``கரூர் தொகுதியில், அ.தி.மு.க-வினர் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்திருப்பதாக, செந்தில் பாலாஜி பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். ஆனால், கரூர் மாவட்டத்தில், தி.மு.க-வினர் திட்டமிட்டு ஒரே குடும்பத்திலுள்ளவர்களை மூன்று இடங்களில் வாக்காளர் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். அதே போன்று, அவர்கள்தான் பல இடங்களில் முறைகேடு செய்திருக்கிறார்கள்" என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாகக் குற்றம்சாட்டினார்.
Also Read: `பூத்துக்கு ஒன்று; அ.தி.மு.க-வினரிடம் 4 வாக்காளர் அட்டைகள்!’- பகீர் கிளப்பும் கரூர் தி.மு.க
தி.மு.க அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, `கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலி வாக்காளர்களைச் சேர்த்திருக்கிறார். அதற்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உடந்தை’ என்று அதிரடியாகக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, இது சம்பந்தமாக நீதிமன்றத்தையும் நாடவிருப்பதாக, செந்தில் பாலாஜி அதிரடியாகத் தெரிவித்துவருகிறார். இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, `கரூர் தொகுதியில் 30,000 பேரையும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 20,000 பேரையும் அ.தி.மு.க-வினர் முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்' என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இதுவரை, 6,000 பேர்தான் பெயர் சேர்க்க விண்ணப்பித்தே இருக்கிறார்கள். அதற்குள், எப்படி இவ்வளவு பேரை பட்டியலில் சேர்க்க முடியும்? அப்படி, வாக்காளர் பட்டியலில் 30,000 பேர் சேர்க்கப்பட்டதை செந்தில் பாலாஜி நிரூபிக்கத் தயாரா? கரூர் மாவட்டத்தில் இறந்த 18,000 பேர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளன. அவற்றில், இதுவரை 5,000 பேரின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் பெயரை நீக்க அதிகாரிகள் இறப்புச் சான்றிதழ் கேட்கிறார்கள். இறப்புச் சான்றிதழ் பெற்று வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க வேண்டுமென்றால், நிச்சயம் 13,000 பேரின் பெயரை நீக்க முடியாது. எனவே, அதிகாரிகள் சரியாக விசாரித்து, படிவத்தை ஏற்று, பெயர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க-வின் கோரிக்கை.
நடக்காத விஷயத்தைப் பற்றி, செந்தில் பாலாஜி இட்டுக்கட்டிப் பேசி, அவதூறு பரப்புகிறார். போக்குவரத்துக்கான ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ் கருவிகள் வாங்கியதில் அ.தி.மு.க அரசு ஊழல் செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தி.மு.க ஆட்சியில், கே.என்.நேரு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது ஊழல் பட்டியலை அன்று அ.தி.மு.க-வில் இருந்த செந்தில் பாலாஜி ஜெயலலிதா முன்பு சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினார். அப்போது ஊழல் வழக்கில் சிக்கிய கே.என்.நேரு, இன்றைக்கு அ.தி.மு.க அரசில் ஊழல் நடந்துவிட்டதுபோல் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அன்றைக்கு கே.என்.நேரு மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் செந்தில் பாலாஜி பதில் சொல்லட்டும். ரூ. 23 கோடி டெண்டரை, ரூ. 900 கோடி என்று ஸ்டாலின் தவறக அறிக்கை கொடுத்திருக்கிறார். 'அதை ஸ்டாலின் நிரூபிக்கத் தயாரா?' என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு இன்னமும் ஸ்டாலின் பதில் சொல்லவில்லை" என்று கூறினார்.
source https://www.vikatan.com/news/politics/mrvijayabaskar-interview-against-mkstalin-and-senthil-balaji
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக