கடந்த ஆண்டு வசூலித்த கல்விக் கட்டணத்தில் 75 சதவிகிதக் கட்டணத்தை இரு தவணைகளாக வசூலித்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், சில தனியார் பள்ளிகள் முழுக் கட்டணத்தையும் செலுத்தச் சொல்லி அழுத்தம் கொடுப்பதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், பொன்னேரியில் உள்ள `வேலம்மாள் போதி கேம்பஸ்' சி.பி.எஸ்.இ பள்ளியில் கல்விக் கட்டணம் முழுவதையும் செலுத்தச் சொல்வதோடு கணக்கில்லாமல் விடுதிக் கட்டணம் கேட்பதாகவும் குமுறுகின்றனர் பெற்றோர்கள் சிலர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சில பெற்றோர்கள், ``கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில்கொண்டு கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றும் ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்களுக்கும் கல்வி நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இருதரப்பு நலனையும் கருத்தில்கொண்டு நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், ``கடந்த கல்வியாண்டில் வசூலித்த மொத்த கல்விக் கட்டணத்தில் 75 சதவிகிதத்தை இரு தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதியளித்தார். 40 சதவிகித முன்பணத்தை ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கடந்த கல்வியாண்டில் பாக்கி வைக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் 2-ம் தவணையாக 35 சதவிகித கட்டணத்தை இயல்புநிலை திரும்பி, கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து வசூலித்துக்கொள்ளலாம்" என்றும் உத்தவிட்டார்.
ஆனால், வேலம்மாள் போதி கேம்பஸில் நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தவில்லை. கல்விக்கட்டணம் முழுவதையும் செலுத்தச் சொன்னார்கள். அதை முறையாக இ-மெயில் வாயிலாகவோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கவில்லை. ரெக்கார்ட் செய்துவிடக் கூடாது என்பதற்காக வெவ்வேறு நம்பர்களிலிருந்து வாட்ஸ்அப் கால் மூலமாகச் சொன்னார்கள். முழுக் கட்டணத்தையும் செலுத்தினால்தான் ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற நிலையில், வேறு வழியில்லாமல் அந்தத் தொகையைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டனர்.
இதற்கிடையில்தான் ஜனவரி 19-ம் தேதி முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. உடனே விடுதிக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள். மாணவர்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் அது நியாயமாக இருக்க வேண்டாமா என்பதுதான் எங்களுடைய கேள்வி. பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கு ஒரு வருடத்துக்கான விடுதிக்கட்டணம் 1,40,000 ரூபாய். அதில், 60,000 ரூபாயைக் கழித்துக்கொண்டு 80,000 ரூபாயைக் கட்ட வேண்டும். அப்போதுதான் உங்கள் பிள்ளையை பள்ளியில் அனுமதிப்போம் என்கின்றனர்.
அதாவது, இதுவரை 8 மாதங்கள் விடுதி செயல்படாமல் இருந்ததற்கு 60,000 ரூபாயைக் கழித்துக்கொள்ள வேண்டுமாம். மீதமுள்ள நான்கு மாதங்களுக்கு 80,000 ரூபாய் செலுத்த வேண்டுமாம். இது என்ன வகையான கணக்கு என்பதே புரியவில்லை. பிள்ளைகளின் எதிர்காலம் அடங்கிய விஷயம் என்பதால் இதுகுறித்து வெளியிலும் சொல்ல முடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை" என்றனர் இயலாமையுடன்.
இந்தப் புகார் குறித்து வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியின் நிர்வாக அதிகாரி பிரபாகரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ``இது தவறான கருத்து. அரசு எவ்வளவு கட்டணம் வசூலிக்கச் சொல்லியிருக்கிறதோ அந்தளவுதான் கட்டணம் வசூலித்திருக்கிறோம். வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு முறையான ரசீது கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிக கட்டணம் வசூலித்தோம் என்பது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்" என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவரான அருமை நாதனிடம் பேசினோம். ``வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு, தொழில் முடக்கம் எனப் பொருளாதார ரீதியாக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் பிள்ளைகளின் கல்விக்கட்டணம் என்பது கழுத்தை நெரிக்கும் விஷயமாக மாறியிருக்கிறது. நீதிமன்றம் செலுத்தச் சொன்ன 75 சதவிகிதக் கட்டணத்தையே செலுத்த முடியாமல் பலர் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர். இந்தக் கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்திருப்பதற்கு இதுதான் காரணம். சில பெற்றோர்கள் தங்களிடம் இருக்கும் நகைகளை அடகு வைத்தோ கடன் வாங்கியோ 75 சதவிகிதக் கட்டணத்தைச் செலுத்திப் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். முழுக் கட்டணத்தையும் செலுத்துங்கள் என்று சில பள்ளிகள் நெருக்கடி கொடுப்பது தொடர்ந்து வருகிறது.
இப்படியான குற்றச்சாட்டுகள் சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீதுதான் அதிகம் வருகிறது. தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடும் என்ற பெற்றோர்களின் அச்சத்தை பள்ளி நிர்வாகங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்துகின்றன. இவையெல்லாம் தெரிந்தும் அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதைத் தடுப்படுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை கல்வி என்பது முழுக்க முழுக்க வணிகம்தான். அவர்களுக்கு லாபம்தான் முக்கியமே ஒழிய மாணவர்களின் நலன் கிடையாது என்பது தெரிந்த கதைதான். ஆனால், இப்படியான அசாதாரண சூழலிலும்கூட ஈவு இரக்கம் இல்லாமல் நடந்துகொள்வதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இப்படிப் பெற்றோர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/education/parents-alleging-that-velammal-bodhi-campus-force-them-to-pay-the-high-fee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக