'மாநில மொழித் தொலைக்காட்சிகளில், இனி சம்ஸ்கிருத மொழியிலும் செய்திகள் வாசிக்கப்படும்' என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராகத் தமிழக அரசியல் கட்சிகள் கொதித்தெழுந்திருக்கின்றன.
மாநில மொழிக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், மண்டலத் தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வகையில், தமிழ்நாட்டில் 'பொதிகை தொலைக்காட்சி'யில் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில், 'தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனங்கள் இனி சம்ஸ்கிருத மொழியில் தினந்தோறும் செய்திகளையும், வாரம்தோறும் செய்தித் தொகுப்பையும் ஒளிபரப்ப வேண்டும்' என்று மண்டலத் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருக்கிறது பிரசார்பாரதி நிறுவனத்தின் ஆளுகைக்குக் கீழ் செயல்பட்டு வரும் தூர்தர்ஷன் தலைமை அலுவலகம்.
'உலக வழக்கொழிந்த மொழியை மத்திய அரசு திணிப்பது ஏன்?... இது பண்பாட்டுப் படையெடுப்பு; ஒருமைப்பாட்டை பிளக்கும் கோடரி' என்று கண்டித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, `செத்துப்போன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு?' எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். 'சம்ஸ்கிருத செய்திகளைத் திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்' என பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் த.மு.எ.க.ச உள்ளிட்ட அமைப்புகளும் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த நிலையில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``ஒரே தேசம், ஒரே மொழி என்ற திட்டத்தை நோக்கி மத்திய அரசு பயணிக்கிறது. அந்த ஒரே மொழியான சம்ஸ்கிருதத்தை நோக்கி மக்களை நகரவைப்பதற்கு இடைக்கால ஏற்பாடாக - பயிற்சிமொழியாக இந்தி மொழியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை.... பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியே சொல்லியிருக்கிறார்.
இந்தி மொழியில், 'பானி' என்றால், தமிழில் 'தண்ணீர்' என்று அர்த்தம். ஆனால், இப்போது தொடர்வண்டி நிலையங்களில் ஆரம்பித்து நீர் சக்தித் துறை வரை எல்லாவற்றிலுமே 'பானி' என்ற இந்தியைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக 'ஜல்' என்ற சம்ஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் முதல்கட்டமாக வங்கிப் படிவம், தொடர்வண்டி முன்பதிவுச் சீட்டு, ஏடிஎம் மெஷினில் அச்சடிக்கப்படும் சீட்டுகள் உள்ளிட்டவற்றில் ஆங்கிலம், இந்தி மொழிகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதாவது, `மாநில மொழியை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்... வெளியே கொண்டுவராதீர்கள்’ என்கிறார்கள்.
பொதுவாக மொழித் திணிப்பு என்பதை, வெறுமனே மொழியின் ஆதிக்கமாக மட்டுமே பார்க்கமுடியாது... அது ஓர் இன ஆதிக்கம். ஏனெனில், இனம் இல்லாமல், மொழி என்பது இல்லை. இப்போது தமிழைப் புறக்கணிக்கிறார்கள் என்றால், தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆக, தமிழைப் புறக்கணித்துவிட்டு சம்ஸ்கிருத மேலாதிக்கத்தை - ஆரிய இனவாதத்தை திணிக்கிறார்கள். இதன் மூலம் மற்ற இனங்கள் எல்லாம், தங்கள் அடையாளத்தை இழந்துவிட்டு, ஆரியத்துக்கு அடிபணிந்து நிற்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க அரசு பாடுபட்டு வருகிறது.
இந்தியா முழுக்க 2011-ல் நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சில ஆயிரம் பிராமணர்கள் மட்டுமே சம்ஸ்கிருதம் மொழியைப் பேசிவருகிறார்கள். அப்படி இருக்கும்போது நாடு முழுக்க அனைத்து மண்டலத் தொலைக்காட்சிகளிலும் சம்ஸ்கிருத செய்தியை ஒளிபரப்ப வேண்டிய தேவை என்ன?... இப்படி சம்ஸ்கிருதத்தில் செய்தியை ஒளிபரப்பியே ஆகவேண்டும் என்ற கோரிக்கை, எப்போது, யாரால், எங்கு வைக்கப்பட்டது?... அப்படி சம்ஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பினால், அது எத்தனை பேருக்கு புரியும்?... கோயிலில் மனப்பாட முறையில் மந்திரம் சொல்லிவருகிற பிராமணருக்கே புரியாது என்பதுதானே உண்மை.
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் வாழ்ந்துவருகிற 'பிராமணர்கள்' மட்டும் குறிப்பிட்ட சாதியப் பெயரோடே வாழ்ந்துவருகிறார்கள் என்றால், அவர்களுக்கென்று இன வரலாறோ, மொழி வரலாறோ கிடையாது என்பதுதானே அதன் அர்த்தம். பிராமணர்களின் தாய் மொழி என்ன, தாயகம் என்ன?...அவர்களுக்கு அப்படி எதுவும் கிடையாது. எனவேதான் ஏனைய இனங்களை அழித்துவிட்டு வர்ணாசிரமத்தை நிலைநாட்டுகிற ஆரியத்துவாவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்கிறார்கள். அதற்கான சூழ்ச்சியாகத்தான் சம்ஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள். உண்மை என்னவென்றால், 'சம்ஸ்கிருதம் தானும் வாழாது; தன்னைச் சேர்ந்தவர்களையும் வாழவிடாது' என்பதுதான் வட இந்திய வரலாற்று உண்மை'' என்கிறார் காட்டமாக.
மொழி உரிமைக் களத்தில் முன்நிற்கும் அரசியல் செயல்பாட்டாளரும் தமிழ்த்தேசியருமான ஆழி.செந்தில்நாதன், இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது,``சம்ஸ்கிருதம் ஒரு பழமையான மொழி; அதை பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்யவேண்டும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அதையும்கூட, மற்ற மொழிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்போது சம்ஸ்கிருதத்தையும் எடுத்துக்கொள்ளலாம் என்றுதான் சொல்வோம். மற்றபடி 'சம்ஸ்கிருத மொழியில் செய்தி ஒளிபரப்புகிறோம்' என்ற மத்திய அரசின் முடிவை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில், சம்ஸ்கிருத மொழியில் செய்தியை ஒளிபரப்ப வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது, யார் இங்கே சம்ஸ்கிருதம் பேசிவருகிறார்கள்?... சம்ஸ்கிருத செய்தியைக் கேட்டு யாரால் புரிந்துகொள்ள முடியும்?
Also Read: `700 வருடம் இளைய மொழி; மறைமுக கள்ளத்தனம்'- நாடாளுமன்றத்தில் கொதித்த தமிழக எம்.பி-க்கள்!
இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றி கேள்வி கேட்டால், 'இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்று இந்தி. எனவே முக்கியத்துவம் தருகிறோம்' என்கிறார்கள். சரி... தமிழ் இன்னும் அந்த இடத்துக்கு வரவில்லை என்று நீங்கள் சொல்லுவதில்கூட லீகலாக ஓர் அர்த்தம் இருக்கிறது. ஆனால், சம்ஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பியாக வேண்டிய சட்ட அவசியம் என்ன இருக்கிறது?
'யாருக்காக இதைச்செய்ய நினைக்கிறீர்கள்...' என்று கேட்டால், 'விரும்பியவர்கள் கேட்டுவிட்டுப் போகிறார்கள்' என்றுகூட அவர்கள் பதில் சொல்லலாம். சம்ஸ்கிருதம் எந்தக் காலத்திலும் அன்றாடத் தொடர்புகளுக்கான மொழியாகவோ, பேச்சு மொழிகவோ இருந்தது கிடையாது. அப்படியிருக்கும்போது சம்ஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பி என்ன சாதிக்கப்போகிறீர்கள்?
கோயில் மற்றும் அரசவைகளில் பயன்படுத்தக்கூடிய மந்திர மொழி - பதிவு மொழியாகத்தான் அது இருந்து வந்திருக்கிறது. புரிகிறதோ புரியலையோ... ஒருவர் ஓதுவார், மற்றவர்கள் கேட்பார்கள் என்ற அளவில்தான் சம்ஸ்கிருத மொழி இருந்து வந்திருக்கிறது. எனவே, பண்பாட்டு ஆதிக்கம் என்ற நோக்கத்தைத் தவிர, இதில் வேறு எதுவும் இல்லையென்பதால், முழுமையாக இதை எதிர்க்கவேண்டியது அவசியம்.
ஒருபக்கம் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராமலே இருப்பது, மற்றொரு புறம் சம்ஸ்கிருதத்துக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பது என்ற இரட்டை நிலைப்பாட்டைத்தான் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. இது வெளிப்படையான கலாச்சார ஆதிக்கம், பண்பாட்டு படையெடுப்பு, இனவாத ஏகாதிபத்தியம்'' என்றார் அழுத்தமான வார்த்தைகளில்.
Also Read: ''நான் கொல்லப்பட வேண்டியவனா?" அவதூறுகளால் கலங்கும் வெதர்மேன்!
இதையடுத்து தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளரும் பேராசிரியருமான ஶ்ரீனிவாசனிடம், `சம்ஸ்கிருத செய்தி ஒளிப்புக்கான அவசியம் என்ன...' என்பது குறித்துக் கேட்டபோது, ''’சம்ஸ்கிருதம் செத்த மொழி' என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. இன்றைக்கும் இந்திய அட்டவணை மொழிகளில் சம்ஸ்கிருதமும் ஒன்று. எனவே, அந்த மொழியில் செய்தி ஒளிபரப்புச் செய்யலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்திருப்பதில் எந்தத் தவறும் இல்லை.
வேதம், இதிகாசம், புராணங்கள் என இந்தியக் கலாசாரத்தை உலகுக்கு எடுத்துச்சொல்கிற நிறைய விஷயங்கள் சம்ஸ்கிருத மொழியில் இருக்கின்றன. எனவே, அது இந்தியாவின் பொக்கிஷம். ஆயுர்வேதம் எனும் மருத்துவ முறை, சிற்ப சாஸ்திரம், கட்டிட சாஸ்திரங்கள் சம்ஸ்கிருத மொழியில் இருக்கின்றன.
உலகின் முதல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சுஸ்ருதர், சம்ஸ்கிருதத்தில்தான் எழுதியிருக்கிறார். 'லீலாவதி' எனும் கணித இலக்கியம் சம்ஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டுள்ளது. எனவே, சம்ஸ்கிருத மொழியைக் காப்பாற்றுவதும் அதைப் பரப்புவதும் பா.ஜ.க-வின் நோக்கம்தான். அதில் எந்தத் தவறும் இல்லை.
இயேசுநாதர் பேசிய ஹீப்ரு மொழி, கடந்த 2 ஆயிரம் வருடங்களாக வழக்கில் இல்லை. செத்தொழிந்து போய்விட்டது. ஆனாலும்கூட இஸ்ரேல் நாடு, அந்த மொழியைக் கைவிட்டுவிடவில்லை. மறுபடி அந்த மொழியை உருவாக்கி, பேசவைத்து, இன்றைக்கு இஸ்ரேலின் அலுவலக மொழியாகவே மாற்றிவிட்டது. ஒரு மொழி வழக்கொழிந்து போய்விட்டால், அதை மீட்டுருவாக்கம் செய்வதுதான் அரசாங்கத்தின் பணியே தவிர, 'செத்துப்போச்சு... செத்துப்போச்சு' என சொல்லி ஏன் கைவிட வேண்டும்?
Also Read: கடலூர் டு வேலூர்... 5 வழக்குகளில் ஆஜர்! - நீதிமன்றத்துக்கு ஆம்புலன்ஸில் வந்த ரௌடி ஜானி
கருணாநிதி, தான் எழுதிய 'குறளோவியத்தை ஏன் சம்ஸ்கிருத மொழிக்கு மொழி பெயர்த்தார்?' கி.ஆ.பெ விசுவநாதம் பேரன் கண்ணனிடம், 'குறளோவியத்தை சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கும்படி கருணாநிதியே கேட்டுக்கொண்டார்' என்று அந்தப் புத்தகத்தின் முன்னுரையிலேயே எழுதப்பட்டுள்ளது.
ஆக, தனது புத்தகம் சம்ஸ்கிருத மொழியிலும் வெளிவரவேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கே இருக்கிறபோது, 'சம்ஸ்கிருதத்தில் செய்தி வாசிக்க வேண்டும்' என்ற எண்ணம் பா.ஜ.க-வுக்கு இருக்காதா?'' என்றார் பதிலடியாக.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/doordarshan-news-broadcasting-in-sanskrit-irks-controversy-in-tn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக