ஐந்தே மாத இடைவெளியில் இரண்டு விபத்துகளில் 346 பேரைப் பலிகொண்டன போயிங் 737 MAX ரக விமானங்கள். உலகை உலுக்கிய இந்த விபத்துகள் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். தொடர் விபத்துகளின் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த விமானங்கள் பறக்க உலகமெங்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில்தான் இந்த தடை நீக்கப்பட்டு இந்த ரக விமானங்கள் மீண்டும் பறக்கலாம் எனப் பச்சைக்கொடி காட்டியது அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA).
இப்போது இந்த விவகாரத்தை விசாரித்துத் தீர்ப்பளித்திருக்கிறது அமெரிக்க நீதித்துறை. இந்த விஷயத்தில் போயிங் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளதாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விபத்துகளுக்கு முன்னும் பின்னும் Federal Aviation Administration அமைப்பை ஏமாற்ற முயன்றதாக சுமார் 2.5 பில்லியன் டாலர் அபராதம் போயிங்கிற்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த 2.5 பில்லியன் டாலர் அபாரதத்தில் 243.6 மில்லியன் டாலர் கிரிமினல் குற்றத்திற்கான அபாரதமாகவும், 1.77 பில்லியன் டாலர் 737 MAX விமானங்களை வாங்கி ஏமாந்த வாடிக்கையாளர்களான விமானச் சேவை நிறுவனங்களுக்கும் 500 மில்லியன் டாலர் உயிரிழந்த 346 பேரின் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவிருக்கிறது. போயிங் ஏற்கெனவே 100 மில்லியன் டாலர் நிதியை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்குவதாக அறிவித்திருந்தது. பார்க்க பெரிய தொகை போல தெரிந்தாலும் போயிங்கின் ஆண்டு வருமானத்தில் இது ஒரு சிறு பகுதி மட்டுமே.
ஒழுங்குமுறை அமைப்புகளை ஏமாற்றும் போயிங் போன்ற உற்பத்தியாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எடுத்துரைக்கிறது இந்த தீர்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தையில் டாப் இடத்தில் நிலைத்திருக்கவே 737 Max ரக விமானங்கள் போயிங் அறிமுகம் செய்தது. அதிக எரிபொருள் திறன் கொண்ட இந்த விமானம் ஏர்பஸின் A320 neo மாடலுக்கு போட்டியாக களம் கண்டது. ஆனால், போட்டிப் போடுகிறேன் எனப் பாதுகாப்பில் கோட்டைவிட்டது போயிங். இந்த தொழில் போட்டியால் எப்படி இத்தனை உயிர்கள் பலியாகின என ஏற்கெனவே விரிவாக எழுதியிருக்கிறோம். அந்த கட்டுரையைக் கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.
Also Read: `இந்த தொழில்போட்டிதான் 346 உயிர்களைப் பலிகொண்டது!' ஏர்பஸ் Vs போயிங் ரைவல்ரி
தொழில்நுட்ப அளவில் சிக்கல்கள் இருந்தும் அதை FAA-விடமிருந்தும் வாடிக்கையாளர்களான விமானச் சேவை நிறுவனங்களிடமிருந்து மறைத்தது போயிங். இதன் விளைவாகவே இரு விபத்துகளும் நடந்தது. முதல் விபத்து நடந்த பிறகும் அதே தவற்றை மீண்டும் செய்தது போயிங். பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சந்தையில் உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதே போயிங்கின் முன்னுரிமையாக இருந்தது.
தவறென்று தெரிந்ததும் போயிங் ஊழியர்கள் இதைச் செய்திருக்கின்றனர். உரையாடல்கள், மெயில் என இதற்கான ஆதாரங்கள் சமீபத்தில் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் இடம்பெற்றன. போயிங்கின் அலட்சியமும், தொழில் போட்டி வெறியுமே இந்த விபத்துகளுக்குக் காரணம் என்றது இந்த அறிக்கை. சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த 737 MAX ரக விமானங்களுக்கு மீண்டும் கடந்த நவம்பர் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரச்னைகள் தீர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்படி FAA ஒப்புதல் அளிக்க உலகமெங்கும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கின்றன போயிங் 737 MAX ரக விமானங்கள். ஆனால், கடந்த மாதம் அமெரிக்க செனேட்டில் சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு விசாரணை அறிக்கையில் மறு சான்றிதழ் சோதனைகளிலும் முறைகேடுகள் செய்ய போயிங் முயன்றிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் FAA கண்டிப்பாக நடந்துகொள்ளாததுதான் போயிங்கின் இந்த அலட்சியப் போக்கிற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இத்தனை நடந்தும் FBI மற்றும் போக்குவரத்து துறை விசாரித்த இந்த வழக்கில் எந்த ஒரு தனிநபர் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படவில்லை. இந்த சம்பவங்களின் போது CEO-வாக இருந்த டென்னிஸ் ம்யூலன்பெர்க் 2019-ல் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், அவ்வளவே! அப்போதும் 60 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் மற்றும் சொத்துகளுடன்தான் அவரும் வெளியேறினார்.
ஒரு ஆண்டில் பெரும் வருமானத்தில் ஒரு பகுதியை அபராதமாக விதிப்பதுதான் 346 உயிர்களைக் குடித்த போயிங்கிற்கான தண்டனையா, இதுதான் பலியானவர்களுக்குக் கிடைக்கும் நீதியா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"இந்த அபராதம் என்பது கார்ப்பரேட் பேராசையில் பலியான 346 பேரின் ஆன்மாவை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. போயிங்கின் ஆண்டு வருமானத்தில் இது ஒரு சிறு பகுதிதான். இந்த அபராதம் என்பது கிரிமினல் குற்றம்" என்கிறார் அமெரிக்கப் போக்குவரத்து மற்றும் கட்டுமான செயற்குழு தலைவர் பீட்டர் டீஃபாஸியோ. "நீதித்துறை அதன் தீர்ப்பைப் பலியான மக்களின் குடும்பத்திடம் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என் பார்வையில் கார்ப்பரேட் அட்டூழியத்தை இந்த தீர்ப்பு மாற்றாது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடக்காமல் தடுக்காது" என்றும் கூறியிருக்கிறார் அவர்.
இப்போதுகூட இந்தோனேஷியாவில் ஒரு போயிங் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இது எதனால் நடந்தது என்கிற முழு விவரங்கள் இனிதான் தெரியவரும்.
போயிங்கிற்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன... கமென்ட்களில் பதிவிடுங்கள்!
source https://www.vikatan.com/technology/tech-news/346-lives-lost-to-corporate-greed-fine-imposed-on-boeing-but-is-this-enough
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக