ம்பாட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களைப் பதிவிட்டு, சர்ச்சையாகி பின் அதனை நீக்கியவற்றைத் தொகுத்தால் அவை பல்வேறு அத்தியாயங்களைப் பெரும் என்பதில் ஆச்சர்யமில்லை. அந்த அளவிற்கு தனது நான்காண்டு ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகளை அவர் ஏற்படுத்தியிருக்கிரார்.
வலதுசாரி நிலைப்பாடுகளை உடைய ட்ரம்ப், தனது சர்ச்சைக்குரிய செயல்களால் மக்களின் மத்தியில் அவப்பெயரைப் பெற்றிருக்கிறார். H1B விசா தொடங்கி, தற்போது நிகழ்ந்து வரும் ஆட்சி மாற்றம் தொடர்பான விவகாரங்கள் வரை ட்ரம்ப் ஏற்படுத்திய சர்ச்சைகளும், அதனால், ஏற்பட்ட விளைவுகளும் ஏராளம்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் அமெரிக்கா அதிபர் தேர்தலானது நடந்து முடிந்தது. இம்முறை ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றைப் படைத்தனர்.
ஆரம்பத்தில், தேர்தல் முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவுப்புகள் வெளியாக தாமதமானால், தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் நடந்ததுள்ளதாகவும், வாக்கு இயந்திரங்கள் மூலம் மோசடி நிகழ்ந்திருப்பதாகவும் குற்றம்சாட்டி வந்ததார் ட்ரம்ப். அது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளும் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன.
பின்னர், ஒவ்வொரு மாகாணமாக முடிவுகள் வெளிவந்தன. ட்ரம்ப்பும், வேகமெடுக்கத் தொடங்கினார். வெள்ளை மாளிகையின் பிடியை இழக்க விரும்பாத ட்ரம்ப், தொடர்ந்து ஜோ பைடன் மீது அவதூறு கருத்துக்களையே பரப்பி வந்தார். ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்கியது. ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கா நகரங்களின் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர்.
Also Read: அமெரிக்கா: ட்ரம்ப் உரை... துப்பாக்கிச்சூடு; ஆதரவாளர்களால் கலவரபூமியான செனட்! - நடந்தது என்ன?
ஜோ பைடன் அமெரிக்கா அதிபராக வரும் ஜனவரி 20-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், கடந்த வாரம் வாஷிங்டன் கேபிடலில் அதிபராக தேர்ந்தெடுக்கபட்ட பைடனுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் செய்துவந்தனர். அப்போது உள்ளே நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சையானது சர்வேதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கானது தற்போது நிரந்தரமாக முடக்கப்பட்ட நிலையில். அதற்கு முன்னர் வட கொரியா அதிபரை சீண்டி அவர் வெளியிட்ட கருத்துதான் அமெரிக்காவின் தற்போதைய டாப் ஆஃப் தி டவுன்.
``தங்களிடம் உலகின் சக்தி வாய்ந்த ஆணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறும் கிம் ஜாங் உன் ஆளும் வட கொரியாவை விட பல மடங்கு சக்திவாய்ந்த அணு ஆயுதம் உள்ளது” என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். இதனால், அவர் விரைவில் அணு ஆயுதத் தாக்குதலை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்து ட்ரம்ப் தனது நெருங்கிய வட்டத்திலுள்ள சிலரிடம் விவாதிதுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ட்ரம்ப்பால் அணு ஆயுதத் தாக்குதலை நடத்த முடியுமா?
அமெரிக்கா அரசியலமைப்பைப் பொறுத்த வரையில், ட்ரம்ப்பின் தன்னிச்சையான முடிவால் எதிரி நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவது என்பது சாத்தியமாகாது. ஏனெனில், உயர்மட்ட ஆலோசனைக் குழுவுடன் ஆலோசித்தப் பிறகு ராணுவத் தளபதிகள் ஒப்புதல் அளித்த பின்னரே இதனை நிகழ்த்த முடியும்.
ஏற்கெனவே செனட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ட்ரம்ப் செயல்பட்டதாக ட்ரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், ட்ரம்ப் தனது சங்கேதக் குறியீடான `பிஸ்கட்’ மூலம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனைத் தொடர்புகொள்ள முயற்சிக்கலாம் என்பதால் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், அணு ஆயுதத் தாக்குதலை ட்ரம்ப் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு முப்படைகளின் ராணுவத் தளபதியான மார்க் மில்லியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ட்ரம்ப்பின் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாகவே 25-வது சட்டத்திருத்தத்தின்படி உடனடியாக அவரைப் பதவியிலிருந்து விடுவிக்க பதவி நீக்க தீர்மாணமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திசை திருப்புகிறாரா ட்ரம்ப்?
கடந்த 2018-ம் ஆண்டே இது தொடர்பான கருத்துக்களை தெரிவித்து அவை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ட்ரம்ப் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், தனது ஆட்சி அதிகாரம் முடிவதற்கு முன்பாக உலகமே திரும்பிப் பார்க்கும் வகையிலான செயலை நிகழ்த்த ட்ரம்ப் திட்டமிடுகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. செனட் தாக்குதல் விவகாரம் ட்ரம்ப்புக்கு அவப்பெயரை உண்டாக்கியுள்ளதால் அதனை திசை திருப்பும் நோக்கில் இதனை செய்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்த சூழலில், ட்ரம்ப் பதவி விலகுவது குறித்த சர்ச்சை நீடித்து வருவதால், ஒருவேளை உடனடி பதவி நீக்க தீர்மானம் செயல்படுத்தவில்லை என்றால், பிரதிநிதிகள் சபையில் ட்ரம்ப்புக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை முன்னெடுக்க ஜனநாயகக் கட்சியினர் முடிவுசெய்துள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/international/trumph-nuclear-strike-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக