கோவிட்-19 தொற்று நோய்க்காலத்தில் நம்மில் பலரும் லைஃப்பாய் சோப்பு போட்டு குளித்திருப்போம். ஆனால், இந்த லைஃப்பாய் சோப் நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது தெரியுமா?
நூற்றாண்டைக் கடந்த சோப்
1894-ம் ஆண்டு வில்லியம், ஜேம்ஸ் லீவர்ஸ் சகோதர்களால் காலரா நோயைத் தடுக்கும் நோக்கில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சோப்தான் லைஃப்பாய் ஆகும். இந்தியாவுக்கு லைஃப்பாய் சோப் அறிமுகமாகி சுமார் 125 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இதனுடைய சந்தை நிலைப்படுத்தலான (Market Positioning) – கிருமிகளை அகற்றி ஆரோக்கியமாக வைத்திருக்கும் சோப்பு என்பது மட்டும் மாறவில்லை!
தொற்றக்கூடிய சாதாரண சளி, காய்ச்சலிலிருந்து வயிற்றுப்போக்கு/காலரா வரை நோய்கள் பெரும்பாலும் `தொடுதலின் (hand contact)’ மூலம்தான் பரவுகிறது. இந்தப் பரவலைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டும் என்கிற நோக்கில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட சோப்தான் இந்த லைஃப்பாய் ஆகும்.
சோப்புக்கான நிலைப்படுத்தலில் மாற்றம் இல்லையென்றாலும் அதனுடைய உபயோகத்தைப் பல சூழ்நிலைகளிலும், தளங்களிலும் விளக்கும் வகையில் இதனுடைய விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன. `லைஃப்பாய் இருக்குமிடமே ஆரோக்கியம் இருக்குமிடம்’ என்கிற விளம்பர வாசகமும் இசையும் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
லைஃப்பாய் Vs டெட்டால் மோதல்
ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை லைஃப்பாய் சோப் ஒரு பிராண்டாக மட்டுமல்லாமல் `கார்பாலிக்’ வகை அல்லது `சிவப்பு’ நிறத்திலான சோப் என்கிற வகைமையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதிகமாக விற்பனையாகும் சோப்பாகவும் இருந்து வந்தது. அதன்பின், டாடா ஆயில் மில் (டாம்கோ) நிறுவனமானது `OK’ என்கிற பெயரில் ஒரு சோப்பை இந்தப் பிரிவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், நாளடைவில் லைஃப்பாய் சோப் தயாரிப்பாளரான ஹிந்துஸ்தான் யுனிலீவர் `டாம்கோ’ நிறுவனத்தையே கையகப்படுத்திக் கொண்டது. இந்த சோப்களுக்குப் போட்டியாக `ஓஸ்வால் அக்ரோ’ நிறுவனம் ஒரு புதிய சோப்பை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த சோப்பால் அதிக நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
Also Read: உலகப்போர் தொடங்கி கோவிட் வரை... பக்கா பிராண்டாக `பார்லே' உருவானது எப்படி?
1980, 90-களில் லைஃப்பாய் சோப்பின் வளர்ச்சிக்குத் தடையாக வேறெந்த கார்பாலிக் சோப்பின் அறிமுகம் இல்லை என்றாலும், சந்தையில் விற்கப்படும் சோப்புகள் அனைத்தும் பிரீமியம், பாப்புலர், கார்பாலிக் சோப்புகள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. அதன்படி, கார்பாலிக் சோப்பாக இல்லாவிட்டாலும் பாப்புலர் வகையைச் சேர்ந்த சோப்புகளின் விலை லைஃப்பாய் விலையை ஒட்டி இருந்ததுடன், அதனுடைய அழகும் கவர்ச்சியும் பெரிய அளவில் இல்லாமல் இருந்ததால், லைஃப்பாய் சோப் `கீழ்மை’யாகக் (Down market) கருதப்பட்டது.
`ஆரோக்கியம்’ என்கிற கருத்தாக்கத்தை வைத்து லைஃப்பாய் சோப்புகள் விளம்பரம் செய்யப்பட்டாலும், இதற்கும் மற்ற சோப்புகளின் `புத்துணர்ச்சியூட்டும் குளியல்’ என்கிற நிலைப்படுத்தலுக்கும் வித்தியாசம் அதிகமில்லை என மக்கள் எண்ண ஆரம்பித்தனர். அத்துடன் லிரில், சிந்தால், டெட்டால் ஆகிய மூன்று சோப்புகளும் வெவ்வேறு நிலைப்படுத்தலுடன் சந்தையில் வலம்வர ஆரம்பித்தன. `Antiseptic’ என்கிற டேக் லைனுடன் டெட்டாலுக்கான நெருக்கம் அதிகமிருந்தாலும் அதை `சோப்’போடு பொருத்திப் பார்ப்பது சிரமமாக இருந்தது.
யுக்தியை மாற்றிய லைஃப்பாய்
பெரும்பாலான வீடுகளில் டெட்டால் இருந்தாலும் அது பெரும்பாலும் உடம்பில் அடிபடும்போது, முகச்சவரம் செய்யும்போது ஏற்படும் சிறு வெட்டுக் காயங்கள் போன்றவற்றுக்கே உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. இதனுடைய உபயோகத்தைப் பரவலாக்கும் நோக்கத்தில் அப்போது இதை சந்தைப்படுத்தி வந்த `ரெக்கிட் & கோல்மேன் ஆஃப் இண்டியா' நிறுவனமானது இதைப் பொது உபயோகத்துக்கும் பயன்படுத்தலாம் என்கிற வகையில் அதை விளம்பரம் செய்ய ஆரம்பித்தது. கிருமிக்கு எதிரான பாதுகாப்பு என `லைஃப்பாய்' பெருமையாகப் பேசப்பட்டு வர, டெட்டால் சோப்புக்கும் அதே விஷயங்களைச் சொல்கிற மாதிரி விளம்பரங்கள் வெளியாக ஆரம்பித்தன.
இதைத் தொடர்ந்து லைஃப்பாய் சோப்பும் தன் விளம்பரத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்தது. `கார்பாலிக் சோப்’ என்பதிலிருந்து `அதிக நுரை’ தரக்கூடிய மென்மையான சோப் என விளம்பரப்படுத்திக் கொண்டாலும் `ஆரோக்கியம்’ என்கிற அம்சத்துக்கு அழுத்தம் தருவதை இம்மியளவும் குறைத்துக்கொள்ளவில்லை.
Also Read: `அன்று நுசர்வன்ஜி கண்ட கனவுதான் இன்றைய டாடா!' மாபெரும் சாம்ராஜ்யமாக டாடா எழுந்தது எப்படி?
லைஃப்பாயில் பல வகை...
இன்றைக்கு உலகெங்கும் 60 நாடுகளில் லைஃப்பாய் சோப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2002-ம் ஆண்டிலிருந்து லைஃப்பாய் பல வகையான சோப்புகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அவற்றில் சில:
லைஃப்பாய் ப்ளஸ்,
லைஃப்பாய் ஆக்டிவ் ரெட்,
லைஃப்பாய் ஆக்டிவ் ஆரஞ்ச்,
லைஃப்பாய் இன்டர்நேஷனல்,
லைஃப்பாய் டோட்டல்,
லைஃப்பாய் ஸ்கின்கார்ட்,
லைஃப்பாய் ஃப்ரஷ்,
லைஃப்பாய் ஸ்ட்ராங்,
லைஃப்பாய் நேச்சுரல்ஸ் போன்றவையாகும்.
கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு / காலரா ஏற்படுவதற்கான தொற்றை 47% வரை குறைக்கலாம் என்பது `லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராபிக்கல் மெடிஸின்’ என்கிற அமைப்பின் மூலம் தெரியவர, லைஃப்பாய் தனது `ஸ்வஸ்த்ய சேத்னா’ என்கிற மிகப் பெரிய விழிப்புணர்வு முன்னெடுப்பை 2002-ம் ஆண்டு மேற்கொண்டது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததைக் கெளரவிக்கும் வகையில் 2006-ம் ஆண்டு இந்தியத் தபால் துறை ஒரு சிறப்பு தபால் கவர் வெளியிட்டு சிறப்பித்தது. 2002-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை இந்த விழிப்புணர்வுத் திட்டம் இந்தியாவில் சுமார் 51,000 கிராமங்களில் வசிக்கும் 12 கோடிக்கும் மேலான மக்களைச் சென்றடைந்திருக்கிறது.
Also Read: ஒரு `புரட்சி'யையே நிகழ்த்திய அமுல்... 70 ஆண்டுகளாகத் தொடரும் பால் சாம்ராஜ்யம்! #Amul
உலக கை கழுவும் நாள்
2010-ம் ஆண்டு லைஃப்பாய், வரிசை விஸ்தரிப்பு உத்தியின் கீழ் `லைப்பாய் ஹாண்ட் சானிடைஸ’ரையும் அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 15-ம் தேதியை லைஃப்பாய் சுமார் 100 நாடுகளில் `உலக கை கழுவும் நாளாக’ அனுசரித்து வருகிறது.
ஒவ்வொருவரும் முறையாக கை கழுவி சுகாதாரத்தைப் பேணுவதற்கு வருடத்துக்கு 20 சோப்புகள் தேவைப்படும். ஆனால், தற்சமயம் உலகளவில் 1.5 பில்லியன் மக்கள் சுமார் எட்டு பிராண்ட் சோப்புகளைத்தான் உபயோகித்து வருகிறார்கள் என இந்த நிறுவனத்தின் அறிக்கையொன்று கூறுகிறது. அத்துடன் இந்த நிறுவனத்தின் `கை கழுவும் திட்டங்கள்' மூலம் 2002-ம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 1.07 பில்லியன் மக்களை களப்பணி மற்றும் ஊடகங்கள் மூலமாக சென்றடைந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.
காலத்திற்கேற்றாற் போல புதுப்புது சோப்புகளை புது வடிவங்களில் லைஃப்பாய் அதனுடைய பெயரின் கீழ் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்திய நுகர்வோர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஒன்றாக லைஃப்பாய் தொடர்ந்து இருப்பது அதன் பெருமைக்கு முக்கியமான சான்றாகும்.
source https://www.vikatan.com/business/news/a-brief-story-on-lifebuoy-soap-and-its-125-years-history
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக