Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

பள்ளியில் காய்கறித் தோட்டம், வீட்டுக்கு வீடு விதை... அசத்தும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை!

கொரோனா காலத்திலும் தான் பணிபுரியும் பள்ளியில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகளை மாணவர்களுக்கும் கிராம மக்களுக்கும் தலைமை ஆசிரியை ஒருவர் வழங்கி வருவது, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கும் எழுதியாம்பட்டியில் இயங்கி வருகிறது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கலா. மிகவும் வறட்சியான பகுதி இது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவு பொருள்கள் கிடைக்காமல் அல்லாடியிருக்கிறார்கள். அதனால், அந்தப் பகுதி மக்களுக்கு விஷமில்லாத காய்கறிகளை வழங்கவேண்டும் என்று கலா நினைத்திருக்கிறார்.

காய்கறித் தோட்டத்தில் கலா

அதற்காக, தனது பள்ளி வளாகத்தில் உள்ள 3 சென்ட் நிலத்தில் வாழை, தென்னை, முருங்கை, நெல்லி, பச்சை மிளகாய், கத்திரி, தக்காளி, எலுமிச்சை, பரங்கிக்காய், பீர்க்கங்காய், அவரை, புடலை, கொத்தவரை என்று காய்கறித் தோட்டத்தை அமைத்து, அதில் விளையும் காய்கறிகளை கிராம மக்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கி வருகிறார். அதோடு, வெள்ளை பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, தண்டுக்கீரை என்று கீரை வகைகளையும் பயிர் செய்திருக்கிறார். மேலும் தூதுவளை, துளசி, ஆடாதோடை, ஓமவள்ளி உள்ளிட்ட மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறார். இதன்மூலம், மாணவர்களுக்கு இயற்கை விவசாயம், விஷமில்லாத உணவு என்று பல நல்ல விசயங்களை கற்றுத்தருகிறார்.

Also Read: மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வு, கல்லூரியில் 50 சென்ட் தோட்டம்... கலக்கும் தாளாளர்!

மாணவர்களோடு சேர்ந்து அந்த காய்கறித் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், களை பறித்தல் என்று 'பிஸி'யாக இருந்த கலாவைச் சந்தித்துப் பேசினோம்.

"இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் வறுமை நிலையில் உள்ளவங்க. கொரோனா ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையா பாதிக்கப்பட்டுச்சு. அதனால, அவங்களுக்கு என்னால எதுவும் உதவமுடியுமானு யோசிச்சேன். அப்போதான், ஊர்ல உள்ள 150 குடும்பங்களுக்கு காய்கறித் தோட்டம் அமைக்க உதவணும்னு தோணுச்சு. அதற்காக, நாட்டுக்காய்கறி விதைகளை வாங்கி, எல்லா வீடுகளுக்கும் விநியோகிச்சேன்.

காய்கறிகள் வழங்கும் கலா

அவங்க ஆர்வமா தங்கள் வீடுகளில் உள்ள காலி இடங்களில் காய்கறித் தோட்டம் அமைச்சாங்க. கூடவே, பள்ளி வளாகத்தில் காலியாகக் கிடந்த 3 சென்ட் நிலத்தில் காய்கறித் தோட்டம் அமைக்க முடிவெடுத்தேன். மாணவர்களிடம் சொன்னப்ப, 'நாங்களும் உங்களுக்கு உதவுறோம் டீச்சர்'னு உற்சாகமாக சொன்னாங்க. அதனால, ஆர்வமா அந்த இடத்தில் காய்கறித் தோட்டம் அமைத்தோம். பள்ளி விடுமுறைன்னாலும், தினமும் ஆர்வமா வந்து இங்கே செயல்பட ஆரம்பிச்சேன்.

தினமும் 10க்கும் மேற்பட்ட மாணவர்களும் வந்து, என்னோடு சேர்ந்து தோட்டப் பணிகளைச் செய்ய ஆரம்பிச்சாங்க. இலைதழைகளை மட்டும் உரமா போட்டோம். வேறு எந்த ரசாயன உரங்களையும் போடலை. செடிகளில் மாட்டுச்சாணத்தை கரைச்சு தெளிச்சோம். இதனால பூச்சிகளும் அண்டலை. ஆடு, மாடுகளும் காய்கறிச் செடிகளை திங்கலை.

அதேபோல், மண்ணுக்குள் பைப்புகளை பதிச்சு, தேவைப்படும் இடங்களில் திறந்து, செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும் அமைப்பை உருவாக்கினோம். தினமும் நாங்க நல்லா தோட்டத்தை பராமரிச்சதால, எல்லா செடிகளும் நல்லா வளர்ந்துச்சு. ரெண்டு நாளைக்கு முன்னாடி காய்ப்புக்கு வந்தது.

கலா (தலைமை ஆசிரியை)

அதில் விளைந்த முதல் காய்கறிகளை 10 மாணவர்களுக்கும் மக்களுக்கும் கொடுத்தோம். தொடர்ந்து, இங்கு விளையும் காய்கறிகளை மக்களுக்கு வழங்குவோம். என் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஊர் மக்களுக்கும் நஞ்சில்லா காய்கறிகளை வழங்கி, நல்ல உணவைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் என் முயற்சியின் நோக்கம். அதோடு, மாணவர்களுக்கு விவசாயம், சத்தான உணவுகள், விஷமில்லாத காய்கறிகள்னு பல விசயங்களை புரியவைக்கிறேன். அதைத் தொடர்ந்து செஞ்சுகிட்டே இருப்பேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/women/karur-govt-school-headmaster-has-set-up-organic-garden-in-school

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக