Ad

புதன், 27 ஜனவரி, 2021

கையெழுத்திட்ட சசிகலா; உடைமைகளைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்! - விடுதலை நடைமுறை விபரம்

சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைவாசம் முடிந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிற பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையிலிருந்தபடியே விடுதலைக்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் லதா தலைமையிலான சிறை அதிகாரிகள் காலை 9.15 மணிக்கு ஆவணங்களுடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டனர். சசிகலா விடுதலையானதையொட்டி, அ.ம.மு.க தொண்டர்கள் அதிகளவில் மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்தனர்.

மருத்துவமனை முன் காத்திருந்த பெண் தொண்டர்கள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்நாடக காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் மருத்துவமனை கொண்டுவரப்பட்டது. மருத்துவர்கள், நோயாளிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அரசியல் கட்சியினர் மற்றும் ஊடகத்தினர் குறிப்பிட்ட எல்லைக்குள் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று மருத்துவமனைக்கு அருகிலிருந்த கடைகளையும் வியாபாரிகள் அடைத்திருந்தனர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் மருத்துவமனை வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.

Also Read: `அ.தி.மு.க-வை மீட்பதே எங்களின் நோக்கம்!’ -டி.டி.வி.தினகரன்

கூட்டம் அதிகளவில் கூடியதால், மருத்துவமனைக்கு முன்பு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த சிறை அதிகாரிகள், மருத்துவர்களின் உதவியுடன் சசிகலாவிடம் விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்துப் பெற்றனர். பின்னர், விடுதலைப் பத்திரத்தை அவரிடமே ஒப்படைத்தனர். சசிகலாவின் உடைமைகள் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விடுதலைக்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில், மருத்துவமனைக்குள் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மற்றும் குடும்ப உறவினர்களான இளவரசி மகன் விவேக், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.

மருத்துவமனை முன் கூடியிருந்த நிர்வாகிகள்

மருத்துவமனைக்கு வெளியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சோளிங்கரைச் சேர்ந்த என்.ஜி.பார்த்திபன், பெரியகுளம் கதிர்காமு, மொளச்சூர் பெருமாள், நிலக்கோட்டை தங்கதுரை உட்பட அ.ம.மு.க நிர்வாகிகள் பலர் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சசிகலா விடுதலைச் செய்யப்பட்டதையடுத்து, அவருக்கான பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இனி அவர் தண்டனை கைதி இல்லை. அவர் விருப்பப்பட்டால், விக்டோரியா அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சையைத் தொடரலாம் அல்லது வேறு மருத்துவமனைக்கும் மாறி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சசிகலா விடுதலையை அ.ம.மு.க தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடிவருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/procedural-details-of-sasikalas-release

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக