Ad

திங்கள், 11 ஜனவரி, 2021

திருச்சி: `20 சீட்.. இல்லன்னா 234 தொகுதிகளில் தனித்துப் போட்டி!'- தே.செ. பேரவை

`இனி நாங்கள் ஒன்னும் மைனாரிட்டி சமூகம் கிடையாது. எங்களை இப்படியே சொல்லி அரசியல் கட்சியினர் பிரித்து வைத்திருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு 20 இடங்களை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லையென்றால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் ஜெகநாத் மிஸ்ரா.

மகளிர் மாநாடு

தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிர் அணி மாநாடு திருச்சியில் நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பின் போது தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேசுகையில். ”தமிழகம் முழுவதும் 23 தொகுதிகளில் செட்டியார் சமுதாய மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

மகளிரணி

அரசு மற்றும் அரசியலில் செட்டியார்கள் மைனாரிட்டியாக இருக்கிறார்கள் என சொல்லி சொல்லி பிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய 85 வகையான உட்பிரிவுகளைக் கொண்ட செட்டியார் சமூதாயம் ஒட்டுமொத்த தமிழக மக்கள் தொகையில் 2.5 கோடி பேர் இருக்கிறார்கள்.

இந்த எண்ணிக்கையான செட்டியார் இன மக்கள் தமிழகத்தில் 120 தொகுதிகளில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இந்த அமைப்பில் இதுவரை ஆன்லைனில் மட்டும் 25 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர்.

மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள்

இருப்பினும் இதுவரை அரசியலில் ஒட்டுமொத்த செட்டியார்களை பிரித்தாளும் நிலையிலேயே இருக்கிறார்கள். எங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவம் எங்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இனியும் நாங்கள் விடமாட்டோம். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கும் கட்சிகளுடனே கூட்டணி வைப்போம். இல்லை என்றால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்.

விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் முக்கியத்துவம் வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். தமிழக எல்லைப்புற பகுதிகளில் புதிய அணைகளை தமிழக அரசு கட்ட வேண்டும்.

தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா

வங்கிகளில் வியாபார கடன் வழங்குவதில் 50 சதவீதம் பெண்களுக்கு கடன் வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் நலத்திட்டங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு மானிய கடன்கள் ஒதுக்கவேண்டும். சிறு வியாபாரிகள் நல வாரியத்தை அமைக்க வேண்டும். ஆன்லைன் வணிகத்தை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன" என்றார்.

தொண்டர்கள்

அதனைத்தொடர்ந்து, ``இம்மாநாட்டை தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநில மாநாடு நடத்த உள்ளோம். நாங்கள் பல ஆண்டுகளாக அ.தி.மு.க கூட்டணியில் தான் இருந்து வருகிறோம்., முதல்வர் எடப்பாடி துணைமுதல்வர் பன்னீர் செல்வத்திடமும் எங்களது கோரிக்கையை சொல்லியிருக்கிறோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/chettiyar-peravai-says-will-contest-in-234-constituency-in-2021-tn-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக