Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

உறுதியான திட்டத்துடன் மோடி அரசு வந்தால் பேச்சுவார்த்தை... விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா?

விவசாயிகளின் `டெல்லி சலோ’ போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்துகொண்டிருக்கிறது. டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் நான்கு வாரங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்

மகாராஷ்டிராவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாசிக் நகரிலிருந்து மும்பையை நோக்கிப் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நடைப்பயணம் சென்றனர். இந்திய விவசாயிகளின் போராட்ட வரலாற்றில் அது முக்கிய இடம்பிடித்தது. அந்த விவசாயிகள் தற்போது அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அசோக் தாவாலே தலைமையில் டெல்லியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல மாநிலங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். அப்போது அவர், `டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இதுவரை நாடு கண்டிராத ஒன்று. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தவில்லை. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.

பினராயி விஜயன்

வேளாண் சட்டங்கள் கேரளாவைக் கடுமையாக பாதிக்கும். நாட்டின் எந்தப் பகுதியிலாவது வேளாண் விளைபொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்படுமானால், அதனால் முதலில் பாதிக்கப்படும் மாநிலம் கேரளாதான். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க இயலாமல் போனது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்டதால், கேரளாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெறும். மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டம் என்பது ஒரு பிராந்திய அளவிலான போராட்டமாகவோ, குறிப்பிட்ட ஓர் இடத்தைச் சார்ந்த போராட்டமாகவோ இருந்துவிடக் கூடாது. இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவலாக நடைபெற வேண்டும்’ என்றார் பினராயி விஜயன்.

நான்கு வாரங்களாகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுவரை ஐந்து கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. காரணம், புதிதாகக் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாய சங்கங்கள் உறுதியாக இருக்கின்றன. இந்தநிலையில், `விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன’, `விவசாயிகளின் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவிட்டார்கள்’, `விவசாயிகளின் போராட்டத்துக்கு சீனாவும் பாகிஸ்தானும்தான் காரணம்’ என்றெல்லாம் பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்களும் பா.ஜ.க தலைவர்களும் பேசிவந்தனர்.

ஆனாலும், இந்தப் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் நிறைவடையப்போகிறது என்கிற சூழலில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அழைப்பு விடுத்துவருகிறது. தற்போது, மூன்று வேளாண் சட்டங்களில் எந்தெந்தப் பகுதிகளை நீக்க வேண்டும், என்னென்ன அம்சங்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து விவசாயிகள் தெரிவிக்கலாம் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், மத்திய அரசு உறுதியான திட்டத்துடன் வந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாய சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன.

விவசாயிகள் போராட்டம்

உ.பி., ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் டெல்லிப் போராட்டத்தில் கலந்திருக்கிறார்கள் என்றாலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளே அதில் பெருமளவில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தநிலையில், போராட்டத்தைக் கைவிடுமாறு விவசாயிகளுக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவரும் பிரதமர் மோடி, டெல்லியிலுள்ள சீக்கியக் கோயிலான ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்குக் கடந்த 20-ம் தேதி திடீரென்று சென்று வழிபட்டார். சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர் நினைவுதினம் கடந்த 19-ம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில், மறுநாள் பிரதமர் மோடி அங்கு சென்றார்.

அது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், `வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா ரகப் கஞ்ச் சாகிப்புக்கு சென்று பிரார்த்தனை செய்தேன். அங்குதான் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் புனித உடல் தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கானவர்களைப்போலவே, நானும் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் தயவால் ஆழமாக ஈர்க்கப்பட்டேன். ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜி-யின் 400-வது பிரகாஷ் பர்வின் சிறப்பு நிகழ்வை நமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொண்டாடக் கிடைத்திருக்கும் வாய்ப்பு அவரது சிறப்புமிக்க கருணையே ஆகும்.

நமக்கு இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வரலாற்றுரீதியான சந்தர்ப்பத்தில் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் கொள்கைகளைக் கொண்டாடுவோம்’ என்று குறிப்பிட்டார். இது, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆளும் தரப்பு நினைத்தது. ஆனால், அப்படி எந்தத் தாக்கத்தையும் அது ஏற்படுத்தவில்லை.

மோடி

அடுத்ததாக மற்றொரு முயற்சியை பிரதமர் முன்னெடுக்கப்போகிறார். டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவரும் சூழலில், சுமார் ஒன்பது கோடி விவசாயிகளிடம் காணொலியில் பிரதமர் மோடி பேசப்போகிறார் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 25-ம் தேதி விவசாயிகளிடம் காணொலியில் பேசவிருக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடியை (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) வழங்கவிருக்கிறார்.

கடந்த 18-ம் தேதி மத்தியப் பிரதேச விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் பேசினார். அப்போது, மறைந்த பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி வழங்குவேன் என்றும், வேளாண் பிரச்னைகள் குறித்து விவசாயிகளுடன் உரையாடுவேன் என்றும் பிரதமர் கூறினார். அதன்படி, வேளாண் சட்டங்கள் குறித்தும், விவசாயிகளின் போராட்டம் குறித்தும் பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: வங்கத்தை வளைக்கக் களமிறங்கிய அமித் ஷா... குடும்பங்களைப் பிரிக்கும் கட்சி அரசியல்!

நீதிமன்றத்தின் மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வேலைகளும் ஒருபுறம் நடைபெற்றுவருகின்றன. அண்மையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்தப் போராட்டத்துக்கு தீர்வுகாணும் வகையில், பாகுபாடற்ற சுதந்திரமான குழு ஒன்றை அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆலோசித்துவருகிறது’ என்று கூறியது.

விவசாயிகள் போராட்டம்

தற்போது, உறுதியான திட்டத்துடன் மத்திய அரசு வந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று விவசாய சங்கங்கள் கூறியிருக்கின்றன. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், `சட்டத் திருத்தம் என்பதை ஏற்கெனவே நிராகரித்துவிட்டோம். எனவே, சட்டத்திருத்தம் என்ற அர்த்தமற்ற பேச்சைத் தொடர்ந்து முன்வைக்க வேண்டாம் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். உறுதியான, எழுத்துபூர்வமான திட்டத்துடன் மத்திய அரசு வந்தால், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்’ என்று கூறியிருக்கிறார்.

விவசாயிகள் எதிர்பார்க்கும் வகையில் உறுதியான திட்டத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு வருமா என்பது பிரதமர் மோடியின் நாளைய காணொலி உரையில் தெரியும் என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-farmers-protest-coming-to-an-end

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக