Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

`குடிமராமத்து நாயகன்' முதல் `ஞானப்பழம் தந்த பழனிசுவாமி' வரை -முதல்வரை வெட்கப்படவைக்கும் அமைச்சர்கள்!

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே எதையாவது உளறிக் கொட்டி மக்களை என்டர்டெயின் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் அரசியல் தலைவர்கள். அதிலும் குறிப்பாகத் தமிழக அமைச்சர்கள் சிலர் உளறிக் கொட்டுவதில் டாக்டர் பட்டமே பெற்றிருக்கிறார்கள் எனலாம். உளறிக் கொட்டுவது ஒரு பக்கமிருந்தாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வரையே வெட்கம் கொள்ள வைக்கும் அளவுக்கு, அவரை ஏகத்துக்குப் புகழ்ந்து தள்ளிப் பேசுவதையும் தமிழக அமைச்சர்கள் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
மசாலா படங்களில் ஹீரோவுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் எப்போதுமே சற்று தூக்கலாக இருக்கும். அதைப்போலவே தமிழக அமைச்சர்கள் முதல்வருக்குக் கொடுக்கும் பில்டப்புகள் பல நேரங்களில், `அவரைப் பாராட்டுகிறார்களா... ஓட்டுகிறார்களா..?' என்று சந்தேகத்தைக் கிளப்பும் அளவுக்கு ஓவராகவே இருந்துள்ளது. அப்படியான சில பில்டப்புகளின் தொகுப்புதான் இந்தக் கட்டுரை.

செல்லூர் ராஜூ

விஞ்ஞானிகளே அசந்துபோகும் அளவுக்கு திங் பண்ணக்கூடியவர் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. சட்டமன்றக் கூட்டத் தொடரில், அப்படி திங் செய்து முதல்வர் குறித்து சிலவற்றைப் பேசினார் அவர்.

மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த பிறகு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ``மறைந்த முதல்வர் ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், முதல்வர் எடப்பாடி 16 அடி பாயக் கூடியவர்'' என்று பேசினார். இது அ.தி.மு.க-வினரையே பெருங் கோபத்துக்கு உள்ளாக்கியது.

மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், ``எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தும் முன் ஜெயலலிதா 9 முறை யோசித்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பார்'' என்று பேசினார் அமைச்சர்.

செல்லூர் ராஜு

Also Read: தூத்துக்குடியில் வளையாத 144; சேலத்தில் வளைந்தது எப்படி? - அரசியல்வாதிகளின் கொரோனா அலப்பறைகள்!

கொரோனா தமிழகத்தில் பரவ ஆரம்பித்த காலம் முதலே, அதனை அசால்ட்டாக டீல் செய்து வந்தவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது `முதல்வருக்கு கொரோனா வராது; வந்தாலும் உடனே சரியாகிவிடும்' என்று அடித்துப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

சி. விஜயபாஸ்கர்

மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அதற்கான ஆணையை வழங்கும் விழாவில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பில்டப்புக்கு மேல் பில்டப் கொடுத்து முதல்வரையே வெட்கப்பட வைத்தார். ``ஆர்ப்பரித்து எழும் கடலலைகளுக்கு நடுவே தத்தளித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்குக் கலங்கரை விளக்கமாக முதல்வர் திகழ்கிறார். வரம் தரும், வாழ்வு தரும் சாமியாக முதல்வர் இருக்கிறார். கலந்தாய்வு சேர்க்கை ஆணைகளையும் ஸ்டெதஸ்கோப்பையும் வழங்க உள்ளார். ஸ்டெதஸ்கோப்பில் லப் டப் ஒலியோடு அவரின் புகழும் வான் உள்ளவரை ஒலிக்கும்'' என்று பேசினார். மேலும்...

மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``மருத்துவர்கள் நாடி பிடித்து நோய்களைக் கண்டறிவது போல மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர் முதல்வர். இந்தியாவின் `சூப்பர் ஃபாஸ்ட்' முதல்வராக எடப்பாடி திகழ்கிறார்'' என்றார்.

விஜயபாஸ்கர் - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள 9 மருத்துவக் கல்லூரிகள் குறித்து சட்டமன்றத்தில் பேசுகையில், ``ஒரே பந்தில் 9 ரன் எடுத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி'' என அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதை வரவேற்கும் விதமாக அ.தி.மு.க-வினர் பெஞ்சுகளை தட்டி பெரும் சத்தம் எழுப்பினர்.

ராஜேந்திர பாலாஜி

அதிரடியாகப் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிவர் புயலின் போது தமிழக முதல்வர் சிறப்பாகச் செயலாற்றினார் என்று பாராட்டிப் பேசும்போது, ``முதல்வர் பழனிசாமி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், நிவர் புயலால் தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வரலாறு தற்போது திரும்பியிருக்கிறது'' என்று பேசி எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களை வெறுப்பேற்றினார்.

அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர், ``எடப்பாடி பழனிசாமி ஒரு ராஜ தந்திரி. அவரைத் தவிர வேறு யாரையாவது முதல்வர் ஆக்கியிருந்தால் இந்த ஆட்சி 3 மாதத்தில் கவிழ்ந்திருக்கும்'' என்று பேசி ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் கோபத்துக்கு உள்ளானார்.

ராஜேந்திர பாலாஜி

Also Read: ``ஒபாமா வந்தாலும் சரி ட்ரம்பே வந்தாலும் சரி..." - ராஜேந்திரபாலாஜி உளறல்கள் பராக்! #VikatanPhotocards

இதற்கெல்லாம் மேலாக, அரசு விழா ஒன்றில், அடுக்கு மொழியில் பேசி எடப்பாடியைப் புகழ்ந்தார் ராஜேந்திர பாலாஜி. ``எங்கள் ஆருயிர் அண்ணன், தமிழக பெருநிலத்தின் மன்னன்... விவசாயிகளின் உற்ற தோழன்... குடிமராமத்து நாயகன்... சிவகாசி பட்டாசுத் தொழிலின் பாதுகாவலன்... நெசவாளர்களின் நேசமகன்... மீனவர்களின் பாசமகன்... தொழிலாளி, பாட்டாளி, உழைப்பாளி, படைப்பாளி... அத்தனை மக்களுக்கும் எளியவர், வலியவர், எல்லோருக்கும் இனியவர்... எங்கள் அண்ணன் தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களை வணங்குகின்றேன்'' என்று சொல்லி தனது உரையை ஆரம்பித்தார்.

எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீர் வளத் திட்டங்களைச் சுட்டிக் காட்டி பேசியபோது, ``தற்கால கரிகாலச் சோழனாகத் திகழ்கிறார் முதல்வர்'' என்று எடப்பாடி பழனிசாமிக்குப் புகழாரம் சூட்டினார்.

வேலுமணி

Also Read: அமைச்சர் வேலுமணியின் ரூ.200 கோடி பங்களா... வைரலாகும் வீடியோ! - உண்மை என்ன? #VikatanFactCheck

ஆர்.பி.உதயகுமார்

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கிய விஷயத்தில், முதல்வரை ஓரிரு முறை புகழ்ந்து பேசியிருந்தார் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ``அரியர் மாணவர்கள் தமிழக முதல்வருக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். 20-லட்சம் மாணவர்களின் காவல் தெய்வமாகத் தமிழக முதல்வர் திகழ்ந்து வருகிறார்'' என்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

``எளிய முதல்வர் என கூகுளில் தேடிப் பார்த்தால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர்தான் வரும்'' என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு விழாவில் பேசும்போது கூறியிருந்தார்.

அமைச்சர் சொன்னதை நம்பி `simplest CM of India' என்று கூகுள் தேடலில் தட்டிப் பார்த்தோம். திரிபுராவின் முன்னாள் முதல்வர் மாணிக் சார்க்காரின் பெயர்தான் வருகிறது. தமிழிலும் `இந்தியாவின் எளிமையான முதல்வர்' என்று தேடல் மேற்கொண்டால் மாணிக் சார்க்காரைத்தான் கூகுள் காட்டுகிறது அமைச்சரே!
ஆர்.பி. உதயகுமார்

ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இடையே மோதல் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியான சமயத்தில், ``ராமன் லட்சுமணனுக்கு இருக்கும் புரிதல் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இருக்கிறது'' என்றும் ``முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மருது சகோதரர்கள்போல எங்களை வழிநடத்தி வருகிறார்கள்'' என்றும் பேசியிருந்தார் ஆர்.பி.உதயகுமார்.

கே.சி.கருப்பண்ணன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எளிமையை விவரிக்கும் பொருட்டு பேசிய அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ``இரண்டே நிமிடத்தில் எந்த ஒரு முதலமைச்சரையும் இந்தியாவிலேயே பார்க்க முடியாது. ஆனால், அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்திக்க ஒரு துண்டுச்சீட்டைக் கொடுத்து அனுப்பினால் போதும், அடுத்த இரண்டே நிமிடத்தில் அவரைச் சந்தித்துப் பேசலாம். ஒரு சின்னக்குழந்தை முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றால்கூட, என்ன வேண்டுமெனக் கேட்டு சந்தோஷமாக அனுப்பிவைக்கிறார்'' என்று பேசினார்.

அமைச்சர்கள் கருப்பண்ணன், தங்கமணி

Also Read: ``மோடிக்கு இரட்டை இலைச் சின்னத்துல ஓட்டுப் போடுங்க!'' - 2019-ன் டாப் அரசியல் உளறல்கள்

தங்கமணி

எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு திரும்பிய சமயத்தில். `நமது அம்மா' இதழில் அமைச்சர்கள் பலரும் பலவகையான விளம்பரங்களை வெளியிட்டனர். அதில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ‘புரட்சித் தலைவியின் வாரிசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ என விளம்பரம் கொடுத்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

அமைச்சர்களை மிஞ்சிய விளம்பரம்!

என்னதான் அமைச்சர்கள், முதல்வரைப் புகழ்ந்து தள்ளினாலும், தமிழக செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரப் படத்தை மிஞ்ச முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி

``அர்ச்சனை என் பேருக்கு இல்ல... சாமி பேருக்கு'' எனப் பெண் ஒருவர் கூற ``எந்த சாமிக்குமா?'' என அர்ச்சகர் கேட்க, அதற்கு ``நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான்'' என்று அந்தப் பெண் பதில் சொல்ல, தமிழக திரையரங்குள் அதிர்ந்ததை மறக்க முடியுமா?!

இந்தப் பட்டியலில், முதல்வருக்கு அமைச்சர்கள் புகழாரம் சூட்டிய நிகழ்வுகள் ஏதும் விடுபட்டிருந்தால் கமென்ட்டில் சொல்லுங்க மக்களே!


source https://www.vikatan.com/oddities/miscellaneous/buildups-given-by-tamilnadu-ministers-to-cm-edappadi-palanisamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக