Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

உச்சக்கட்டத்தில் ராஜேந்திர பாலாஜி vs ராஜவர்மன் மோதல்! - என்ன நடக்கிறது விருதுநகர் அ.தி.மு.க-வில்?

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.கவில் மாவட்டப் பொறுப்பாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கும் மோதல் வலுத்துக் கொண்டே செல்கிறது. தனக்கு உதவியாளராகவும், அவரின் கார் டிரைவராகவும் இருந்த ராஜவர்மனை எம்.எல்.ஏ ஆக்கியது ராஜேந்திர பாலாஜிதான். ‘இந்த எம்.எல்.ஏ பதவி அண்ணன் போட்ட பிச்சை” எனச் சொன்னதை ராஜவர்மனே தற்போது மறுக்க முடியாது.

ராஜேந்திரபாலாஜி - ராஜவர்மன்

ஆனால், வருவாய்த்துறை அமைச்சரான உதயகுமாருடன் கைகோர்த்துக் கொண்டு ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டதும், ”அடுத்த மாவட்டச் செயலாளர் நான்தான்” என தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதுதான் அவருக்கு டென்ஷனை ஏற்பட்டுத்தியது என்கிறார்கள். அதிலிருந்து இருவரும் எதிரும் புதிருமாகவே இருந்து வந்தனர். விருதுநரில் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் கலந்து கொண்ட போது, ராஜேந்திரபாலாஜி, வெள்ளியிலாலான பசுவுடன் கூடிய கன்றுச்சிலையை பரிசளித்த போது, அதைவிட பெரிதாக வெள்ளிவாளைப் பரிசளித்தார் ராஜவர்மன். எல்லாவற்றிற்கும் மேலாக மேடையிலேயே சாஷ்டாங்கமாக முதல்வர் எடப்பாட்டி பழனிசாமியின் காலில் விழுந்து வணங்கினார் ராஜவர்மன்.

சமீபத்தில் கொரோனா ஆய்வுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவில்கூட , முதல்வரை வரவேற்க ராஜேந்திரபாலாஜி ஏற்பாடு செய்த கார்களின் எண்ணிக்கைக்கு இருமடங்காக கார்களை ஏற்பாடு செய்து ராஜேந்திரபாலாஜிக்குத் தலைவலியை ஏற்படுத்தினார் ராஜவர்மன். முதல்வருக்கு வரவேற்பைக்கூட தனித்தனியாகத்தான் அளித்தார்கள். ராஜேந்திர பாலாஜிக்கும், ராஜவர்மனுக்கும் இடையே நிலவி வந்த உச்சகட்ட மோதலைப் பார்த்து அதிர்ந்தே போனாராம் முதல்வர். இந்நிலையில்தான், ராஜவர்மன் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில் அமைச்சரின் பெயர், படம் இடம் பெறாமல் நடத்துவதும், ’ராஜவர்மன் வந்தால் நான் வர மாட்டேன். அவன் வரக்கூடாது’ எனச் சொல்லியே கட்சி நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.

ராஜேந்திர பாலாஜி

எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்குப் பதிலாக, ராஜவர்மனும், ராஜேந்திரபாலாஜியும் கட்சி நிகழ்ச்சிகளில் ஒருவரை ஒருவர் மாறிமாற்றி குறை சொல்லிக்கொண்டே வந்தனர். இந்நிலையில் , “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரும்தேர்தலில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம்” எனச்சொல்லி பகீரைக் கிளப்பியுள்ளார்.

சாத்தூர் தொகுதியில் நடந்த நிர்வாகிகளுடனான தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ., ராஜவர்மன், “அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாகவும், மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருக்கிறார். ஆனால், கட்சி நிர்வாகிகளை அவருக்கு மதிக்கத்தெரியவில்லை. யாரை வேண்டுமானாலும் ஒருமையில் பேசி அவமானப்படுத்துகிறார். அவரை எதிர்த்துக் கேள்வி கேட்டால், ‘ கொலை செய்து விடுவேன்’ என மிரட்டுகிறார். சாத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு என்ன்னை அழைக்காமலேயே நிகழ்ச்சியில் அவராக வந்து கலந்து கொண்டு செல்கிறார்.

ராஜேந்திர பாலாஜி

அ.தி,மு.கவில் யார் என்ன விளம்பரம் போட்டாலும் சரி, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் படத்தை விட தனது படத்தை பெரிதாக போடச் சொல்வார். அவர் சொன்னபடி செய்யாவிட்டால் சம்மந்தபட்ட நிர்வாகிக்கு அர்ச்சனைதான். விருதுநகர் மாவட்ட அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவருக்குத்தான் பதவிகளை கொடுக்கிறார். ஆனால், ஆரம்பம் முதல் அ.தி.மு.கவில் அடிமட்டத் தொண்டனான இருந்தவனுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது. என் சாத்தூர் தொகுதிக்கான நலத்திட்டப்பணிகளை முடக்குகிறார் ராஜேந்திரபாலாஜி. இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ’மினி கிளினிக்’ அமைக்கப்பட வேண்டிய இடங்களின் பட்டியலைக் கொடுத்தேன்.

அதில் பெரும்பாலான கிளினிக்குளை தி.மு.க எம்.எல்.ஏக்களின் தொகுதிகளான அருப்புக்கோட்டை, திருச்சுழி, ராஜபாளையத்திற்கு ஒதுக்கிவிட்டார். அவர் தி.மு.கவுடன் தற்போதும் ரகசிய உறவில் இருக்கிறார். ஒரே கட்சியல் இருந்து கொண்டு அரசின் திட்டங்களை முடக்கலாமா? என்னையே கொலைசெய்து விடுவேன் எனப் பேசி மிரட்டினார். அதற்கான ஆதாரத்தை தகுந்த நேரத்தில் வெளியிடுவேன். விருதுநகர் மாவட்டத்தில் அவர் செய்யும் அட்டூழிங்கள் அத்தனையும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியும். இன்னும் 4 மாதம்தான். அதன் பிறகு அ.தி.மு.க ஆட்சிதான் அமையும். ஆனால், மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் அவர் நின்றாலும் தோற்பது நிச்சயம்” என்றார்.

ராஜேந்திரபாலாஜி - ராஜவர்மன்

“தன் தொகுதியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை என்கிறார் ராஜவர்மன். அவரது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அவரை அழைக்க அவர் என்ன விருந்தாளியா? அவர் தொகுதியின் எம்.எல்.ஏ தானே? யார் யாரை அழைக்க வேண்டும்... முன்நின்று நிகழ்ச்சியை நடத்தவேண்டிய அவரே இப்படிப் பேசுவது சரியா? அரசு நிகழ்ச்சி நடந்தபோதெல்லாம் எங்கே போனார்? அவரை எம்.எல்.ஏ ஆக்கினதே அண்ணன் ராஜேந்திரபாலாஜிதான். ஆனால், பழசையெல்லாம் மறந்துவிட்டு இப்படிப் பேசுகிறார்” என்கிறது அமைச்சர் தரப்பு.

”விருதுநகரிலுள்ள 7 தொகுதிகளில் கடந்த தேர்தலில் சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 தொகுதிகளில்தான் அ.தி.மு.க வெற்றி பெற்றது. மீதமுள்ள 4 தொகுதியை தி.மு.கதான் கைப்பற்றியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளிப்படையாக மோதிக்கொண்டால், இது தி.மு.கவினருக்கே சாதகமாக அமையும். கடல் அலைகூட ஒய்ந்துவிடும், இவர்களது சண்டை ஓயாதோ?” எனப் புலம்புகிறார்கள் அ.தி.மு.கவினர்.



source https://www.vikatan.com/news/politics/mla-rajavarman-accusing-minister-rajendra-balaji-virudhunagar-admk-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக