சென்னையில் புல்லட் பைக்குகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக திருடப்பட்டு வந்தன. அதுதொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. புல்லட் திருடர்கள், கறுப்பு நிற புல்லட் பைக்குளை குறி வைத்து திருடுவதும் போலீஸாருக்கு தெரியவந்தது. அதனால் புல்லட் திருட்டு குறித்து விசாரிக்க சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், மேற்பார்வையில் இணை கமிஷனர் சுதாகரின் தனிப்படை போலீஸ் எஸ்.ஐ-சுதாகர், தலைமைக் காவலர் சரவணகுமார் ஆகியோர் புல்லட் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர்.
திருடப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது புல்லட்களைத் திருடுபவர்கள், அதை எடுத்துச் சென்று குறிப்பிட்ட சில தூரத்தில் நிறுத்திவிட்டு செல்வது தெரியவந்தது. பின்னர், அந்தப் பைக்கை மீண்டும் எடுத்துச் சென்று இன்னொரு இடத்தில் நிறுத்துவதையும் போலீஸார் சிசிடிவி மூலம் கண்டறிந்தனர். சிசிடிவி மூலம் தங்களை போலீஸார் கண்டுபிடித்துக்கூடாது என்பதற்காக இந்த நடைமுறையை திருடர்கள் பின்பற்றி வந்தனர். அதைக் கண்டுபிடித்த போலீஸார், திருடர்களை சிசிடிவி மூலம் கண்காணித்தனர்.
போலீஸாரின் நீண்ட நெடிய தேடுதல் வேட்டைக்குப்பிறகு தஞ்சாவூர், மல்லிப்பட்டிணத்தைச் சேர்ந்த முகமது சஃபி என்பவரையும் அவரின் கூட்டாளியான கேரளாவைச் சேர்ந்த சிபியையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோதுதான் சென்னையில் புல்லட் பைக்குகளைத் திருடி தமிழகம் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் விற்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து திருடப்பட்ட பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆனால் புல்லட் திருட்டில் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் இருப்பதைக் கண்டறிந்த போலீஸார் ஓட்டுமொத்த டீம்மையும் பிடிக்க வியூகம் அமைத்தனர்.
முகமது சஃபியும் சிபியும் அளித்த தகவலின்படி அடுத்தடுத்த பைக் திருடர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில் திருடப்பட்ட புல்லட்களின் பாகங்களும் விற்கப்பட்ட தகவல் தனிப்படை போலீஸ் டீம்மைச் சேர்ந்த தலைமை காவலர் சரவணகுமாருக்கு கிடைத்தது. சென்னை புதுப்பேட்டையில்தான் திருட்டு பைக்கின் பாகங்கள் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு விற்பனை செய்த சுல்தான், இஸ்மாயில் ஆகியோரை போலீஸார் பிடித்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி புல்லட் இன்ஜின்களை 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் சோகன்குமார் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.
இதையடுத்து சோகன்குமாரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், புதுப்பேட்டையிலிருந்து புல்லட் இன்ஜின்களை வாங்கி அதைக் கொண்டு இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு குட்டிக் கார், ஹெலிகாப்டர் என ப்ராஜெக்ட் செய்து கொடுத்திருக்கிறார். அதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குட்டி கார், குட்டி ஹெலிகாப்டரை ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரைக்கும் விற்றிருக்கிறார் சோகன்குமார். அதன்மூலம் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால் ப்ராஜெக்ட் செய்யப்பட்ட காரும் ஹெலிகாப்டரும் திருட்டு பைக்கின் இன்ஜின் என்ற தகவல் மாணவர்களுக்குத் தெரியாது.
Also Read: சென்னை டு ஆந்திரா புல்லட் பயணம்! - ஐடி நிறுவன ஊழியர் கஞ்சா வியாபாரியாக மாறியது எப்படி?
சோகன்குமார், சென்னை கிழக்குக் கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சோகன்குமார், சினிமா படம் ஒன்றுக்கு பிரத்தேயகமாக கார் ஒன்றை திருட்டு புல்லட் இன்ஜின் மூலம் செய்து கொடுத்திருக்கிறார். அதையெல்லாம் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதற்கிடையில் புல்லட் திருட்டு வழக்கில் கைதான சுல்தான், இஸ்மாயில், பாஸ்கர் ஆகியோரிடமிருந்து 39 புல்லட் பைக்குள், 6 விலை உயர்ந்த பைக்குகள், ஒரு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். புல்லட் திருடர்கள் குறித்த தகவல்கள் புற்றீசல்கள் போல விசாரிக்க விசாரிக்க போலீஸாருக்கு கிடைத்து வருகின்றன. குறிப்பாக புதுப்பேட்டையில் திருட்டு புல்லட் பைக்குளின் பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-engineer-in-bullet-bike-theft-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக