Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

`இதற்கு பதில் அளிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை!’ - விளக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்

டிசம்பர் 31-ம் தேதி `புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார்’ என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருக்க, `மன்னித்துக்கொள்ளுங்கள்... நான் அரசியல் கட்சி தொடங்கவில்லை' என்று `அண்ணாத்த’ ரஜினிகாந்த் கைவிரித்துவிட, அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் களமும் அதிர்ந்துகிடக்கிறது. கால் நூற்றாண்டைத் தாண்டிய ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச எதிர்பார்ப்புக்கு, தெளிவான முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணியிலும் பல்வேறு மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

ரஜினிகாந்த்

`அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது’ என்று முதல்வரும் துணை முதல்வரும் அறிவித்த பின்னரும்கூட, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக்கொள்ளத் தயங்கிவந்தது தமிழக பா.ஜ.க. இதையடுத்து, ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் திட்டத்துடன்தான் அ.தி.மு.க கூட்டணியை உதாசீனப்படுத்துகிறது என்றெல்லாம் பேச்சுகள் கிளம்பின. இந்தநிலையில், ரஜினிகாந்தின் அறிவிப்பு மறுபடியும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

இதையடுத்து தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினேன்...

``தமிழக பா.ஜ.க-வினரின் வேல் யாத்திரைக்கு அனுமதியை மறுத்தது அ.தி.மு.க அல்ல, தமிழக அரசுதான் என்று கூறியிருக்கிறீர்களே..?’’

``கொரோனா ஊரடங்கு காலகட்ட சூழல்கள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சூழ்நிலை. ஒரே மாவட்டத்துக்குள்ளேயே ஊர்விட்டு ஊர் வெவ்வேறு சூழ்நிலைகள். இந்தநிலையில், மாவட்டக் காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை என ஒவ்வொரு துறையும் `வேல் யாத்திரைக்கு அனுமதி கொடுக்கலாமா, வேண்டாமா' என்பது குறித்து ஒவ்வொரு கருத்தைச் சொல்லும். இறுதியாக மாவட்ட நிர்வாகம்தான் முடிவெடுத்துச் செயல்படுத்தும். ஆக, இந்த நடைமுறையில் அ.தி.மு.க எங்கிருந்து வந்தது?''

வேல் யாத்திரை

``இந்த விஷயத்தில், உங்களுக்கிருக்கும் இந்தப் புரிதல், தமிழக பா.ஜ.க-வின் மற்ற தலைவர்களிடம் இல்லாததால்தான் அ.தி.மு.க தலைவர்களை விமர்சிக்கிறார்களா?’’

``எனக்குத் தெரிந்து இந்த விஷயத்தில், தமிழக பா.ஜ.க தலைவர்கள் யாரும் அ.தி.மு.க தலைவர்களை விமர்சனம் செய்யவில்லை. ஆனால், எங்களுக்குச் சில மன வருத்தங்கள் இருந்தன. அதாவது, அ.தி.மு.க ஆளுங்கட்சியாகவே இருந்தாலும் ஊரடங்கு காலகட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்தினால், எங்களுக்கு விதிக்கப்பட்ட விதிகள் அவர்களுக்கும் பொருந்தும்தானே... எனவே, மாவட்ட நிர்வாகம் இப்படிப் பாரபட்சமாக அனுமதி கொடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த மன வருத்தத்தில்தான் எங்கள் தலைவர்கள் விமர்சித்தனர்.

Also Read: ``நான் செய்த ஒரே குற்றம்’ ; போகிறேன், வர மாட்டேன்!’ - தமிழருவி மணியன் உருக்கம்

இப்போது ஒரு மாதம் கடந்து, சூழல்கள் எல்லாமே மாறிவிட்டன. பொதுக்கூட்டம் நடத்தவும், தேரோட்டமே விடக்கூடிய அளவுக்கும் எல்லா அனுமதிகளும் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், இப்போது பா.ஜ.க நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லையெனில் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது!’’

அண்ணாமலை

`` `கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் 2,000 ரூபாயாகக் கொடுக்கிறார்கள்’; `டயரைப் பார்த்துக் கும்பிடுகிறார்கள்’ என்றெல்லாம் ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சிக்கிறாரே அண்ணாமலை..?''

``தான் அவ்வாறு பேசவில்லை என்று அண்ணாமலையே மறுத்து விளக்கம் கொடுத்துவிட்டார். நீங்கள் ஏன் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?’’

Also Read: `ரஜினி அரசியலுக்கு வராதது தமிழக மக்களுக்குத்தான் இழப்பு!’ - போயஸ் கார்டனில் ரசிகர் நெகிழ்ச்சி

``தமிழக பா.ஜ.க-வின் விமர்சனத்துக்கு பதிலடியாகத்தானே, `ஒரு குறிப்பிட்ட உயர் சமூகம், கருங்காலிக் கூட்டம் திராவிட இயக்கத்தை ஒழித்துக்கட்ட முயல்கிறது' என்று அ.தி.மு.க-வும் கொதிக்கிறது?''

``ஒவ்வொருவரும் அவரவர் தன்மைக்கேற்ப, ஏரியாவுக்கேற்ப வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவார்கள். இதையெல்லாம் நீங்கள் குறை சொல்லக் கூடாது. `கருங்காலி கூட்டம்' என்று அவர் சொல்வது இந்தக் கட்சியைத்தான், அந்தக் கட்சியைத்தான் என்று நீங்களாக ஏன் கற்பனை செய்துகொள்கிறீர்கள்?’’

கே.பி.முனுசாமி

``கூட்டணி ஆட்சி, இரட்டை இலக்க எண்களில் தொகுதி உடன்பாடு என இந்த இரண்டு விஷயங்களிலும் தமிழக பா.ஜ.க உறுதியாக இருக்கிறதா?’’

``தேர்தல் சம்பந்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகளையெல்லாம் எங்கள் கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும். இந்தக்குழுவில், என்னையும் இணைத்துப் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி அகில இந்தியத் தலைமை உத்தரவிட்டால், அப்போது என்னுடைய கருத்து என்னவென்று உங்களுக்கு பதிலளிக்க முடியும். மற்றபடி இப்போது இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் எந்த அதிகாரமும் எனக்குக் கிடையாது!’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/ponradhakrishnan-interview-on-2021-tn-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக