழகத்திற்குள் மாணவர்களுடன் செல்ல முயன்ற துணைவேந்தரை போலீஸார் மற்றும் அதிரடிப்படையினர் தடுத்தனர். அவர்களை மீறி சென்ற துணை வேந்தர் நினைவு ஸ்தூபி இடிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற போது அங்கு வந்த போலீஸ் அதிகாரி அவரை தடுத்தார்.
Also Read: `எதிரி நாட்டில்கூட இப்படி நடக்காது!’- முள்ளிவாய்க்கால் நினைவிடத் தகர்ப்பைக் கண்டிக்கும் தலைவர்கள்
அவரிடம் ``தற்போது எந்த கட்டுமான பணியும் செய்யபோவதில்லை. ஸ்தூபி இடிக்கப்பட்ட இடத்தில் கல் நடப்போகிறோம். எனது மாணவர்கள் 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அதனை முடித்து வைக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எனவே எம்மை தடுக்காதீர்கள்’’ என துணை வேந்தர் தெரிவித்தார்.
இதன் பின் அவர்கள் அங்கு செல்ல போலீஸ் அதிகாரி அனுமதித்தார். இதையடுத்து மாணவர்களுடன் அங்கு சென்ற துணை வேந்தர் தேவாரம் பாடி, மலர் தூவி நினைவுக்கல்லை நாட்டினார். மாணவர்களும் மலர் தூவினர். இதன் பின் உண்ணாவிரதம் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த துணை வேந்தர் மாணவர்களுக்கு கஞ்சி வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
source https://www.vikatan.com/news/international/vc-action-to-stop-the-students-hunger-strike-after-yalpanam-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக