Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

`சுயசரிதை திட்டம்... உண்மைகள் வெளிவரும்!’ - முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ்

``தமிழகத்தில் 42 சதவிகிதமுள்ள சமுதாயங்கள் அரசியல் தொடர்பே இல்லாமல் உள்ளனர். அவர்கள் முன்னேற வழிகாட்டவே நான் சமூகப் பணி செய்ய வந்தேன்'' என்று எம்.ஆர்.பாசறை என்ற அமைப்பின் நிறுவனரும், முன்னாள் தலைமை செயலாளருமான ராமமோகன ராவ் பேசியுள்ளார்.

திருச்செந்தூர் நிகழ்ச்சி

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய அணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ராமமோகன ராவ்., தமிழகத்திலுள்ள சிறு கட்சிகள், சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைக்க பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

கருணாநிதி, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலங்களில் கோட்டையில் செல்வாக்கான அதிகாரியாக திகழ்ந்த ராமமோகன ராவ், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தலைமைச் செயலாளராக பணியாற்றினார். பணியில் இருந்த காலத்தில் அவரை பற்றி பல சர்ச்சைகள் எழுந்தது.

ராமமோகன ராவ்

கடந்த 2016-ல் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது சேகர்ரெட்டி அலுவலகங்களில் ஐ.டி ரெய்டு நடத்திய சமயத்தில், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீடு மட்டுமில்லாமல் தலைமைச்செயலகத்திலுள்ள அவர் அலுவலகத்திலும், ரெய்டு நடந்தது. அதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சம்பவங்கள் மக்கள் அறிந்ததே.

இந்த நிலையில் சில காலம் அமைதியாக இருந்த ராமமோகன ராவ், கடந்த ஆண்டு முதல் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இதற்கு அச்சாரமாக கடந்தாண்டு மதுரையில் நடந்த திருமலை நாயக்கர் விழாவில் அரசியல் கட்சிகளே அதிரும் வகையில் ஏகப்பட்ட வாகனங்களில் மக்களை அழைத்து வந்து கலந்துகொண்டார். அப்போது, 'விரைவில் சமுதாய மக்களுக்காக பொது வாழ்க்கையில் ஈடுபடுவேன்' என்றார்.

ராமமோகன ராவ்

அதைத்தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகளுடன் தொடர்ந்து பேசி வரும் அவர், அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து தனி அணி அமைக்க திட்டமிட்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் நடந்த அந்தணர் முன்னேற்றக் கழக மாநாட்டில் கலந்து கொண்டவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''வரும் சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் அந்தணர்களுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கு இம்மாநாடு அடித்தளமாக அமையும். தமிழகத்தில் உள்ள 30 லட்சம் அந்தணர்களுக்கு நலவாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

ராமமோகன ராவ்

ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அந்தணர்களுக்கு நலவாரியம் செயல்படுகிறது. அதேபோல தமிழகத்திலும் அமைக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய அந்தணர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்றவர்,

''என்னுடைய அமைப்பு சமுதாய இயக்கம்தான். அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட, பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களுக்கு குரல் கொடுப்போம். அந்தணர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கிற 8 கோடி மக்களுக்கும் இந்த இயக்கம் பாடுபடும்.. எங்களது இயக்கம் அரசியல் இயக்கமாக எப்போது மாறும் என்று இப்போது கூற முடியாது.

ராமமோகன ராவ்

தற்போது எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில் 42 சமுதாயங்கள் பிரதிநிதித்துவம் பெறாமல் உள்ளனர். அவர்களுக்காக தொடர்ந்து எங்களது அமைப்பு பாடுபடும். எங்களுக்கு 10 சமுதாயத்தினர் தற்போது ஆதரவு கொடுத்துள்ளனர். நாங்கள் ஆன்மிகம் கலந்த சமுதாய இயக்கமாக செயல்படுவோம்” என்றார்.

அதைத்தொடர்ந்து கடந்த 20-ம் தேதி மதுரையில் நடந்த 'இந்து ஜனநாயக முன்னணி' என்ற அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர், செய்தியாளர்களிடம் பேசும்போது ''ஊழலுக்கு எதிரான அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தில் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. ஆனால், செயல்படுத்துவது இல்லை. லஞ்சம், ஊழல் இல்லாத அரசால்தான் நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும்.

திருச்செந்தூர் நிகழ்ச்சி

தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். சுயசரிதை எழுத வேண்டுமென்ற எண்ணம் உள்ளது, அதில் பல உண்மைகள் வெளிவரும், ஆனால், அது பலருக்கு பிரச்னைகளை உருவாக்கும்'' என்றவர், `இதை நகைச்சுவையாகத்தான் சொன்னேன்’ எனக் கூறியது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரம் ராமமோகன ராவை ஏதாவது ஒரு கட்சி மேடையில் கூட்டணித் தலைவராக விரைவில் காணலாம் என்கிறார்கள் சிலர்.



source https://www.vikatan.com/news/politics/rammohana-rao-says-he-may-write-auto-biography

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக