புரெவிப் புயல்காரணமாக கடந்த 48 மணிநேரமாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்துவருகிறது. குறிப்பாக நேற்று முதல் கடலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் புயல்காற்றோடு மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சிதம்பரத்தில் அதிகபட்சமாக 33 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மழை நீர் புகுந்து குளம் போல் காட்சி தருகிறது. சிவகங்கை தீர்த்தமும் நீர் நிரம்பிக் காணப்படுகிறது. கோயில் பிரகாரங்களில் நீர் மூன்றடிக்கும் மேல் நீர் நிற்கிறது.
இதுதொடர்பாக சமூக ஊடகங்களின் வழியாக செய்திகளும் புகைப்படங்களும் பரவ, பக்தர்கள் பலரும் தங்களின் கவலையைத் தெரிவித்தனர். இது குறித்து சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சேர்ந்த மூத்த தீட்சிதர் உமாநாத் அவர்களை சந்தித்துப் பேசினோம்.
“சைவ சமயத்தைப் பொறுத்த அளவில் கோயில் என்றால் அது தில்லையையே குறிக்கும். அப்பேற்பட்ட சைவத்தின் தலைமையகமாகத்திகழும் இந்தத் திருக்கோயிலில் புயல், மழை என எதுவந்தாலும் பஞ்சபுராணம் பாடி ஆறுகால பூஜை நடைபெறுவதை நிறுத்தியதேயில்லை. எனக்கு வயது 82 ஆகிறது. இதுவரை என் வாழ்வில் இதுபோன்று 3 முறை வெள்ளம் கோயிலுக்குள் சூழ்ந்துள்ளது. ஒருமுறைகூட இங்கு இறைவனுக்கு ஒரு கால பூஜைகூடத் தடைப்பட்டதில்லை. அதுபோலவே இன்றும் பூஜைகள் எந்தத் தடையும் இன்றி நடைபெற்றுவருகின்றன.
பொதுவாக இந்த பிரமாண்ட ஆலயத்துக்கு வெளியே இருந்து வெள்ள நீர் உள்ளே வர வாய்ப்பில்லை. அதேபோன்று உள்ளே தேங்கும் நீரானது வெளியேற அந்தக் காலத்திலேயே நல்ல வடிகால் வசதிகள் செய்து இருக்கிறார்கள். இங்கிருந்து வெள்ள நீர், திருப்பாற்கடல், சிவப்பிரியா குளம், தில்லை அம்மன் கோயில் குளம் ஆகிய குளங்களுக்குச் செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பாதையில் பராமரிப்பின்றி ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். அதுவே வெள்ள நீர் தேங்கக் காரணமாகியிருக்கும். இதுகுறித்து சிதம்பரம் நகராட்சி ஆணையருக்குத் தகவல் தெரிவித்தோம். உடனடியாக அதைச் சரிசெய்ய உத்தரவிட்டுள்ளார். எனவே தேங்கி நிற்கும் வெள்ள நீர் முழுவதும் விரைந்து இன்று மாலையோ நாளைக்குள்ளோ வடிந்துவிடும் ” என்று நம்பிக்க்ஃஇ தெரிவித்தார்.
இதற்கிடையே இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/spiritual/temples/rain-water-logging-in-chidambaram-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக