Ad

செவ்வாய், 8 டிசம்பர், 2020

வங்கிக் கடன்களை ஏன் நம்மால் தவிர்க்க முடிவதில்லை? #LoanVenumaSir - புதிய தொடர்

கடந்த 100 ஆண்டுகளில் படாத கஷ்டங்களை எல்லாம் இப்போது நாம் அனுபவித்து வருகிறோம். கொரோனா தொற்று நோய் மட்டுமே இதற்குக் காரணமல்ல. இந்த நோயால் உலக அளவில் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்திருக்கிறது. இதனால் நிறுவனங்களின் விற்பனை குறைந்து, அதன் பாதிப்பு பணியாளர்கள் தலையில் வந்து விழுந்திருக்கிறது.

பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தந்துவந்த சம்பளத்தை இந்தக் கொரோனா காலத்தில் கணிசமாகக் குறைத்திருக்கின்றன. பல ஊழியர்கள் வேலை இல்லை என்று சொல்லி, வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார்கள். இப்படி எல்லாம் கஷ்ட காலம் வரும் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்காத ஊழியர்கள் இன்றைக்குக் காலத்தை ஓட்டவேண்டுமென, ஏற்கெனவே வாங்கி வைத்த நகை மற்றும் நிலத்தை விற்று வருகின்றனர். அதுவும் இல்லாதவர்கள் கடன் வாங்கித்தான் நிலைமையை சமாளித்து வருகிறார்கள்.

கடன் வாங்கிக்கிறீங்களா..?

கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுவனங்கள் கடன் வாங்குவது பெருமளவில் குறைந்திருக்கிறது. இதனால் வங்கிகளிடமும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடமும் எக்கச்சக்கமான பணம் கையில் இருக்கிறது. இந்தப் பணத்தை யாருக்காவது கடனாகத் தந்து வட்டி வருமானம் சம்பாதிக்க நினைக்கிறது. இதனால், கேட்டு வந்தவருக்கே கடன் இல்லை என்று சொன்ன காலம் போய், இப்போது மானாவாரியாக பலருக்கும் போன் போட்டு, ``கடன் வாங்கிக்கிறீங்களா சார்’’, ``லோன் வாங்கிக்கிறீங்களா சார்’’ என்று விரட்டி வருகிறார்கள். உங்களுக்குக் கடன் தேவையோ, இல்லையோ `உம்’ என்று ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும், அடுத்த நிமிடமே உங்கள் கணக்கில் பெருந்தொகை வந்து விழுந்துவிடுகிறது.

Savings

கடன் வரும் முன்னே, வட்டி வரும் பின்னே!

கடன் என்று வந்துவிட்டாலே வட்டி என்பது வராமல் போகாது. இன்றைய தேதியில் கடன் வாங்குபவர்களில் பலர் எவ்வளவு வட்டிக்குக் கடன் வாங்குகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளாமலே இருக்கிறார்கள். இதனால் கூடுதலான தொகையைக் கட்டிய பிறகும் கடனைக் கட்டிமுடிக்க முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள்.

இந்தப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு, கடன் பற்றிய அனைத்து விஷயங்களையும் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்வதுதான். கடன் வாங்க வேண்டும் என்றால் அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை வங்கிகளில் வாங்கலாமா அல்லது தனியார் வங்கிகளில் வாங்கலாமா, கடனுக்கான வட்டி எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது, ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் ஏன் மாறுபடுகிறது, கடன் என்று வரும்போது அதில் எத்தனை வகைகள் உள்ளன, ஒவ்வொரு வகை கடனுக்கும் ஒவ்வொரு விதமாகக் கடன் விகிதம் விதிக்கப்படுகிறதே, ஏன், கடனுக்கான அசலையும் வட்டியையும் சரியாகத் திரும்பக் கட்டாதபோது நமக்கு ஏற்படும் பாதிப்பு என்னென்ன, சிபில் ஸ்கோர் குளறுபடி என சமீபத்தில் அடிக்கடி செய்தித்தாளில் படிக்கிறோமே, இது எந்தளவுக்கு உண்மை என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் தெரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் புத்திசாலித்தனமாகக் கடன் வாங்கி சமாளிக்க முடியும்.

கடன் வாங்கினால் தப்பில்லை...

கடன் வாங்குவதைப் பலரும் தங்கள் தகுதிக்குக் குறைவான அல்லது கெளரவக் குறைச்சலான விஷயமாகப் பார்க்கிறார்கள். இது மிகத் தவறான அணுகுமுறை. கறை நல்லது மாதிரி கடன் நல்லது. 30% லாபம் தரும் ஒரு நல்ல தொழில் ஐடியாவை வைத்திருக்கிறார் ஒருவர். ஆனால், அவரிடம் சுத்தமாகப் பணம் இல்லை. ஒரு நிறுவனத்திடம் 16% வட்டிக்குக் கடன் வாங்கி தொழில் செய்கிறார். 30 சதவிகிதத்தில் 16% வட்டிக்குப் போனாலும் 14% அவருக்கு லாபமாகக் கிடைக்கும். இவர் கடனே வாங்கவில்லை என்றால், 14% லாபத்தை இவர் எப்படிச் சம்பாதிப்பார்?

ஆடிட்டர் தியாகராஜன்

இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினர் ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் என வீட்டு உபயோகப் பொருள்களையும், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என பல வசதிகளையும் அனுபவிக்கிறார்கள் என்றால் வங்கிகளும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் தரும் கடன்தான் காரணம். இந்தக் கடன் மட்டும் கிடைக்கவில்லை என்றால், இன்னும் பல நடுத்தர குடும்பத்தினர் இந்தப் பொருள்களை வாங்கி அனுபவித்திருக்கவே முடியாது.

நம் வாழ்க்கையின் முன்னேற்றத்தும், சில சமயங்களில் கஷ்டங்களும் வருவதற்குக் காரணமாக விளங்கும் இந்தக் கடன் பற்றி முழுமையாக எடுத்துச் சொல்லத்தான் `லோன் வேணுமா சார்?’ என்கிற இந்தத் தொடர். இந்தத் தொடரை நீங்கள் தொடர்ந்து படித்தால், கடன் தொடர்பான உங்கள் அனைத்து சந்தேகங்களும் தீரும். இனி வாழ்க்கையில் எந்தக் கடன் வாங்கலாம், எந்த இடத்தில் வாங்கலாம், எவ்வளவு வட்டி விகிதத்தில் வாங்கலாம், வாங்கிய கடனை எப்படி அடைக்கலாம் என்கிற அனைத்துக் கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை கிடைக்கும். அதன்மூலம் பல ஆயிரம் ரூபாயை நீங்கள் மிச்சப்படுத்த முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.

இனி வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்தத் தொடர் விகடன் இணையதளத்தில் வெளியாகும். தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இறுதியாக உங்களிடம் ஒரு சின்ன கேள்வி. பின்வரும் கேள்வியைப் படித்து, அதற்கான `க்ளிக்’ செய்யுங்கள்.



source https://www.vikatan.com/business/money/new-digital-series-to-understand-bank-loans-and-use-it-efficiently

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக